May 13, 2019

சிக்கலுக்குள் முஸ்லீம் சமூகம் - வெறுப்புத்தீயை கொட்டும் தமிழர் தரப்பு

- டாக்டர் எஸ் . நஜிமுதீன் - 

இன்றைய நாட்டு சூழலில் தமிழர் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய மக்கள் முஸ்லீம் மக்கள் மீது எவ்வளவு தூரம் கடுப்பில் இருந்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையாக வெளி வந்து கொண்டிருக்கிறது, எல்லோரையும் குறிப்பிடாவிட்டாலும் ஊடகங்கள், முக்கியமாக தமிழ் பேசும் மக்களின் சக்தி, வீரமான தமிழ் பத்திரிகை என்றும், வீதிகளிலும் வித்தியாசாலைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த கடுப்பின் வேக்காட்டினை உணரக்கூடியதாக உள்ளது. அதுவல்ல பிரச்சினை, அது அவர்களின் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. அவர்களுக்கு முஸ்லீம் சமூகம் செய்த துரோகத்துக்கு அவர்கள் காட்டுகின்ற எதிர்வினை என்பது அவர்களின் வாதமாக இருக்கலாம், அவர்கள் இதனை வெளிப்படையாக சொல்லா விட்டாலும், அவர்கள் சொல்ல வருவது அதுவே,

ஜூலை கலவரத்தின் போது தமிழரை காப்பாற்றிய ஒரு சமூகம், அவர்களின் துயரங்களுக்கு கைகொடுத்த ஒரு சமூகம், அவர்களுடன் ஒன்றாகவே உறவாடி வாழ்ந்த சமூகம் ஒரே பாஷையினை தாய் மொழியாய் கொண்ட ஒரு சமூகம், இன்னும் சிறிது தூரம் சென்றால் ஆரம்பத்தில் இனவிடுதலை போராட்டத்தில் தானாகவே தங்களை இணைத்துக் கொண்டிருந்த ஒரு சமூகம் எப்படி துரோகியானது,

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.தொண்ணூறாம் ஆண்டு ஜூன் மாதம் பதினோராம் திகதி, நான் அம்பாறை வைத்தியசாலையை பாரம் எடுத்த மறுநாள். இலங்கையின் துயர யுத்தம் அத்தியாயம் இரண்டு ஆரம்ப மாகிறது. அது ஆரம்பித்த இடமே அம்பாறைதான். முழு கிழக்கு மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த விடுதலை புலிகள், சகல போலீஸ் நிலையங்களையும் கைப்பற்றி அறுநூறுக்கு மேற்பட்ட போலீசாரை சுட்டு கொன்று புதைத்த நாளுக்கு மறுநாள், முழு அம்பாறையிலும் தமிழர் விரட்டியடிக்கப்பட்டு கொலை வெறியுடன் சிங்கள சமூகம் அலைந்த போது முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர்  ஜெகநாதன்,டாக்டர் சண்முகநாதன்,டாக்டர் சதுர்முகன் ஆகியோருடன் சேர்த்து பொறியியலாளர் செந்தில்நாதன் வரை அம்பாறை வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டியில் கொழும்புக்கு அனுப்பி வைத்து அவர்கள் உயிர்களை காப்பாற்றிய அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்,

இதில் டாக்டர் ஜெகநாதன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆக பதவி பெறுகின்றார், டாக்டர் சதுர்முகன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகிறார். டாக்டர் சதுர்முகன் ஒரு பல்வைத்தியர், அம்பாறை வைத்தியசாலை பற்சிகிச்சை பிரிவு அவரது பொறுப்பில் இருந்தது, அவரது உபகரணங்களின் இன்வெண்ட்டரி என்கின்ற இருப்பைக் கூட பாரம் கொடுப்பதற்கு அவரை வர வேண்டியதில்லை என்று முழுப் பொறுப்பையும் நானே பாரம் எடுத்து  முழு விடுவிப்பு கொடுத்து அனுப்பி வைத்ததை அவர் இன்று வரை மறக்கவில்லை.

அன்றிரவு எனது குடியிருப்பாகிய வைத்தியர் விடுதியில் தஞ்சமடைந்த தமிழ் உயிர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. நடுநிசியில் என் கதவை தட்டிய அந்த உயிர்கள் காப்பாற்றப்பட்டமை மட்டுமே எனது ஒரேயொரு திருப்தியாகும்.

