Header Ads



இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள, இலங்கை முஸ்லிம்கள்

- Dr. Aqil Ahmad Sharifuddeen -

இன்று இலங்கை முஸ்லிம்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெயர்களைத் தங்கிக் கொண்டு, இஸ்லாத்தின் பெயரால் தாக்குதல் நடத்துகின்றோம் என்று பதிவு செய்துவிட்டு ஒரு மூடர் கூட்டம் செய்த கொடூரம் இருபது இலட்ஷம் முஸ்லிம்களையும் திண்டாட வைத்திருக்கின்றது.

இந்த கொலைகாரர்களை யார் மூளைச்சலவை செய்தார்கள், எதற்காக இதனைச் செய்வித்தார்கள் என்ற பின்புலக் கேள்விகள் இருந்தாலும் (அஷ்ரபின் மரணம் போல) அவை துலங்கப் போவதுமில்லை, துலங்கியவை சொல்லப்படப் போவதுமில்லை. அதனால் முஸ்லிம்களின் மீது பூசப்பட்டுள்ள களங்கத்தை துடைக்கவும் முடியாது.

கர்தினால் முதற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் அடங்கலான நாட்டின் அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் இலங்கை முஸ்லிம் சமூகம் நிரபராதி என்று அறிக்கை மேல் அறிக்கை விட்ட போதும், பாதுகாப்புத் தரப்பினர் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பை சிலாகித்து மெச்சிய போதும், நமது அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் களமிறங்கி வாதாடிய போதும் அவை ஊடகச் செய்திகளோடு ஓய்ந்து விடுகின்றன.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் ஏற்ப்பட்டிருக்கும் பீதியும், வெறுப்பும் அறிக்கைகளால் ஆற்றுப்படுத்தப் பட முடியாதவை என்பதனையே குளியாபிட்டிய, எதன்டவல பள்ளிவாசல் மீது நேற்றுரவு நடாத்தப்பட்ட தாக்குல் சொல்கின்றது.

இதனை வன்முறைக் கும்பல் ஒன்றின் அத்துமீறலாக வெறுமனே கடந்து போக முடியாது என்பதனையே நாடு பரந்து அவ்வங்கே நமது சமூகத்தவர் எதிர்நோக்கும் வரம்பு மீறல்கள் சொல்கின்றன.

இனவாதத்தை முதலீடாக்கி அரசியல் வியாபாரம் செய்யும் தேசபக்தர்கள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

காரியாலயங்களிலும், பொது இடங்களிலும் ஏன் சோதனைச் சாவடிகளிலும் கூட கடுஞ் சொற்களாலும், நையாண்டி வார்த்தைகளாலும் கூனிக் குறுகி சிதைந்து போகின்றோம். உயர் அதிகாரிகளும் பிரமுகர்களும் கூட இதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள் என்றால் கடைநிலை ஊழியர்களினதும் பாமரர்களினதும் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. ஊடகங்களில் செய்தி அறிக்கைகளைப் பார்க்கும் சிறுவர்கள் கிலேசப்படுகின்றார்கள்.  அடுத்து என்னாகும் ஏதுவாகும் என்ற பீதி படர்ந்திருக்கின்றது.

மொத்தத்தில் ஒரு உளவியல் நெருக்கடிக்கு முழு மொத்த முஸ்லிம் சமூகமும் அழ்த்தப்பட்டிருக்கின்றோம்.

இருந்தாலும், சமூகம் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இடர் நிலைமையை  அலட்சியப் போக்குள்ள இளம் இரத்தங்களும், பிடிவாத குணம் கொண்ட மூர்க்கர்களும், அரபு நாடுகளில் தொழில் நாடிச் சென்றிருப்பவர்களில் சிலரும் யதார்த்தமாக புரிந்து கொண்டதாகத் தெரிவில்லை.

வீதிப் போக்குவரத்து ஒழுங்கு முதற்கொண்டு பொது வாழ்வொழுங்குகளையும் உதாசீனம் செய்பவர்கள் இன்னமும் வலம்வருகின்றனர். அவ்வப்போது கடமையிலிருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை இவர்கள் உசுப்பேற்றிவிடுகின்றனர்.

அவசரகால சட்டத்தின் கீழ் முகம் மூடி ஆடை அணிவதை அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. இது அவசரகால சட்டத்தின் மூலம் இயற்றப்பட்ட கட்டளையாகும். இதனையும் பல பெண்கள் உதாசீனம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதுதான் கைது செய்யப்படுவதற்கும், தடுத்து வைக்கப்படவதற்கும் நிபந்தனை என்பதற்கில்லை. அவசரகால கட்டளை ஒன்றை மீறும்போதும் கைது செய்து தடுத்து வைக்கப் படலாம். அதற்கு பால் வேறுபாடு கிடையாது.

