Header Ads



அவதூறு, வன்முறை, அச்சத்தின் மத்தியில் உயிர்த்தெளுவோம்


இலங்கையில் முஸ்லீம்கள் ஐஸிஸ் தீவிரவாதிகளை வரவேற்கவில்லை, ஒழித்து வைக்கவில்லை, மாவீரர் என்று வாழ்த்தவில்லை, கல்லறை  கட்டி நினைவேந்தவும் இல்லை. இலங்கையில் ஐஸிஸ் தாக்குதலின் பின்னர் சஊதியில் ஒளிந்திருந்த ஒற்றைத் தீவிரவாதியைக் கூட அரசுக்கு பிடிக்கமுடிந்தது, மீதமுள்ள நூறுபேரும்(அரச கணக்கு) எப்படியும் பிடிபட்டு விடுவார்கள்.

ஆனாலும் துரதிஷ்டவசமாக முழு முஸ்லீம் சமூகமும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சிங்கள, தமிழ் ஊடகங்கள் துவேஷத்தையே கக்குகின்றன. துவேஷம் பிடித்த ஒரு சில இனவாத அரசியல்வாதிகள் முஸ்லீம் அரசியல் இருப்பை ஒரு வழி பண்ணிவிடவே கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர். தனிநபர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் எரியும் துவேஷத்தீயில் எண்ணெய்யை ஊற்றுகின்றனர். நாட்டில் இனவாதத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அவர்களின் முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை.

1. ஊரடங்கு நேரத்திலேயே சொத்துகள் கொள்ளையும், எரிப்பும், பள்ளிவாயில்கள் உடைப்பும்.

2. முகத்தை திறந்துபோனாலும், அடுத்ததையும் கழற்றுமாறு வழி மறிப்பும் சுகவீன லீவுப் போராட்டமும்.

3. வாங்கலுக்கும் விற்றலுக்கும் “NO MUSLIM” ஒதுக்கல் கொள்கையும் வியாபாரத் தடையும் என பட்டியல் நீள்கின்றது.

இந்நாட்டில் சுமார் பத்து வீதமாய் இருக்கும் எமது சமூகத்துக்குள் எத்தனையோ உட்சவால்களை நாம் ஏற்கனவே எதிர்த்து செயற்படவேண்டி இருந்தது.

1.       கல்வி, பொருளாதார வீழ்ச்சி
2.       இளம் சந்ததியினரின் போதைப் பழக்கம், ஒழுக்க விழுமியப் பிறழ்வு
3.       இஸ்லாமிய வாழ்வொழுங்கில் குறையும் பற்றுதல்
4.       தீவிரவாத மூளைச்சலவையில் வீழும் இளையவர்கள் என்பனவும் இன்னும் பலவும்.  

சமூகத்தைப் பீடித்து பூதாகாரமாகி வரும் உட்சவால்களைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் வெளிச்சக்திகளில் இருந்து வரும் சவால்களைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சமூகம் முகம் கொடுக்கவேண்டியுள்ள அத்தகைய புறச் சவால்களும் பயங்கரமானதாகவே உள்ளன  

1.       இனவாத சக்திகளின் வெளிப்படையான இனத்துவேஷ செயற்பாடுகள்
2.       பெரும்பான்மைக் கட்சிகளின்  சந்தர்ப்பவாத அரசியல்
3.       முஸ்லீம்கள் மீது சகிப்புத் தன்மையற்ற வெளிநாட்டு சக்திகள்

இனி, எமது நாட்கள் விடிவதும் முடிவதும் பிரச்சினைகளோடுதான் என்ற நிலை தோன்றிவிட்டால் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலே ஒவ்வொருத்தருக்கும் பிரதானமாகிவிடும், சமூகத்தின் இருப்பும் எதிர்காலமும் பற்றிய கரிசனை இரண்டாம் பட்சமாகிவிடும்.

