Header Ads



நடுங்கும் முஸ்லிம் சமூகம், ரமழானும் சோபை இழந்தது - இஸ்லாமியர் பகுதிகளில் விசித்திர அமைதி


நேற்றிரவு 9:30 மணி இருக்கும். கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வருகிறேன்.

வீதிகள் வழமை போன்றே இருக்கின்றன. பெரிதாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. பிரதான வீதிகளை கழித்து ஊருக்குள் வரும்போது எந்தவித சலசலப்பும் இன்றி காய்ந்துபோய் இருந்தது ஊரெல்லாம்.  பார்க்கவே மனதுக்கு கவலையாய் இருந்தது.

தலைப்பிறை அறிவிப்புக்கள் காதுகளில் விழவில்லை.  தறாவீஹ் தொழுகைக்கு பெண்களும் சிறுவர்களும் அணிஅணியாக பள்ளிகளை நோக்கிச் செல்லவில்லை. சஹர் உணவுக்காக கடைகளில் முண்டியடிக்கும் எவரையும் காணவில்லை. சமைத்த உணவு தாளிக்கும் அந்த வழமையான மணமும் குறைந்தது. என் வீட்டில்கூட மணக்கவில்லை.

எந்த அளவுக்கு பயந்து துவண்டு சுருண்டு போய் இருக்கிறது எமது சமூகம்? முற்றுமுழுதாக முஸ்லீம்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தின் நிலை இதுவென்றால், பெரும்பாண்மை சமூகங்களின் நடுவே சிதறுண்டு வாழும் முஸ்லீம்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை அடிக்கடி எண்ணிப்பார்த்தேன். மனது நொந்து போனது.

எவ்வளவு ஆனந்தமாக வரவேற்க வேண்டிய ரமழானைக் கண்டு இம்முறை நடுங்கித் தவிக்கிறார்கள் இவர்கள். சிலர் பெரிதாக வளர்ந்திருந்த தாடிகளை வெட்டியிருக்கிறார்கள். 

சில வீடுகளிலுள்ள பெண்கள் பாதுகாப்பு படையினரின் தேடுதலுக்குப் பயந்து வீட்டில் காய்கறி வெட்டுவதற்கு வைத்திருந்த சிறிய மேசைக் கத்திகளைக்கூட தூக்கி வீசியிருக்கிறார்கள். 

இன்னும் சில அறியா மடந்தைகள் வீட்டில் அதிகமாக இருந்த குர்ஆன்களை பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறார்கள், சிலர் எரித்தும் இருக்கிறார்கள். சில பெண்கள் கறுப்பு ஹபாயா அணிவதற்கு பயந்து வீட்டைவிட்டு வெளியில் வராமல் தவிக்கிறார்கள்.

என்னவொரு கேவலம் என்பதை விட, இது எவ்வளவு கவலைக்கிடமான விடயம்? ஏன் இப்படி ஒரு நிலைமை? இந்நிலைமையின் அடுத்த கட்டம் என்ன? இதனை எப்படி சீர்செய்வது? யார் இதற்கு காரணம்? எவ்வளவு காலத்திற்கு இது நீடிக்கும்? இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் முதல் நாம் நம்மிடமேனும் ஓர் சுயவிசாரனையை மேற்கொண்டோமா? இல்லை இல்லவேயில்லை. 

கண்ட இடத்தில் படித்த நான்கு ஹதீதுகளை  அதன் அடியும் தெரியாது நுனியும் தெரியாது 
கொண்டுவந்து முப்தி முடித்தவர்களின் விளக்கத்தையும் கேளாது சண்டை செய்து உலமாக்களை மற்றவர்கள் முன் கேவலப்படுத்தியதன் விளைவா இது? 

எட்டா? இருபதா? என்று சண்டையிட்டே கடைசியில் இரண்டையும் தொழாமல் பலரையும் அனுப்பியதன் விளைவா இது?

தான் அறிந்த ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அறியாத பலதைக் கற்றுத் தரக்கூடிய தகப்பனின் கதையைக்கூட நிராகரித்த இளைஞர்களை உருவாக்கியதன் பேறா இது?

எல்லோர் மீதும் அமைதி, கருணை, காருண்யம் என்று ஆரம்பிக்க வேண்டிய இஸ்லாத்தினை கடைசியில் எங்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது உங்களது கொடூரத்தனம் பார்த்தீர்களா? 

கடும்போக்கு கொண்ட எந்த விடயமும் அபத்தமானது என்பதை இந்த சமூகத்திற்கு தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டிய பின்னர்தான் உங்கள் அறிவுக் கண்கள் விளங்கியிருக்கிறதா?

