Header Ads



ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அவதானத்திற்கு...!

காத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன்.

கடந்த 21ம் திகதி எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களும் குறிப்பாக எமது காத்தான்குடி பிரதேச  மக்களும் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் குறித்து தாங்கள் அறிவீர்கள்.இது மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாத்திரமல்லாது அவர்களது இருப்புக்கான உரிமை,ஆடைச்சுதந்திரம், பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை, சுயகௌரவம் என்பவற்றினையும் இன்று கேள்விக்குள்ளாக்கியுள்ளது.இதனால் இன்று எமது நாட்டு  முஸ்லிம்களும் காத்தான்குடி மக்களும் மிகுந்த அச்சத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அத்தோடு முஸ்லிக்களுக்கெதிரான பாரிய வன்முறைகளாகவும் இது மாறி , ஒரு உயிரையும் பல நூறு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் காவு கொண்டுள்ளது.

 எனினும் குறித்த துன்பியல் சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் கடந்து விட்ட நிலையிலும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகள் தொடர்பில் எதுவித கருத்துக்களையும்  இதுவரை வெளிப்படையாக நீங்கள் முன்வைக்கவில்லை என்பதும் , அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும்  எமக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இவ்வசாதாரண சூழலில் உங்கள் மீதும் பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் இனவாத சக்திகள் முன்வைத்து வருகின்ற போதிலும் மக்கள் பிரதிநிதி என்றவகையில் நீங்கள் இக்கால சூழலில் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமைப்பாடு உங்களுக்குள்ளது. 

கடந்த பல தசாப்தகாலங்களாக  நீங்கள் எமது முஸ்லிம் அரசியல் களத்தில் பல்வேறு பதவி நிலைகளையும் வகித்து வந்துள்ளீர்கள்.உங்கள் அரசியல் பயணத்தில் பதவிகளை வகிக்காத காலப்பகுதி என எதனையும் குறிப்பிட்டுச்சொல்ல முடியாத அளவிற்கு  காலத்திற்கு காலம் பல முக்கிய பதவிகளையும் வகித்து வந்துள்ளீர்கள். இப்பதவிகளையும் அதிகாரங்களையும் உங்களுக்கு பெற்றுத்தந்தது காத்தான்குடியான் பல்லாயிரக் கணக்கான மக்கள் உங்களுக்கு அளித்த வாக்குகளும் ஆதரவுமேயாகும்.இதனை நீங்களும் மறுக்க மாட்டீர்கள்.எனவே மக்கள் இன்று சகல வழிகளும் மூடப்பட்ட நிலையில் அரசியல் அநாதைகளாக நின்று கொண்டிருக்கும் தருணத்தில் நீங்கள் இன்னும் மௌனமாக இருப்பது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் அநியாயமாகும்.

 குறிப்பாக நீங்கள் தற்பொழுது வகித்து வருகின்ற கிழக்கு மாகாண ஆளுனர் பதவியானது ஏனைய பாராளுமன்றப்பதவிகளையும் விட அதிகாரரீதியில் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒரு பதவியாகும். இன்று எமது நாட்டில் தோன்றியுள்ள பிரதான சவால் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகும். இதனை முறியடிப்பதற்காக பாதுகாப்புத்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற அனைத்து நடவடிக்கைகளிற்கும் இந்நாட்டின் குடிமக்கள் என்றவகையில் முஸ்லிம்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். அது நமது கடமையுமாகும்.


ஆனால் இவை அனைத்தையும் மலினப்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் மீதான இனவாத அடக்கு முறைகளையும் அராஜக தாக்குதல்களையும் இனவாத சக்திகள் மிக வலுவாக முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பக்கவாத்தியமாக சில இனவாத ஊடகங்களும் முஸ்லிம்களுக்கெதிரான ஊடகப்பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.இதனால் இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு இன்று பாரிய கேள்விக்குறியாகியுள்ளது.
  தற்போதைய சூழலில் இந்நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இனவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடிய  அதிகாரம்  ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளது.

