Header Ads



முஸ்லீம்களை தகாத வார்த்தைகளால், ஏசி சத்தமிட்டு எச்சரிக்கை

- எம்.எல்.எஸ்.முஹம்மத் -

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதத் கருத்துக்களும்,தாக்குதல் முயற்சிகளும் பரவலாக இடம்பெற ஆரம்பித்துள்ளன.

இதன் மற்றொரு தொடராக நேற்று(14)மாலை இரத்தினபுரியிலிருந்து மாவனெல்லையை நோக்கி புறப்பட்டுச்  சென்ற பஸ்ஸில் (NC5881) பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் முஸ்லீம்களை தகாத வார்த்தைகளால் ஏசி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நூறு ரூபா பெறுமதியானஆங்கில பேச்சுப் புத்தகங்களை விற்பனை செய்யும் நோக்குடன் அவிசாவளை நகரிலிருந்து குறித்த பஸ்ஸில் ஏறிய ஒருவர் தமது ஒருசில புத்தகங்களை விற்பனை செய்ததன் பின்னர் பௌத்த சமூகத்திற்கான சில அறிவுரைகள் என்ற பெயரில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக  கீழ்த்தரமான முறையில் சமயப் போதனைகள் பற்றி  கதைக்க ஆரம்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் 

"இப்படி மோசமான முறையில் சமயத் தலைவர்களைப் பற்றி  பஸ்ஸில் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்,"என அப்புத்தக வியாபாரியை நோக்கி கூறியுள்ளார். 

அதைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தகாத வார்த்தைகளை கூறி  சத்தமிட்டுள்ளதுடன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லீம்களையும் மிகக் கடுமையான முறையில் எச்சரித்துள்ளனர்.

பஸ் நடத்துநர் உட்பட பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த எவரும் இதனை தடுத்து நிறுத்தாததால் பஸ்ஸிருந்த முஸ்லீம்கள் பாரிய அச்சத்துடனை தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் கற்பிப்பதற்கு தினமும்  மாவனெல்லை பகுதியிலிருந்து முஸ்லிம் ஆசிரியைகள் பலர் இஸ்லாமியக் கலாச்சார உடையில் பயணித்து வருகின்றதால் இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் சமூகத் தலைவர்கள் உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென பஸ்ஸில் பயணிக்கும் முஸ்லிம் பிரயாணிகள் எதிர்பார்க்கின்றனர். 

No comments

Powered by Blogger.