இன்றைய முஸ்லிம் அரசியல் சமூகத்தினுள் கலந்து அதனை வலுவூட்டும் மறு சீரமைப்புகளைச் செய்யவில்லை, அத்தகைய பணிகளைச் செய்து வந்தவர்கள் இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்தான். ஆனால் முழு முஸ்லீம் சமூகத்தினதும் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமான நிறுவன அமைப்புக்கள் எம்மிடம் இருக்கவில்லை. இந்நிலையில் சிறிது சிறிதாக நடைபெற்று வந்த தனிமனித மற்றும் நிறுவன செயற்பாடுகள்கூட இன்று ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன. வாசிக்கும் பெறுமதியான புத்தகங்களை எரித்ததில் இருந்து அன்றாட வணக்க வழிபாடுகள் சுருங்கிப்போனது வரையில் தனிமனிதனில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய நிறுவனங்கள் செய்துவந்த ஆன்மீக அமர்வுகள் மற்றும் நிகழ்வுகள் என்பன அப்படியே மந்த கதிக்குச் சென்றுவிட்டன, பள்ளிவாயில்கள் தொளுகைகளோடு சுருங்கிவிட்டன. இந்த தேக்க நிலையிலிருந்து நாம் விரைவில் மீளவில்லையாயின் அது எம்மை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்தள்ளிப் போடக்கூடும்.

எனவே, சமூக நிறுவனங்கள் இன்னும் தாமதியாது இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும், அவற்றின் செயற்பாடுகள் வீரியமடைய வேண்டிய தருணமும் இதுவே. சமூகம் அதன் உட்பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், வெளிச்சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் நிறைய முயற்சியாண்மை தேவைப்படுகின்றன, இவை தனித்தனியே செய்யப்படுவது சிறந்த பலனைத் தராது, மாறாக உலமா சபைகளும், இஸ்லாமிய இயக்கங்களும், நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொது மூலோபாயங்களை வகுத்து அதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடமுடியும். வன்முறை இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய இயக்கங்கள் இனி உயிர்ப்படைய வேண்டும்.

இன்றைய உலக யதார்த்தம் எப்படி இருக்கிறது? இஸ்லாத்தைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் இஸ்லாத்தை வெறுக்கிறேன்(I don’t know much about Islam but I hate Islam)”, நம்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் இந்த நிலைமைக்கு ஊடகங்கள் பெரிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. “முஸ்லீம் பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற செய்திகள் பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களிலோ, டி.வி.சேனல்களின் தலைப்புச் செய்தியாகவோ வெளிவராத நாட்களே இல்லை எனலாம்.

எம்மைச் சூழ்ந்து வாழும் தொண்ணூறு வீதமான மாற்று மதங்களைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாம், முஸ்லீம்கள், குர்ஆன், ஜிஹாத் என்பன குறித்து ஏராளமான தப்பபிப்பிராயங்கள் விதைக்கப்பட்டுள்ளன, முஸ்லிம் விரோத உணர்வுடன் வளர்க்கப்படும் பெளத்த, இந்து இளம் சந்ததியினர் ஒரு பக்கமும் பய உணர்வுடன் வளரும் முஸ்லீம் சந்ததியினர் மறுபுறம் வாழும்நிலையில் எதிர்காலம் எவ்வாறு சக வாழ்வைத்  தரும்?

எம்மைச் சூழவுள்ள மக்கள் சந்தேகத்துடனும் தப்பபிப்பிராயத்துடனும் வாழும்போது இனமுறுகல் நிலை இலேசாக ஏற்பட்டுவிடுகிறது. இம்மக்களிடம் இருக்கும் இந்த மனப்பதிவை மாற்றும் பெரிய கடமை எம்முன்னே இருக்கிறது, இதற்கான வேலைத்திட்டம் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முஸ்லீமும் இந்தப் பணியைக் கையிலெடுத்தாலும் ஒருவருக்கு ஒன்பது மடங்கு வேலைப்பளு இருக்கிறது.

