May 01, 2019

ISIS பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களே, இலங்கையில் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் - பொன்சேகா

அரசியல் ரீதியான பொறுப்பைக் கொடுத்தால், நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகளை, 2 வருடங்களில் முடித்துக் காட்டுவேனென, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கியுள்ள சர்வதேசத் தீவிரவாதம் குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலங்கை இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

இங்குள்ள பாதுகாப்பு நிலைமை சரியில்லை. பாதுகாப்புத்துறைக்கான அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அனைவராலும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. இங்கு எந்தவொரு சோதனை நிலையங்களும் இல்லை. இதேபோன்ற தாக்குதல்களை, எந்தவொரு காரணத்துக்காகவும் மேற்கத்தேய அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தால், அங்கு பாதுகாப்பு மிகவும் பலமாகவே இருப்பதால் சாத்தியப்பட்டிருக்காது. எனவே, எமது நாடே தாக்குதல்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்பதாலேயே, இங்கு தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அதனாலேயே, எங்களது நாட்டை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட அமைப்பின் கீழ் பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம். வெகு நாள்களாக அவர்களுடன் பணியாற்றியிருக்கலாம். சரியான இலக்குகளை வைத்து, பணிப்புரை வரும் வரை அவர்கள் காத்திருந்து, இதைச் செய்திருக்கலாம். இந்நிலையில், இவ்வாறான தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு, இதுவே சரியான நேரம் என்று அவர்கள் கணக்கிட்டு, தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம்.

கே: இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்னர், தௌஹீத் ஜமாத் அமைப்பு குறித்து, அரசாங்கம் அறிந்து வைத்திருந்ததா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வேறுபட்டது. ஈழம் வேண்டும் என்றும் தனி நாடு வேண்டும் என்றே அவர்கள் போராடினார்கள். ஆனால், முஸ்லிம்கள், வேறொரு நாட்டைக் கோரவில்லை. மற்றைய சமூகத்தினருடன் ஒன்றிணைந்தே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம், நிச்சயமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சிலரது அல்லது வெளிநாட்டிலுள்ள குறிப்பிட்ட சில அமைப்புகளின் திட்டமாகும்.

அவர்களே, ஒரு குறிப்பிட்ட நாட்டில் மாத்திரமல்லாது, உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து நாடுகளிலும் தங்களது திட்டங்களை வகுத்து வருகின்றனர். இஸ்லாம் அரசுக்கு தேவைப்படுவதெல்லாம், இந்த உலகத்தையே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதாகும். எனவே, எல்.டி.டி.ஈயினருக்கும் இந்த ஐ.எஸ் அமைப்புக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

கே: சிறுபான்மையினரை இலக்காக வைத்து, ஆரம்பத்திருந்தே இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளனவா?

இல்லை என்றே நான் கருதுகிறேன். இலங்கையிலுள்ள முஸ்லிம் இனத்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரம் வாழவில்லை. கிழக்கில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய சமுதாயம் உள்ளது. ஆனால், அதுவும் கிழக்கில் சிறுபான்மையினராக​வே உள்ளனர். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ச் சமுதாயத்தைப் போன்றல்லாது, முஸ்லிம் சமுதாயம் சிறுபான்மையாகவே இருக்கின்றது.

முக்கியமாக, குறிப்பிட்டதொரு பகுதி, தங்களுக்கு வேண்டும் என்று ஒருபோதும் அவர்கள் கோரியதில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உள்ளனர். முக்கியமான இரண்டு அரசியல் கட்சிகளும் உள்ளன. அவர்கள் அனைவருமே, அரசாங்கத்தின் மிகவும் பலமான உறுப்பினர்களாகவே உள்ளனர்.
கடந்த சில காலங்களில், கண்டியில் ஏற்பட்ட சிறியதாரு கலவரத்தைத் தவிர, நாடளாவிய ரீதியில், சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். வர்த்தகமானாலும் சமூதாயமென்றாலும், ஒன்றாகவே இருந்து வருகின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் எப்போதும் புறக்கணிக்கப்பட்டது கிடையாது.

கே: இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், புலம்பெயர் பாகிஸ்தானியர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தின் நிலைமை என்ன?

பாகிஸ்தானியர்கள் குடியேறியுள்ள பகுதியில் நிரந்தரமாக வசிப்போர், இந்தத் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து அச்சமடைந்தனர். பாகிஸ்தான் பிரஜைகளால் ஏதேனும் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று எண்ணினர். பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தனர். அதனால், பாகிஸ்தான் பிரஜைகள் வேறொரு பகுதிக்கு இடமாற்றப்படல் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படவில்லை.

வர்த்தகத்​ தேவைக்காக நாட்டுக்கு இவ்வாறு வருவோர் குறித்தும் நாம் தற்போது அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில், சிங்கள மற்றும் கத்தோலிக்கச் சமூகத்திலிருந்து, முஸ்லிம்கள் மீது எந்தவொரு ​தாக்குதலும் நடத்தப்படவில்லை. எந்தவொரு வன்முறையும் பதிவாகவில்லை. சிங்கள சமூதாயத்திலுள்ளவர்கள், தற்போதுள்ள நிலைமையை முறையாகக் கையாண்டுள்ளனர். 1980களில் அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்ய அவர்கள் விரும்பவில்லை.

அத்தோடு, நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதோடு. அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது. சிலரால் முன்னெடுக்கப்படும் இந்தப் பிரச்சினையைக் காரணங்காட்டி, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தவறான ஓர் எண்ணத்தோடு நாம் பார்க்கவில்லை.

கே: இந்தத் தற்கொலை குண்டுதாரிகள், கோடீஸ்வரர்களின் புதல்வர்கள் என்று கூறப்படுகிறது. நல்ல பொருளாதாரம், நல்ல கல்விநிலையைக் கொண்டுள்ள இவர்கள், இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளக் காரணம் என்ன?