எண்பத்தைந்தாம் ஆண்டு காரைதீவு சந்தியில் வைத்து முஹம்மது காசிம் என்கின்ற ஆசிரியரின் மீது நடாத்தப்பட்ட அனாவசியமான தாக்குதல் தான் தமிழ் முஸ்லீம் உறவின் விரிசலுக்கு வித்திட்ட முதல் சம்பவம் என்பது பலர் அறியாததாய் இருக்கலாம். அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாய் பயன் படுத்திய இலங்கை படையினர் முழு காரைதீவு மக்கள் மேல் மேற்கொண்ட மிலேச்ச தனமான தாக்குதல் தான் அந்த விரிசலுக்கான அத்திவாரம் என்பது என் போன்றோரது கண்கண்ட சாட்சிகளின் முடிவு,சாய்ந்தமருதில் பிறந்தவன் என்ற வகையில் அன்றைய தாக்குதலுக்கு கைகொடுத்த சில இளைஞர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகள் இரண்டு இனத்தையும் மிகவும் தூரமாக்கியது.

அதன் பின்னர் நான் அனுராதபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் கால கட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் மன்னார் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய இரண்டு நிந்தவூர் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். அவர்களை சோதித்து குளிப்பாட்டி கபனிட்டு பள்ளி நண்பர்கள் மூலம் அவர்களது  ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் இன்னும் பசுமரத்தாணி போல் பதிந்து நிற்கிறது.

அதன் பின்னர் சாய்ந்தமருது வைத்தியசாலையை பாரம் எடுத்து இன்னும் பலப்பல சம்பவங்களின் சாட்சியாக மாறுகிறேன், இரவுகள் எல்லாமே பயங்கரத்தை போர்த்திய பொழுதுகள் அவை. ஒவ்வொரு நாள் விடிவதே மிகவும் திகிலாய் போன அந்த நிமிடங்களுடன் ஒப்பிடும்போது இன்றைய திக் திக் நிமிடங்கள் சருகாகத் தெரிகிறது. யாருடைய உதவியோ பாதுகாப்போ இல்லாத அந்த இரவுகளுக்கு மீண்டும் திரும்புதல் சாத்தியமில்லை.

அதன் பின்னர் எண்பத்தி எட்டாம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி எனறு நினைக்கிறேன். திகிலின் உச்ச கட்டம், சாய்ந்தமருது என்கின்ற ஊர் முழுவதுமாய் சூறையாடப்படுகிறது. காரைதீவில் இருந்துதான் தாக்குதல் ஆரம்பமானது. சொத்துக்கள் மட்டுமல்லாது உயிர்களும் பலியெடுக்கப்பட்டன. அவற்றுள் சில பள்ளிவாசலுக்குள்ளும் நடந்தன. விரிசல் உச்சக் கட்டத்துக்கு சென்றது. அதன் பின்னர் தான் தொண்ணூறாம் ஆண்டு ஜூன் மாதம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் முழுவதும் கைப்பற்றப்பட்டு போலீசார் சரணடையச் செய்யப்பட்டு சிங்களவர் மற்றும் முஸ்லீம் வேறாக பிரிக்கப்பட்டு ஆறு நூறுக்கு மேற்பட்டோர் ஒரே இரவில் சமாதியாக்கப்பட்டனர். அதில் தப்பிய ஒரேயொரு போலீஸ்காரர் மறுநாள் அம்பாறை வைத்தியசாலையில் என்னிடம் வந்து சேர்கிறார். அவர் மட்டுமே அதற்கான சாட்சி. இன்று வரை அவர்கள் புதைக்கப்பட்ட இடம் கூட அடையாளம் காணப்பட்டதா என்பதை நானறியேன், இந்த அறுநூற்றுக்கு மேற்பட்ட போலீசாரில் எனது ஒன்று விட்ட சகோதரனும் ஒருவன் என்பது கொசுறு செய்தி.