சகோதர இன சமூகத்தை நோக்கி இந்த வருடத்தின் முதல் காலாண்டுப்பகுதி வரையிலும் நடைபெற்று அவர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட, நேர்முறையான விளைவுகளைத் தந்த சில நிகழ்வுகள் இங்கு ஞாபகத்திற்கு வருகின்றன,  அல்குர்ஆன், நபிகள் (ஸல்) அவர்கள் பற்றிய அறிமுகம் என்பன சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்புகளாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன, open mosque day என்ற நிகழ்வுகள் மூலம் பள்ளிவாயலுக்குள் சகோதர இனமக்கள் அழைக்கப்பட்டு விருந்தோம்பப்பட்டனர், பள்ளியில் என்ன நடைபெறுகின்றது என காண்பிக்கப்பட்டன, ஜும்ஆ பிரசங்கத்தில் கலந்துகொண்டனர் இப்படி மேலும் பல சகவாழ்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன, இவை இனி நின்றுபோகத் தேவையில்லை, அதிகம் தொடரவேண்டும்.

நாமும் பிள்ளைகளும் படிக்கின்ற இடங்களிலும் பணிசெய்கின்ற இடங்களிலும் பல்லின சூழலில்தான் வாழ்கிறோம் ஆனால் கிலோமீற்றர் தூரத்தில் மானசீகமாக பிரிந்து இருந்திருப்போம், இவ்வாறு இருந்துகொண்டு இஸ்லாத்தின் மீது அவர்களுக்குள்ள சிவப்புப் பார்வையை மாற்ற முடியுமா? சகவாழ்வை ஏற்படுத்த முடியுமா? இதுவரை போனதுபோக இப்போது இருக்கின்ற நிலைமையில் இனிமேல்தான் நாம் பன்மடங்கு பணிசெய்ய வேண்டியுள்ளது, எம்மைவிட்டு  அவர்கள் தூரமாகினாலும் நாம் அவர்களை அணுகியும் அனுசரித்தும் சென்று சாதிப்போம், வன்முறை அல்ல மதிநுட்பமே எங்கள் வழிமுறை எனக் காண்பிப்போம்.

இப்போது எம்முன்னுள்ள பணிகள் பாரியவை, இவற்றை சில்லறையாகச் செய்ய முடியாது, இதற்காக முஸ்லீம் சமூகத்தை நிறுவனமயப் படுத்தவேண்டும், இதற்கான அவசியம் குக்கிராமங்கள் தொடக்கம் எல்லா மட்டங்களிலும் இன்று உணரப்பட்டுள்ளது, இதற்காக பள்ளி நிர்வாகங்கள், உலமா சபைகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுப்போம், எல்லோரும் அவர்களுடன் கைகோர்ப்போம், பொது விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்படுவோம், சவால்களை கூட்டாக எதிர்கொள்வோம் இன்ஷா அல்லாஹ் வெற்றி காண்போம்.

எஸ். இம்தியாஸ் 

6 comments:

  1. குறிப்பாக தமிழ் வேசை ஊடகங்கள்,முன்னால் புலி பயங்கரவாதிகள்,தரம் கெட்ட கீழ் தரமான 95% தமிழ் அரசியல் வாதிகள்

    ReplyDelete
  2. அழிவுகளும் அடக்குமுறைகளுமே ஒரு சமூகத்தைத் திட்டமிட்டு முன்னேற்றம் அடைய உதவுகிறது. அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அதுதான் ஒற்றுமை.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு. நாம் இலங்கையர். நாம் அனைவரும் நன்றாக வாழ வேண்டும். எமது நாடு வளர்ச்சியடைய வேண்டும்.

    ReplyDelete
  4. சிறந்த பதிவும் ஆலோசனைகளும்... சிந்திப்போம், செயற்படுவோம்..

    ReplyDelete
  5. @Rizard அப்படியே அம்பாறை போன்ற இடங்களில் அப்பாவி தமிழர்களை முஸ்லீம் குழுக்கள் கொன்று குவித்ததையும், சொத்துக்களை சூறையாடியதையும், அதன் பின் அரசாங்கத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் தமிழ் மக்களுக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்த அநியாயங்களையம் நினைத்து பார்.
    God's mill grinds slow but sure

    ReplyDelete

Powered by Blogger.