Header Ads



ஜனாதிபதி ஞானசாரரை விடுவித்தது, நாட்டுக்கு தவறான செய்தியை சொல்லியுள்ளது - சுமந்திரன்

அரசியலமைப்பில் அரச தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அலட்சியம் செய்த குற்றத்துக்காக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, ஞானசார தேரர் அவர்களுக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணையொன்றின் பின்பே இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது.

உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்நாட்டின் பௌத்தர் அல்லாத குடிமக்கள் மீதான வன்முறையை தூண்டிவிடும் இத்தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டத்துக்குட்படுத்தப்பட்டு கையாளப்பட்டார்.

எல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால் இனவெறி மற்றும் மதவெறியை கட்டுப்படுத்தி வைப்பதாகும். அரசாங்கமானது இச்சவாலை கருத்திற்கொண்டு எந்த இனத்தவர்,மதத்தவராய் இருப்பினும், எல்லா கடும்போக்காளர்களையும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடாத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டுக்கு தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது.

அச்செய்தி யாதெனில், எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது, ஆனால் எண்ணிக்கையில் அதிகமானவர்களுக்கு அசௌகரியம் அளிக்கும் தீங்கற்ற செயல்கள் மிக கடுமையாக நோக்கப்படும் என்பதாகும். இது பெரும்பான்மைவாதத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாகும்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கையை கண்டனம் செய்து இவ் ஆபத்தான வழக்கத்தை எதிர்மாறாக மாற்றுவதற்கு நேர்வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம் என்றுள்ளது.

1 comment:

  1. முதலில் எமது நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் அதோடு ஜனாதிபதியாக ஒருவரை நியமிக்கும் ஒருவரின் கல்வி தராதரம் பல்கலைக்கழகம் வரையினாலான தகைமை கொண்டவராக இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.