Header Ads



இன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்காதீர்கள் - ஜனாதிபதி

இன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாமென இன்று (17) முற்பகல் காலி, ஹிக்கடுவ, தொடகமுவ  புராண ரத்பத் ரஜமகா விகாரையில் இடம்பெற்ற அரச வெசாக் வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல் எமது நாட்டுக்கு மட்டுமான பிரச்சினையல்ல அது சர்வதேச பிரச்சினையாகும் எனவும் அதனை எமது நாட்டுக்குரிய பிரச்சினையாக கருதி செயற்படுவோமேயானால் அதனூடாக எமது நாடு எதிர்நோக்க நேரிடும் அசௌகரியம் குறித்தும் ஜனாதிபதி  தெளிவுபடுத்தினார்.

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவும் அத்தாக்குதலின் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகவும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உண்மை மிக மெதுவாக பரவுகின்ற போதிலும் பொய் துரிதமாக பரவுகின்றதென தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென வலியுறுத்தினார். சமத்துவம். சமூக நீதி மற்றும் சகல உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்துதல் போன்ற பௌத்த கோட்பாடுகளின் ஊடாக சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் அதேவேளை எந்தவொரு ஆன்மீக கோட்பாட்டிலும் மனிதர்களை கொலை செய்யுமாறு கூறப்படவில்லையென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.