May 26, 2019

முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன - இதில் என்ன நன்மைதான் இருக்க முடியும்...?

குருநாகல் முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன; இதில் என்ன நன்மை தான் இருக்க முடியும்?! 

(14:7)  وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ 

"நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தால் உங்களுக்கு அவன் இன்னும் இன்னும் அதிகமாகத் தருவான் என்ற அம்சத்தை உங்கள் இறைவன் அறிவிப்புச் செய்துள்ளான்" என்ற குர்ஆன் வசனத்தை இமாம் நேற்றிரவு தறாவீஹ் தொழுகையில் ஓதிக்கொண்டு சென்றார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, இலங்கையில் குருநாகல் மாவட்டத்திலுள்ள அந்த 30 கிராமங்களில் தமது வீடுகளும் வியாபாரத் தளங்களும் பெறுமதியான தமது வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு வீதிக்கு வந்துள்ள அந்த அப்பாவி முஸ்லிம்களும் அல்லாஹ்வை விசுவாசித்து அவனுக்கு நன்றி செலுத்தி வந்தவர்கள் தானே, அவ்வாறாயின் அவர்கள் எதனை அதிகமாகக் கொடுக்கப்பட்டு விட்டார்கள் என்ற சிந்தனை எனது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆம் மிகவும் எளிமையான வாழ்க்கையையும் மிக நல்ல சுபாவத்தையும் இயல்பாகக் நல்ல மனிதர்களான அந்த முஸ்லிம்களுக்கு அவர்கள் இதுவரை அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தி வந்த நிலையில் மேற்குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனத்தின் படி அவர்கள் எதனை அதிகமாகக் கொடுக்கப்பட்டார்கள் என்று சிறிது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்த நல்லவர்களுக்கு அல்லாஹ் எதனை அதிகமாகக் கொடுத்தான் என்பது எனக்குப் புரிய வந்தது.

1 - இவ்வளவையும் இழந்த பின்னரும், "எமது ராபிபே, ரகுமானே, நீ எங்கள் விஷயத்தில் எதனை நாடினாலும் அது நியாயமானதே. உன்னை நாங்கள் அப்படியே ஏற்று அங்கீகரிக்கின்றோம். உனக்கே புகழனைத்தும்" என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதற்குத் தயாராகி விட்ட அவர்களிடமுள்ள அந்த சாதகமான மனோநிலை அல்லாஹ்வை விசுவாசித்த ஒருவருக்கன்றி வேறு யாருக்கு இருக்கும் என்று எனக்குத் தெரிய வந்தது. எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற ஒரு முஸ்லிம் அல்ஹம்து லில்லாஹ் - "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று சொல்வதைக் கேற்கும் போது பெரிதும் ஆச்சரியமாக உள்ளது. பிரச்சனைகளைத் தொடர்ந்து வாழ்க்கையில் துவண்டு விழுந்து விடாமல், வாழ்க்கையைப் positive ஆகப் பார்க்க இந்த மனோநிலை எவ்வளவு தேவையானது!

2 - "நீங்கள் அப்பாவிகள்; எந்தக் குற்றமும் செய்யாதவர்கள்;  உங்களுக்கு நடந்தது பெரியதொரு அநியாயம்." 

 என்று அந்த பௌத்த சமூகத்திலிருந்தே மனிதர்கள் சாரி சாரியாக வந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மீதுள்ள இந்த அனுதாபத்தையும் நல்லெண்ணத்தையும் அல்லாஹ் மற்றவர்களின் உள்ளத்தில் போட்டுள்ளான். இது ஒரு விலை மதிப்பிட முடியாத சொத்தல்லவா. எவ்வளவு செலவழித்தாலும் இவற்றை  எவருக்கும் வாங்கி விட முடியுமா?!

3 - அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை ஒரு ஆதாரமாக வைத்து இலங்கை முழு முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள அபாண்டமும் மற்றும் பய பீதியும் குறைக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்குக் கிடைத்த ஒரு பாக்கியமல்லவா? அந்த சாதாரண முஸ்லிம்கள் இலங்கை முழு முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்கும் பாதுகாப்புக்கும் மற்றும் அச்ச நீக்கத்துக்கும் காரணமாக அமைந்து விட்டார்களே. அவர்களிடமுள்ள முழு சொத்துக்களையும் அவர்கள் செலவிட்டிருந்தால் கூட இவ்வாறான ஒரு அடைவு எய்தப்பட்டிருக்குமா?

