Header Ads



காத்தான்குடியில் இடம்பெற்ற விஷேட துஆப் பிராத்தனை - பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படவும் ஐக்கியமும் சமாதானமும் நல்லிணக்கம் ஏற்படவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலவை வேண்டியும் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாயலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட விஷேட துஆப் பிராத்தனை நேற்றைய தினம் (17.05.2019) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப் பிராத்தனை நிகழ்வில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் கௌரவ பேஷ் இமாமுமான மௌலவி ஏ.ஜி.எம்.அமீன்(பலாஹி) அவர்கள் விஷேட பிராத்தனை நடாத்தினார்கள்

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசனின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், காத்தான்குடி ஷபீலுர் ரஷாத் அறபுக்கல்லூரி அதிபருமான மௌலவி ஏ.எம்.ஹாறூன் (றசாதி) சிறப்புரையை நிகழ்த்தினார்கள்.

இந்த வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நிதிகள் உலமாக்கள் பிரமுகர்கள் என பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 21ம் திகதி இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை காத்தான்குடி முஸ்லிம் மக்கள் வண்மையாக கண்டிப்பதுடன் மிகவும் மிலேச்சனத்தனமான கொடூரமான இந்த செயலை நாம் எதிர்ப்பதுடன் முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு சிலர் செய்த இந்த கேவலமான செயலை காத்தான்குடி முஸ்லிம்களாகிய நாம் கண்டிக்கின்றோம்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்ளுமாறும் நாட்டில் நிரந்தர அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்பட அனைவரும் அதிகமதிகம் பிராத்தனையில் ஈடுபடுமாறு காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாச சபையின் செயலாளரும் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் இமாமுமான மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன் இதன் போது தெரிவித்தார்.

மேலும், 1990ஆண்டு பள்ளிவாயலில் பல ஷஹீத்களை இழந்ததோடு மட்டுமல்லாமல் பல சோதனைகளை,இக்கட்டான நிலைமகளை அனுபவித்த போதிலும் எமது ஊர் மக்கள் எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி தௌபா செய்து அல்லாஹ்வின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே எமது மூத்த உலமாக்கள் எமக்கு காட்டிவிட்டுச் சென்ற அழகிய வழிமுறைக்கேற்ப ஒரு சில நாசகாரிகளால்  பல சோதனைகளை அனுபவித்து வரும் எமது ஊர் மாத்திரமல்ல முழு இலங்கைவாழ் முஸ்லீம்களும் நிம்மதியாக வாழவும் எமது உரிமைகள் பாதுகாக்கப்படவும் அனைவரும் தௌபா செய்து அல்லாஹ்விடம் மன்றாடி நிலைமைகள் சீராக பிரார்த்திக்கவே இந்த நிகழ்வு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும் தெளிவூட்டப்பட்டது.

மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் இறுதியாக துஆப்பிரார்த்தனையை தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் மஸ்ஜிதின் நிர்வாக அனுசரனையுன் இப்தார் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.