முகம் மூடுவதனை சட்டத்தைக் கொண்டு தடை செய்வதன் ஆபத்தின் பரிமாணத்தையும், பின்னரான பரிணாமத்தையும் உணர்ந்த ஜம்மியத்துல் உலமாவும், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களும் அது நிரந்தர சட்டமாக்கப்படுவிடக் கூடாது என்பதில் கரிசனையோடு கருமமாற்றி வருகின்றனர். அவர்களின் எத்தனங்களைப் பாழ்படுத்தும் விதமாக மூர்க்கத் தனமாக நடப்பது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முகத்தை மூடியே தீருவோம் என்று ஒருசாரார் இருக்கதீவிரமாக இருக்க ஹிஜாப் அணிந்து செல்லும் நமது சகோதரிகள் தலையை முற்றாகத் திறக்க நிர்ப்பந்திக்கப்படும் நிகழ்வுகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டில் நடக்கும் விடயங்களை அதன் ஸீரியஸ்னஸை உணராமல் விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலியும் கிண்டலும் நையாண்டியுமாக சமூக வலைத் தளங்களில் பதிவிடுதல், பின்னூட்டம் இடுதல், கேலிச்சித்திரம் மற்றும் மீம்ஸ் ஆகியவற்றைப் பதிவேற்றுதல் போன்ற விடயங்களையும் காணக்கிடக்கின்றது. இவ்வாறான விடயங்களில் பொதுவாக கடல் கடந்து வாழும் நம்மவர்களே ஈடுபடுகின்றனர்.

நாட்டின் பாதுகாப்புக் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதன் முழுமையான வடிவத்தில் ஊடகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் தகவல்களை ஊடகங்கள் தத்தமக்கே தோதான வடிவம் கொடுத்து வெளியிடுகின்றன.

யதார்த்தத்துக்குப் புறம்பான செய்திகளாக பல சொல்லப்படக் கேட்கும்போது நமது இயல்பான ஹாஷ்யத்தனம் துள்ளிக் குதிக்கின்றது. இருப்பினும் அவற்றுக்கெல்லாம் உருக் கொடுக்க முடியாது. அவ்வாறு செய்வது ஏற்கெனவே நாட்டில் கறுவப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி சமூகத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் இரு நிலைப்பாடுகளுக்கு இடம்பாடான விடயங்களில் ஒரு நிலைப்பாட்டைத் தூக்கிப் பிடித்து வலியுறுத்தி விவாதித்து, அடுத்த நிலைப்பாடு உடையவர்களை விமர்சித்து, ஈமானில் தளம்பல் உள்ளவர்கள் நரகவாதிகள் என முத்திரை குத்தும் உளப்பாங்கிலிருந்து நமது இளைய தலைமுறை விடுபட வேண்டும்.

ஆரம்பத் தொண்ணூறுகளில் விரலாட்டுதல், கூட்டு துஆ என ஆரம்பித்து தமது நிலைப்பாட்டுக்கு மாற்றமானவர்களை வழிகேடர்கள் முஷ்ரிக்குகள் காபீர்கள் என பத்வாக்களை அள்ளி வீசி சமூகத்தை இரண்டு படுத்தி, பின்னர் அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளிக்காது வாதப் பிரதிவாதங்களில் களமிறங்கி தமக்குள் விமர்சித்துக் கொண்டு பல துண்டுகளாக உடைந்து தாம் மட்டுமே நேர்வழி பெற்றவர்கள் எனும் இறுமாப்புடன் மிம்பர்களில் கர்ஜித்துக் கொட்டிய சிந்தனைக் குப்பை மேட்டில் வளர்ந்தெழுந்த நச்சு மரந்தான் 'அவன்'.

அந்த 'அவன்' ஐ வளர்த்தெடுத்த 'தாம் மட்டுமே நேர்வழி பெற்றவர்கள்' என்ற இறுமாந்த சிந்தனையின் உச்சத்தில்தான் 'இந்த உலகம் முஸ்லிம்களுக்குரியது, காபீர்கள் இஸ்லாத்துக்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் கொல்லப்பட்ட வேண்டும்.' என்று அவன் பிதற்றினான்.

முஸ்லிம் அல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லாது போனால்' யா அய்யு ஹன்னாஸ்' என்று ஆரம்பமாகும் அல்குர்ஆன் வசனங்கள் யாரைப் பார்த்துப் பேசும் எனும் பொதுப் புத்தி கூட அவனுக்கு இல்லாது மழுங்கிப் போய்விட்டது.

கொலை செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கோஷம் வேறு. அந்த அல்லாஹ்வுக்கு றஹ்மான், றஹீம், கப்பார் எனும் பண்புப் பெயர்கள் இருப்பதை அந்த கொடூரன் பொய்ப்பித்திருக்கின்றான்.