வேற்றுமைகளையே தேடித்தேடி தங்களுக்குள் வெடித்துப் பிரிந்து ஒரு தெருவுக்கு ஏழு பிரிவுகள், எட்டு பள்ளிவாசல்கள் என்று எது வரைக்கும் பிரிந்தீர்கள்? 

ஆனால் இந்த சாந்தி மார்க்கம் சொல்லித் தந்த பணிவையும் கனிவையும் ஒற்றுமையையும் பற்றி ஒருத்தரேனும் பேசினீர்களா? ஒருத்தரேனும் விட்டுக் கொடுத்தீர்களா? 

இன்று உங்கள் பிரிவினை, கடும்போக்கு, விவாதிப்பு,  நானா நீயா என்ற விதண்டாவாதம் இந்த அப்பாவி முஸ்லீம் சமூகத்தை எந்த நிலைக்கு மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? 

அறைகுறை மார்க்கப் போதகர்களே? வீட்டில் இருக்கும் குர்ஆனைக்கண்டு நம்மவர்களே பயந்துகொள்ளும் அளவுக்கு எவ்வளவு ஒரு கேவலமான நிலைக்கு உங்களின் செயற்பாடுகள் தள்ளியிருக்கின்றது? 

கண்ணீர் வடித்துக் கதறினாலும், கைகளை நீட்டி மன்னிப்புக் கேட்டாலும்,  மண்டியிட்டு மாண்டாலும் நாளை இந்த நாட்டில் சிறுவர்களும், பெண்களும், இளைஞர்களும், வியாபாரிகளும் அச்சமின்றி அந்நிய சமூகத்தின் முன்னால் எப்படிப் போய் நிற்பார்கள்? 

நீங்கள் செத்தாலும் மற்றவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா கயவர்களே? இதுவரைக்கும் மற்றவர்கள் கண்ணியமாகப் பார்த்து கனிவோடு உபசரித்து வந்த இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் உங்கள் கேவலமான சிந்தனையால் இன்று  சந்தேகத்தோடு ஒதுங்க வைத்து விட்டீர்களே. 

இதற்குப் பின்னரும் இந்தக் கனிவான இஸ்லாத்தில் கடும்போக்குடன் செயற்படுவோரை நாம் கொஞ்சமும் அனுமதிக்க கூடாது. விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது. 

கடும்போக்குடன் செயற்படுவோர் யாராக இருப்பினும், அவர்களை ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும்.கேட்கவில்லை என்றால் கிள்ளி எறிந்து விடுவது ஆகவும் நல்லது. 

இது அரசாங்கத்திற்கோ பாதுகாப்பு படைக்கோ அல்லது மாற்று சமூகத்தவருக்கோ உரிய கடமையல்ல. நம் ஒவ்வொருவர் மீதுமுள்ள கட்டாயப் பொறுப்பு.

(ஒரு முகப்புத்தகத்தில் படித்த பதிவு இது  )

5 comments:

  1. முதலில் ஒவ்வொரு ஊரில் இருக்கும் தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் பனம்,புகழ் சம்பாதிக்கும் அந்த கயவர்கலுக்கு இறுதியாக சொல்லிப்பாருங்கல்.புரியா விட்டால் எல்லா மக்களும் சேர்ந்து நல்ல பாடம் படிப்பியுங்கல்.இவர்களினை இன்னும் சில வருடங்களுக்கு விட்டு வைத்தால்,நம்மை யாராலும் காப்பாத்தமுடியாது

    ReplyDelete
  2. allahwai payanthu kozzungal thawheed thableek anru prippathal wantha vinaithan ethu nalai marumayil allah kedkum kelvikalukku pathil solla vendum anpathai marakka wendam. matravarkalin manathai novadippathil makilchchi adaya vendaam.

    ReplyDelete
  3. NAAM YEEN OAYAPADANUM
    PAYANDU WAALRATHAWIDA SAAVURUTHI NALLAM.ITHU ENGADA ULAGHAM ALLA

    ReplyDelete
  4. ஊர்களின் பள்ளிநிரு
    வாகத்திலும் வைத்தி
    யத்துறை கல்வி
    பொதுத்துறையிலும்
    தௌஹீத் ஜமாஅத்
    நவீன சித்தாந்தம்
    புற்றுநோய் போல்
    பரவியிருக்கிறது.
    இச்சூழ் நிலையில்
    பாரம்பரிய இனிய
    இஸ்லாமிய கலாசார
    த்தையும் ஐக்கியத்
    தையும் முஸ்லிம் ஊர்
    கள் மீளப்பெற்றுக்கொ
    ள்ளும் எனபது மிகக்
    கடினமான விடயமாக
    த்தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.