Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில், ராஜபக்ச அணியினரே உள்ளனர் - சரத் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நாட்டில் பல இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் ராஜபக்ச அணியினரே உள்ளனர்.

அவர்களின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதில் ராஜபக்ச அணியினரும் ஜனாதிபதி மைத்திரியும் குறியாகவுள்ளனர்.

இவர்கள் அரசியல் சூழ்ச்சி மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர். ஆனால், நாட்டின் நீதித்துறையும் சர்வதேச சமூகமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்தநிலையில், தாக்குதல்கள், வன்முறைகளைத் தூண்டிவிட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசு மீது வெறுப்பு வரச் செய்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க இவர்கள் முயல்கின்றனர்.

அதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் மைத்திரி கைகட்டி வேடிக்கை பார்க்கின்றார்.

சந்தேகநபர்கள் என்று சிலரை மட்டும் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தால் போதாது. தாக்குதலின் பின்னனியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால், மைத்திரி ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரைக்கும் இந்த உண்மை வெளியில் வராது.

ஏனெனில், இந்த அரசைக் கவிழ்ப்பதிலும் ராஜபக்ச அணியைக் காப்பாற்றுவதிலும் அவர் உறுதியாக உள்ளார்.

அதற்காகத்தான் சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை எனக்கு வழங்க மைத்திரி பின்னடிக்கின்றார். அந்த அமைச்சு என் வசம் வந்தால் ராஜபக்ச அணியினரும், தானும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று அவர் அஞ்சுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. If you have any evidance according to that attack. Plz proof it.& take action imidiatly All the law & order open know.

    ReplyDelete

Powered by Blogger.