4 - அவர்களுக்கு நடந்த அநியாயத்தை எவரெல்லாமோ தட்டிக் கேட்கின்றார்கள். அவர்கள் நல்லவர்கள் என்று மனிதர்கள் பேசுகின்றார்கள்; பௌத்த மதத்தின் பெயரால் இது நடந்திருப்பது பௌத்த மதத்துக்கும் பௌத்தர்களுக்கும் பெரும் அவமானம் என்பதை எத்தனையோ மனிதர்கள் வாய் விட்டுச் சொல்கின்றார்கள். இந்த நிகழ்வு பௌத்தர்களோடு புதியதொரு கலந்துரையாடலை துவங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

5 - "Easter Sunday யில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களை செய்தவர்கள் முஸ்லிம்களே; எனவே இந்தக் குற்றத்துக்கு முஸ்லிம்களே வகை சொல்ல வேண்டும்" என்ற குற்றச்சாட்டினால் பெரும் பய பீதிக்கு உற்படுத்தப்பட்டிருந்த நிலை தாண்டி இன்று அந்தக் குற்ற உணர்வும் தலை குனிவும்  பௌத்த சமூகத்துக்குக் கடத்தப்பட்டுள்ளது. இந்த சாதகமான நிலை அவர்களுக்கு நடந்த இந்த அனத்தத்தின் பின்னணியிலேயே ஏற்பட்டது. இது அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த ஒரு அருளல்லவா?!

6 - நடந்து போன அனர்த்தம் கண்டு முழு முஸ்லிம் சமுகமும் அடிபட்டது போல் வேதனைப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முயற்சிகள் பெரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கிடையிலுள்ள சகோதரத்துவ வாஞ்சையைப் புதுப்பிக்கவும் அதனை மெருகூட்டவும் இது காரணமாக அமைந்து விட்டது. இது ஒன்று. அடுத்தது முஸ்லிம்களுக்கு மத்தியிலுள்ள இந்த சகோதரத்துவத்தையும் அதற்குப் பின்னாலுள்ள அவர்களின் மார்க்கத்தையும் எத்தனையோ முஸ்லிமல்லாதார் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். 
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் David Cameron, "இங்கிலாந்தில் அதிகம் கொடை (charity) கொடுக்கின்ற சமுகம் முஸ்லிம்களே" என்று ஒரு போது கூறினார். அதே போன்று இலங்கையிலும் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர்  விக்டர் ஐவன், "இலங்கையில் அதிகம் கொடுக்கின்ற சமுகம் முஸ்லிம்களே" என்று சொல்லியிருக்கின்றார். இவற்றையெல்லாம் ஒரு அமைதி பெரும்பான்மை பார்த்துக் கொண்டு தான் வருகின்றது. 


அவர்களுக்கெல்லாம் எமது கண்களின் மணியான இஸ்லாத்தைக் கொண்டு போய்ச் சேர்கின்ற பொறுப்பு எம்மீது உள்ளது.

'எங்களால் இந்த நாட்டுக்கு இஸ்லாம் போய்ச் சேருமாக இருந்தால் கோடிகளைக் இழக்க நாங்கள் தயார் என்பது எம்மிலுள்ள ஒரு சாதாரண முஸ்லிமும் கூட உடன்படுகின்ற ஒரு கருத்து. உண்மையில் இந்த இழப்புக்கள் அமைதிப் பெரும்பான்மையாக இருக்கின்ற சாதாரண பௌத்தர்களின் உள்ளங்களில் முஸ்லிம்கள் மீது ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தி உள்ளது.  

"நாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவர்கள் அவனிடமே எமது மீளுகை உள்ளது".

"எங்கள் இறைவனே, உனது கோபம் மாத்திரம் எமக்கு இல்லை என்றால் உனது அந்த உயந்த திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் எதனையும் இழக்கத் தயார், எமது ரப்பே!"
"எனது வாழ்வு, எனது மரணம் மற்றும் அவை இரண்டுக்கும் இடைப்பட்ட எமக்கு சொந்தம் என்று உள்ள எல்லாமே உனக்காகத்தான் இறைவனே; எங்களை நீ பொருந்திக் கொண்டால் அது மட்டும் எமக்குப் போதுமானது" 

ஒரு முஸ்லிமின் காலில் குத்துகின்ற ஒரு முள் கூட அவனுக்கு நன்மையானதே. அதனால் அவனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகின்றன என்றால் தமது வாழ்வு பூராக உழைத்த சொத்து செல்வங்களையெல்லாம் இழந்து நிற்கின்ற இந்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கொடுக்க இருக்கின்ற நற்கூலிகள் பற்றி நான் எண்ணிப் பார்க்கின்றேன். அது குறித்து  அவர்கள்  மீது உண்மையில் எனக்குப் பொறாமை வருகிறது. 

உலக வாழ்க்கையின் போது சோதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற கூலிகளைப் பார்த்து அவ்வாறு சோதிக்கப்படாதவர்கள் 'தமது நாவுகள் இரும்புக் கத்தரிகளால் துண்டாக வெட்டப்பட்டுத் தாமும் அவ்வாறு சோதிக்கப்பட்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

"அல்லாஹ்வே, இந்த மனிதர்களுக்கு நீ இந்த உலகில் இன்னும் நிறைய கொடு; அதே போன்று மறுமையிலும் நீ அவர்களுக்கு நிறைய கொடு; நாங்களும் உனது அருளில் பெரும் தேவையுள்ளவர்களாகவே இருக்கின்றோம், அன்பும் இரக்கமும் உள்ள எங்கள் இறைவனே!"

"நீங்கள் சிலதை வெறுப்பீர்கள். ஆனால் அதில் உங்களுக்கு நன்மை இருக்க முடியும்." (குர்ஆன்).
  
- By Sheikh Salman Faris -

1 கருத்துரைகள்:

Post a Comment