'அவன்' பேசிய பின்னணியிலும், தொனியிலும் இன்னமும் நம்மவர் சிலர் பேசிக்கொண்டிருப்பதும், அதனை கண்டும் காணாமல் விடு விடுவதும் நமது சந்ததிக்கு ஆரோக்கியமான தல்ல.

இன்னொரு 'அவன்கள்' இனிமேலும் உருவாகாமல் பார்த்துக் கொள்வது எமது அடுத்த கட்டப் பணிகளில் ஒன்றாகும்.

தலைமைத்துவமும் கட்டுப்பாடும், ஒருங்கிணைந்த பணியாற்றல், நன்மையை ஏவுவதிலும் தீமையைத் தடுப்பதிலும் நடுநிலையையும், இங்கிதத்தைக் கைக்கொள்வதில் சிரத்தை, ஒரே உம்மத்தாக தொழிற்படுதல், முன்மாதிரியான வாழ்க்கை முறை, தேசத்தின் சட்டங்களை மதித்து கட்டுப்பட ல் போன்ற பல தளங்களில் நமது சமூகத்தின் பணி விரிந்து கிடக்கின்றது.

எந்நிலையிலும் தீவிரவாதத்தின் வடிவங்களை ஒருபோதும் நாம் சகித்துக் கொள்ளக் கூடாது. முறையில் நகத்தால் கிள்ளி விச வேண்டியதை வளரவிட்டு கோடரியால் தறிக்கும் முட்டாள் தனத்தை இனி மேலும் நாம் செய்யக் கூடாது.

சஊதியோ, பாக்கிஸ்த்தானோ, துருக்கியோ மலேசியாவோ முஸ்லிம்களின் விவகாரத்தில் தலையிடும் என்றிருந்தால் ரொஹிங்கியாவில் இத்தனை அவலம் ஏற்பட்டிருக்காது எனும் யதார்த்தத்தை நாம் சீரணித்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை முஸ்லிம் அடையாளங்களோடு ஒரு தஃவா சமூகமாக வாழ்வதற்குத் தயாராவோம்.
சுவனத்தில் மட்டுமல்ல நமது உள்ளத்திலும் சமூகத்திலும் தேசத்திலும் சாந்தி, சாந்தி எனும் சோபனம் தினம் நீந்தி நீந்தி வர வழி செய்வோம். 

9 comments:

  1. உப்பு திண்டவன் தண்ணி குடிச்சே தான் ஆகனும்.

    ReplyDelete
  2. Assalamu Alaikum brother, your words well explained, May Allah Almighty guide us and protect the Muslim Ummah. (Ameen)

    ReplyDelete
  3. Dr! well said,
    useful speech in this situation.

    please everyone should read this.

    ReplyDelete
  4. One sided article must not be published at this time

    ReplyDelete
  5. மனித குலத்திற்கே இழிவான இந்த கொலைகாரக் கும்பலுடன் சம்பந்தப்பட்டவர்களை காட்டிக் கொடுத்தல் முழு மனித சமுதாயங்களுக்கும் நன்மையானதே.
    அவ்வாறு காட்டிக் கொடுப்போருக்கு சுவனம் நிச்சயம்

    ReplyDelete
  6. @Ajan
    இந்த கொலை காரனுகள் கண் இருந்தும் குருடர்களாகி ஆகிவிட்டார்களா அல்லது குருடர்கள் ஆக்கப்பட்டார்களா என்று காலம் பதில் சொல்லும்.

    ஏனெனில் கடந்த 30 வருடங்களாக உப்பு திண்டு தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கும் மற்றுமொரு சமூகம் கண்முன்னே இருந்தும் இந்த கொலை காரனுகள் பாடம் படிக்கவில்லை

    ReplyDelete
  7. We can not blame 90% of Sinhalese for the mistakes of our radical people. Radicalism started with oil money. Wahhabi destroyed Sri Lankan Muslim community with their money, with their arrogance, with their petty Islamic knowledge and their sorry apology this. These Wahhabi build houses in oil money. They used dawa money given some radical Saudi to build mosques, bridges, toilets with a big amount of commission and intakes. Like that of some politicians do. Now, entire Muslim community has to pay the prices. Now, they would not speak about petty Islamic things. It has been their focus to create fitna within our community. That fitna begun with a killing in Beruwawla mosques. While we condemn some sufi groups for this murder, it is these people who incited this religious violence among us. Some of them took salaries too from SL government.

    ReplyDelete
  8. Really. We need the positive changes in the life styles and approaches at our personal, family and community levels

    ReplyDelete
  9. Well said Dr Aqil. This is a wake up call for all of us to be alert on what is going on within our community and beyond. And to do something to create a better version of a Muslim as guided by Allah and our beloved Prophet.

    ReplyDelete

Powered by Blogger.