Header Ads



முஸ்லிம் அமைச்சர்களின் பதவிதுறப்பு, 10 அம்சக் கோரிக்கையை பகிரங்கமாக்க தயங்குவது ஏன்..?

இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை.

இந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அந்த கருத்துகள் சிலவற்றை பிபிசி தமிழ் இங்கு பதிவு செய்கிறது.

"முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு கூட்டாக பதவி விலகியது வரவேற்கத்தக்க விடயம் என்றாலும், அவர்கள் இந்த பதவி விலகலின்போது முன்வைத்த நிபந்தனைகளை இன்னும் விசாலப்படுத்தியிருக்கலாம்," என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில்.

"முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையினை ஒரு மாத காலத்தினுள் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையினை முன்வைத்தே, முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்."

"இருந்தபோதும், இதனைத் தாண்டிய ஒரு தந்திரோபாயத்தினை அவர்கள் கையாண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது".

"உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி குறித்து கண்டறியப்பட வேண்டும். அது பற்றி அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்கிற உண்மை கண்டறியப்பட வேண்டும்" என்கிற நிபந்தனையொன்றினையும் முஸ்லிம் அமைச்சர்கள் முன்வைத்திருக்க வேண்டும்."

"அதனூடாக, இலங்கை முஸ்லிம்களுக்கும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்ற விடயம் துல்லியமான முறையில் வெளிக்கொண்டு வருவதற்காக வாய்ப்பு இருக்கின்றது."

"அது மாத்திரமன்றி, பயங்கரவாதத் தாக்குதல்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் பதவி விலகிய இரண்டு முஸ்லிம் ஆளுநர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவை பற்றிய தகவல்களையும், மேலே சொன்ன அறிக்கையினூடாக வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன."

"தங்களைப் பற்றிய விசாரணை அறிக்கையுடன், தாக்குதல் தொடர்பான முழு மொத்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்திருப்பார்களாக இருந்தால், இவர்களின் பதவி விலகல் மிகச் சிறந்ததொரு தந்திரோபாயமாகவும், நல்ல விளைவுகளை ஏற்படுத்தத்தக்கதாவும் இருந்திருக்கும்," என்று பாஸில் விவரித்தார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான எம்.எம். பஹீஜ், "முஸ்லிம் சமூகத்தை தமது பகடைக் காய்களாக இன்னுமொரு சமூகமும், அரசியல் இயக்கமும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காவும், முஸ்லிம் சமூகத்தின் உயிர்கள், உடமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினைக் கவனத்திற் கொண்டும், முஸ்லிம் அமைச்சர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளது வரவேற்கத்தக்க விடயம்," என்றார்.

மேலும், இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றார் என்கிற செய்தியை வெளிநாடுகளுக்கும், விசேடமாக முஸ்லிம் நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் எற்றி வைப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த பதவி விலகல் அமைந்திருக்கின்றது என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

"இதேவேளை, தங்களைக் காரணம் காட்டி தங்கள் சமூகம் அடிபடுவதை தாங்கள் விரும்பவில்லை என்பதற்காகவும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும், ஏனைய அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு விட்டுக் கொடுக்காமல், அரசாங்கத்தையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொண்டு இந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்."

"முஸ்லிம் அமைச்சர்கள் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு - காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாகும்," எனவும் பஹீஜ் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கர்; இந்த கூட்டு பதவி விலகல் இலங்கையின் வரலாற்று நிகழ்வு என்கிறார். இதற்கு முன்னர் இவ்வாறு நடைபெற்றதில்லை என்தால், அவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த கூட்டு பதவி விலகல் 04 வகையில் முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலாவது, முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த அமைச்சர்கள் தமது குற்றங்களை மறைப்பதற்கு பதவிகளில் இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கூறப்பட்டது. எனவே, இவ்வாறு இவர்கள் பதவி விலகியதால் சுயாதீன விசாரணையொன்றுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீது பாரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. முஸ்லிம்களின் உயிர்கள் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. ஆனால், வன்முறையாளர்களை அடக்குவதற்கு சட்டமும் ஒழுங்கும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதேவேளை, அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவற்றினைக் கண்டிக்கும் வகையிலும், அமைச்சர்களின் கூட்டு பதவி விலகல் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

மூன்றாவது, இவ்வாறு அமைச்சர்கள் பதவி விலகாமல் விட்டிருந்தால், ஒவ்வொரு அமைச்சருக்கு எதிராகவும் தனித்தனியாக பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலைமை உருவாகியிருக்கும். அவர்களை பதவி விலகுமாறு உண்ணா விரதங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திக் கொண்டேயிருந்திருப்பார்கள். இதன் மூலம் முஸ்லிம் அரசியலை துச்சமாக மதித்து, அதனை அழிக்கும் செயற்பாடுகளைச் செய்திருப்பார்கள். எனவே, அமைச்சர்கள் எல்லோரும் மொத்தமாக பதவி விலகியது , மேற்படி செயற்பாடுகளைத் தடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இறுதியாக, குறித்த தினத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜூலை கலவரம் போன்று, திகன கலவரம் போன்று, அளுத்கம கலவரம் போன்று, இன்றுமொரு கலவரத்தை இனவாதிகள் ஏற்படுத்தியிருப்பார்கள். அதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் மொத்தமாக பதவி விலகியதால் அந்த நிலைமை தடுக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், அரசியல்துறை விரிவுரையார் எம்.ஏ.எம். பௌசர், விமர்சன ரீதியானதொரு கருத்தினை, இந்த கூட்டு பதவி விலகல் தொடர்பில் பிபிசி தமிழிடம் முன்வைத்தார்.

"குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் மட்டும் தமது பதவிகளில் இருந்து விலகியிருந்தால், பதவி விலகாத முஸ்லிம் அமைச்சர்களின் செல்வாக்கு குறைந்து, அவர்களின் வாக்குகளில் சரிவு ஏற்படும் நிலை உருவாகியிருக்கும். அதனால்தான் இந்த கூட்டு பதவி விலகல் இடம்பெற்றதாக நான் பார்க்கிறேன்," என்று பௌசர் கூறினார்.

இதேவேளை, இந்த பதவி விலகலின் பொருட்டு முஸ்லிம் அமைச்சர்கள் முன்வைத்த நிபந்தனைகள் குறித்து வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"10 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இந்த பதவி விலகல் இடம்பெறுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கூறியிருந்தார். ஆனால், அந்த 10 அம்சக் கோரிக்கைகள் என்ன என்பது பற்றி வெளிப்படுத்தப்படவில்லை," எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

முஸ்லிம் அமைச்சர்களைப் பாதுகாப்பதற்கானதொரு தற்காலிக வியூகமாகவே, இந்த பதவி விலகல் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"இந்த பதவி விலகல் சமூக ரீதியில் வெளிப்பார்வைக்கு முக்கியமானதொன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதன் உள்ளார்ந்த தன்மைகளை நோக்குகின்றபோது, பெரியளவுக்கு சாதகங்களை உள்வாங்கி இருக்கிறது என்று என்னால் கூற முடியாது," என்றும் விரிவுரையாளர் பௌசர் தெரிவித்தார்.


1 comment:

  1. இந்த விடயம் தனியே கல்விக்கூடங்களுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல ராஜதந்திரத்துடனும் சம்பந்தப்பட்டது என நான் நினைக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.