Header Ads



ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய, உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக, விரிவான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர், காவல்துறை மா அதிபர்,  அரச புலனாய்வுச் சேவையின் தலைவர்,  சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மேல் மாகாணத்துக்கான மூத்த காவல்துறை அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படவுள்ளது,

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக ஆராய சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக, விரிவான குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு, பதில் காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபரினால் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த காவல்துறை மா அதிபர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி, மற்றும் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் ஆகியோர், தமது கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறியுள்ளதால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு காவல்துறை ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்குமாறும், பதில் காவல்துறை மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.