அன்று தொடங்குகிறது ஈழம் யுத்தம் -2, அதிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் கண்டதெல்லாம் கொலையும், குண்டு வெடிப்புமே. அவற்றுள் குறிப்பிட்டு சொல்லக் கூடியவை பலப்பல, ஆனால் நான் கண்ட சம்பவங்களில் இரண்டாகிய  பண்டாரதுவ, உணுவத்துற புபுல  வெறியாட்டங்கள். இரண்டிலும் பாவிக்கப்பட்டிருந்தவை துப்பாக்கிகளோ குண்டுகளோ அல்ல. கத்திகளும். வாள்களும்,கோடாரிகளும் மட்டுமே. பண்டாரத்துவவில் 35, உணுவத்துறப்புபுல வில் 29, பெண்கள் சிறுவர், குழந்தைகள் உட்பட. அதில் ஒரு குழந்தை பிறந்து சிலநாட்களே ஆகி இருக்க வேண்டும். அதனை தலையிலிருந்து கால்வரை இரண்டாக பிளந்து இருந்தார்கள். இவர்களுக்கான பிணப்பரிசோதனை செய்தவன் நானே என்ற வகையில் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளலாம். இன்றைக்கு உலகில் அரங்கேறும் எந்த அநியாயத்துக்கும் இவை குறைவானவை அல்ல.

ஒரு வைத்தியனின் அனுபவக்குறிப்பாக இவற்றை எழுத்து வடிவில் கொண்டு வர உத்தேசம் உண்டு. 

இந்தக் கால கட்டத்தில் தான் காத்தான்குடி ஏறாவூர் சம்பவங்கள் நடக்கின்றன. இப்படியான  சம்பவங்களின் பின்னர்தான் முஸ்லீம் சமூகம் படையினரை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வரவேற்க தொடங்கியது. அதற்கான பிரதிபலிப்பாகவே வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்று வரை நீறு பூத்த நெருப்பாக தமிழ் முஸ்லீம் உறவு இலங்கை முழுவதும் கனன்று கொண்டிருந்தது.

தற்போதைய சூழலில் சில தறுதலைகளின் செயற்பாட்டால் தருணம் பார்த்திருந்த வெறுப்புத்தீ வெந்தணலை முஸ்லிம்கள் மேல் கொட்டித் தீர்க்கப் பார்க்கிறது.தமிழர் தரப்பு. இந்த தீ ஒவ்வொரு தமிழ் நெஞ்சிலும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அது அப்படிதான் இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு தமிழனின் கனவும் கலைந்து போன கணங்கள் முஸ்லிம்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன என நான் கருதுகிறேன். அது சிங்கள அரசாங்கம் செய்த சதி. முஸ்லிம்களை  தமிழருக்கு எதிரியாக்குவதன் மூலமே தனது இலக்குகளை பேரினவாதம் அடைந்து கொண்டிருக்கிறது.

தமிழ் ஈழ கனவு கலைந்த நிலையில் புதிய அரசியலமைப்பில் வடகிழக்கு இணைந்து செயற்பட பாடுபடும் நிலையில் இன்று புதியதொரு கோணத்தில் தமிழ் முஸ்லீம் உறவு உரசலுக்கு உள்ளாக்கப் படுகிறது. 

முஸ்லீம் சமூகம் பாரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கும் இந்த தருணத்தில் தமிழர் தரப்பினர், முக்கியமாக அரசியல் தலைமைகள், தமிழ் ஊடகங்கள். சிவில் சமூகம், சமூக ஊடகங்கள், பொது மக்கள் என்று பலரும் முஸ்லிம்களை அரவணைத்து ஆறுதல் அளிக்க வேண்டிய தருணத்தில் தங்களது வெறுப்புத்தீயை மட்டும் கொட்டி தமக்கு சாதகமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கான ஒத்துழைப்பினை கோட்டை விட்டுக கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.

தமிழரது வெறுப்பினை   ஒட்டு மொத்த முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதிலும், ஹிஜாப், ஹபாயாவுக்கான எதிர்ப்பிலும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவை இரண்டிலுமே இவர்கள் வெற்றியடையப் போவதில்லை.5 கருத்துரைகள்:

ஒருவகையில் இந்த தமிழ் பயங்கரவாதிகள் யாரென்று எம்முடைய வருங்கால இளைஞர் சமூகத்திற்கு இன்று நடக்கும் சம்பவங்கள் புரியவைத்துக்கொண்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் ஈழம் சமஷ்டியென்று வரும்பொழுது முஸ்லிம்களின் கால்கள் தேவைப்படும். அன்று எட்டி உதைப்போமே தவிர இந்த கிருமிகளை ஆதரிக்க மாட்டோம்

There are so many incidents where Muslims extended helping hand to them during the difficult time but they are inviting enmity when we're in trouble. They should keep one thing in mind that time changes.

இந்தத் தமிழர்களுக்கு இன்னுமொரு இக்கட்டான நிலைமை வரும்போது உணர்வார்கள் இவர்களுடைய செயற்பாடுகளின் வினைனை

Try to live friendly with the majority and the government other people are opportunities

Post a Comment