இங்கு மூளைச் சலவையே இடம்பெறுகின்றது. முஸ்லிம் என்பதைக் காரணமாகக் காட்டி, மூளைச் சலவை செய்து, இவ்வாறான பாரிய அமைப்புகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அத்தோடு, இவ்வாறான அமைப்புகளிடம் காணப்படும் பணத்தைக் காட்டியும் இவ்வாறு மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர். தற்காலத்து ​இளைஞர்கள், இவ்வாறு தாக்குதல் நடத்துவதை ஒரு நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். யாரை மூளைச் சலவை செய்யலாம் என்பது குறித்து, பயங்கரவாதிகள் அறிந்து வைத்துள்ளார்கள்.

கே: இவ்வாறு இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, தவறான பாதையில் செல்வதைத் தடுப்பதற்கான இலங்கையின் பொறுப்பு என்ன?

அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவின்றி, இவற்றை இராணுவத்தாலும் பொலிஸாராலும் இல்லாமல் செய்ய முடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்கள் தற்போது நடைபெற்று வந்தாலும், இதை நீண்ட நாள்களுக்குக் கொண்டுசெல்வதே நல்லது.

கே: இனிவரும் நாள்களில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்து, நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டுவர முடியுமென நினைக்கிறீர்களா?

அதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து, முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெற வேண்டும். அப்போது அது சாத்தியப்படும். இந்நாட்டு ஜனாதிபதியும், இந்த விடயத்தின் பாரதூரத்தை அறிந்து செயற்பட வேண்டும்.

கே: நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க, 2 வருடங்களேனும் தேவை என்று கூறியுள்ளீர்கள்? அதற்கான திட்டம் உங்களிடம் உள்ளதா?

எனக்குள்ள அனுவபத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிரச்சினையை 2 வருடங்களில் முடிக்க முடியுமென்று நம்புகிறேன். அதற்கான சிறந்த திட்டமிடல் இருக்க வேண்டும். யுத்தத்தை நான், மூன்று வருடங்களுக்குள் முடிப்பேன் என்று கூறியிருந்தேன். ஆனால், 2 வருடங்களும் 9 மாதங்களுக்குள் அதை முடிவுக்குக் கொண்டுவந்தேன். அந்தவகையில், இப்பிரச்சினையையும் இரண்டு வருடங்களுக்குள் ​முடிவுக்குக் கொண்டுவரலாம். அதற்காக, அவர்களைப் பிடித்துக் கொல்வது தான் திட்டம் என்று கூறவில்லை. தவறிழைப்பவர்களைக் கைது செய்தல், அவர்களின் செயற்பாடுகளை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தப் பிரச்சினையை, இரண்டு வருடங்களுக்கும் தீர்க்கலாம் என்று நம்புகிறேன். இரண்டு, மூன்று மாதங்களில், இப்பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது.

கே: ஐ.எஸ் தீவிரவாதிகள் புகுந்த நாடு, அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக வரலாறு இல்லை. அப்படியிருக்க, இலங்கை எவ்வாறு தப்பும்?

கட்டாயம் தப்பிக்க முடிவும். அதற்கு, இந்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள அனைத்தின மக்களும், இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். விசேடமாக முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். காரணம், இதனால் அவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையால், அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு பெருமளவில் தடங்கல் ஏற்படும். அதனால், அந்த மக்கள் இந்த விடயத்தில் அதிகளவு அக்கறை காண்பிக்க வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகள், அந்த நாடுகளில் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதளவுக்கு, பயங்கரவாதிகளை முடக்கி வைத்துள்ளனர். அதில் வெற்றி கண்டுள்ளனர். அதனால், எம்மாலும் அதைச் செய்ய முடியாதெனக் கூறமுடியாது.

2 கருத்துரைகள்:

His statment saying small incident was kandy,.???

indha pirachinaiyai illamal akawendumanal sinhalawarhalin weedu ,kaani thotam,tholil purim idam anaithu idathil irundhum sinhalawarhaludaya aidhangalai kalaya wendum. adhihamana periya walhal sinhalawarhalidam kanapaduhindraner. muslimgalidam iwai anaithum kalaiwadhal edhirkalathil muslimgaluku thatkapuku ondrum illamal pohi widum. sinhalawarhal aluthgamai sambawathil kooda muslim ilainjanai thupakiyal suttaner idhatku muslim mpkalum thati kekawillai matrum muslimgalin sothukalaim alithaner eri utiner adhilum kollappattaner, paliwasal thaka pattadhu peralawuku siru thohai 50000 mattumay kidaithadhu, palliwasal katti kodukapadawillai, muslimgal aniyayamaha paliyai potaner, aluthgamayil adhihamana muslim pengal rape seyya pattaner.indruwarai bautha thurawihal inawadha karuthukalai kakkuhindraner awarhaluku andha actionum edupadhahawum illai idhil inawadha arasiyalum wera. muslimgaluku angu natil padhuhapu ulladhu. isis israel secret intelligent service natil kalundra karanam muslimgalin ariyamayal atpatta sindhanai moolaichalawai idhai thoondiyadhu muslimgalin sothukal alikapattamai matrum muslimgalin uyir ilapu muslimgalin uyirai thuchamaha karudhudhal, pirachinaiku moola karanam bautharhal andru therindhum muslimgalai kaidhu saidhal.facebook il islathai patri kewalamaha padhiwu idudhal inawadha tv channelhal.islathaim muslimgalai parthu tharakuraiwaha pesudhal, usinhalawarin ariyamayal islathil ulla satta thittangalai kewalapaduthal wahuthal. etc

Post a Comment