Header Ads



புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்தவர், விமான படைத்தளபதியாக நியமனம்

விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் கபில ஜயம்பதி நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள நிலையிலேயே புதிய தளபதியாக எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1984ஆம் ஆண்டு, சிறிலங்கா விமானப்படையின் விமானிகள் பிரிவில் இணைந்து கொண்ட எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், 1986ஆம் ஆண்டு பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளில் உயர் கல்வி மற்றும் பயிற்சிநெறிகளை கற்றுள்ளார்.

எயர் மார்ஷல் சுமங்கல டயஸ்,  இரத்மலான, வவுனியா, ஹிங்குராகொட, கட்டுநாயக்க விமானப்படைத் தளங்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.

இறுதிக்கட்டப் போரில், 57, 58, 59 ஆவது டிவிசன் படையினரின் நடவடிக்கைகளுக்குத் தேவையான வான் தாக்குதல் மற்றும் உதவி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மூத்த விமான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார்.

1991ஆம் ஆண்டு சிலாவத்துறை இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது, முகாமில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு  உலங்குவானூர்தி மூலம் உதவச் சென்றிருந்த எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.