 எனவே பதவி வழியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒருவர் என்ற வகையிலும் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பினைக்
கொண்டுள்ள ஒருவர் என்ற வகையிலும் எமது  பிரதேச மக்களும் ஏனைய மக்களும் எதிர்நோக்கி வருகின்ற பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து  உடனடியாக வேண்டுகோள் ஒன்றினை நீங்கள் ஜனாதிபதிக்கு விடுக்கவேண்டும்.

குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது போலவே எந்தவொரு நிரபராதியும் அநியாயமாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை எமதூரில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையோ பெயர் விபரங்களோ முறையான பதிவுகளாக எம்மிடம் இல்லை. அதில் எத்தனை பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்கிற விபரங்களும் எவருக்கும் தெரியவில்லை. எனவே இது குறித்த தகவல்களையும் உடனடியாக ஆவணப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் எமது ஊரினையும் அப்பாவிப் பொதுமக்களையும் சம்பந்தப்படுத்தி பரப்பப்பட்டுவரும் இனவாதக்கருத்துக்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் மிக விரிவான தெளிவான அறிக்கை ஒன்றினை நீங்கள் பொதுமக்கள் சார்பாக அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் சர்வதேச நாடுகளுக்கும் மிகவிரைவில்   வெளியிட வேண்டுமென இவ்வூர் மக்கள் சார்பாகவும் பிரதேச முஸ்லிம்கள் சார்பாகவும் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இந்த நடவடிக்கைகளை, நீங்கள் இப்போதாவது உடனடியாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பதனை மன ஆதங்கத்துடனும் வேதனையுடனும் உங்களிடம் ஒரு அவசர வேண்டு கொள்க முன்வைக்கின்றேன்.

முஹம்மத் பாயிஸ்

5 comments:

  1. நன்பர் faiz உங்கள் கருத்துக்கள் உண்மையில் சகோ.hizbullah அவர்க்லினால் மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு வாய்ந்த விடயம்.அடுத்தது காத்தான்குடி மக்களே உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்,எங்கிருந்து யார் யார் யாரெல்லாம் எவ்வாரான பித்னாக்கலை கொண்டு வந்தாலும் அது பரீட்சிக்கும் களமாகவும்,மக்களால் வரவேற்கப்படும் இடமாகவும் காத்தான்குடி இவ்வளவு காலமாகவும் இருந்தது.இனியாவது இப்படியான பித்னாக்கல் வளரக் கூடிய இடமாக விட்டு விட வேண்டாம்.காத்தான்குடி மக்கள் ஒர்ருமையுடனும்,நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  2. ஹிஸ்புல்லாவை வைத்துத்தான் வியாழேந்திரன் உட்பட கூடுதலான TNA அரிசியல்வாதிகள் பிழைப்பு நடத்தத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹிஸ்புல்லாஹ்வே இருதலைக்கொள்ளி எறும்பாக ஓடித்திரியும் போது, பாவம் அவரால் என்னதான் செய்யமுடியும்.
    இது எல்லாமும், இவரினதும் நம் மற்றைய அரசியல் தலைவர்களினதும் விளைச்சல்கள்தாம்.
    இனியாவது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவன் கிடைப்பானா?
    இது ஒருபுறம் இருக்க...

    எங்கே நம் 'நல்லாட்சிக்கான தேசிய முன்னணி' வீரர்? உப்புச்சப்பில்லாத விடயங்களுக்கெல்லாம் கொழும்புக்குப் போய் ஹர்த்தால் பண்ணுவாரே! ஏன் இப்போது பதுங்குகிறார்?

    இப்படியான இக்கட்டான நிலைமையில் மாற்றத்திற்கான ஒரு கட்சி என்று இஸ்தாபித்தவரே இஸ்தம்பித்து நின்றால்...

    இவ்வாறானர்கள்தான் இப்போதிருக்கும் வாலாயத் தலைவர்கள். இந்த நாற்காலி ஆசைக்காரர்கள் எமக்கு இனி வேண்டாம்!

    நாம் நம் தலைவனைத் தேடுவோம்!

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் தற்போதய நிலைக்கு இவரும் ஒரு காரணம்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Inefficient to protect the people and efficient to induce terrorism

    ReplyDelete

Powered by Blogger.