May 04, 2019

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு பலியான, வெளிநாட்டவர்களின் துயரக் கதைகள்

உலகின் சிறந்த சுற்றுலா மையம் வெடித்துச் சிதறி விட்டது. அது மரணத்தின் பள்ளத்தாக்காக மாறியுள்ளது. ஈஸ்டர் தினத்தை இரத்த ஆறாக மாற்றி உலகையே சோகத்திலாழ்த்தியது பயங்கரவாதம்!

இலங்கையின் இயற்கை அழகை ரசித்து, ஈஸ்டர் விடுமுறையை இங்கு கழிக்க வந்த, இந்த நாட்டை நேசித்த வெளிநாட்டவர்கள் 37 பேர் குண்டுவெடிப்புகளில் மரணமடைந்து விட்டார்கள். தாங்கள் பிறந்த நாட்டை விட்டு பல கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் வந்து மரணமடைந்தவர்கள் தொடர்பாக கண்ணீர்க் கதைகளை இங்கு கூற வேண்டியுள்ளது. மறைந்த அனைவரினதும் உயிர்களின் பெறுமதி ஒன்றே. இலங்கையரின் விருந்தோம்பலை மிகவும் விரும்பி இங்கு வந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக மரணத்தை தழுவியுள்ளனர்.

சயான் சௌத்ரி என்ற மழலை எட்டு வயதான செல்லப் பிள்ளை. அவன் பங்களாதேஷின் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவன். பங்களாதேசின் அரச குடும்ப வாரிசாவான். பாடசாலை விடுமுறையைக் கழிக்க தனது தாயார் ஷேயிக் அமீனா, சுல்தான சோனியா, தந்தை மஷியல் ஹக் சௌத்ரி மற்றும் தனது ஒரே சகோதரரான சொஹானுடன் குண்டுவெடிப்புக்கு சில நாட்களுக்கு முன்னரே இலங்கை வந்திருந்தான் அச்சிறுவன்.

சயான் சௌத்திரி பங்களாதேஷ் பிரதமர் செயினி ஹசீனாவின் சகோதரியின் புதல்வனது மகன் என்பதால் பங்களாதேஷத்தில் அனைவரினதும் அன்புக்கும் பாத்திரமாகியிருந்தான்.

அதுமாத்திரமல்ல சயான் சௌத்ரியின் தாயார் ஷெயிக் அமீனா, பங்களாதேசின் அவாமி லீக் கட்சியின் பிரதான தலைவரான ஷெயிக் பஸ்துல் கரீம் செவிமின் புதல்வியாவார். அவர்கள் கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் ஆறாவது மாடியில் தங்கியிருந்தார்கள்.

ஈஸ்டர் ஞாயிறன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த வேளையில் சயான் தனது தந்தையுடன் கீழ் தளத்திலிருந்த சிற்றுண்டிச்சாலையில் உணவு அருந்திக் கொண்டிருந்தான். சொஹான் தனது தாயாருடன் அறையில் தங்கியிருந்தார்.

திடீரென மனித வெடிகுண்டு வெடித்தது. காலை உணவு அருந்திக் கொண்டிருந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். வெடிகுண்டின் சத்தம் கேட்டு சயானின் தாயாரும் சகோதரனும் சிற்றுண்டிச்சாலைக்கு ஓடி வந்தார்கள். யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் தனது கணவர் மாத்திரம் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தார். தனது புதல்வனின் இறந்த உடல் வைத்தியசாலை பிணவறையில் இருந்து இரவு எட்டு மணியளவில் உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

சயானின் உடல் ஸ்ரீலங்கன் விமானம் மூலம் பங்களாதேஷுக்கு கொண்டு செல்லப்பட்டது. சயானின் தந்தை சிகிச்சை பெற்று வந்தார். குண்டு வெடிப்பால் அவரது கால்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவருக்கு இன்னும் சில சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரச குடும்பத்தின் வாரிசான சிறுவன் சயானின் மரணத்தை பங்களாதேஷின் பிரதான பத்திரிகைகள் மிகவும் சோகமான செய்தியென குறிப்பிட்டிருந்தன. டாக்கா டிரிபியூன் பத்திரிகையானது அச்சிறுவனை தனது பாட்டனாரின் அரசியல் நண்பர்களது செல்லக் குழந்தை என குறிப்பிட்டிருந்தது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் பங்களாதேஷின் பிரதமர் புரூணைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார். "எனது உறவினர் ஒருவரும் இறந்துள்ளார். அவருக்காகவும் இறந்த அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” என தனது நாட்டு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இலங்கையில் வைத்தியசாலை அமைத்த மோனிக் எலன்:

அமெரிக்கப் பிரஜையான சர்வதேச இரத்தினக்கல் வியாபாரி லுவிஸ் எலனுக்கு இலங்கை மிகவும் பரிச்சயமான இடமாகும். அவர் அடிக்கடி இலங்கைக்கு இரத்தினக்கல் வியாபாரத்துக்காக மாத்திரமன்றி, இலங்கையில் சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்றை அமைக்கவும் வருகை தந்துள்ளார். இம்முறை அவரது வருகையின் நோக்கம் தனது குடும்பத்தாருக்கு தான் கட்டிய வைத்தியசாலையைக் காண்பிப்பதாகும். ஆனால் அவ ரது நோக்கம் வேதனையில் முடிவுற்றது.

அவர் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தனது புதல்வர்கள் இருவருடன் யாரையோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தேடிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் குண்டுவெடிப்பு காரணமாக லுவிஸ் எலனின் மனைவி மோனிக் எலன் மரணமடைந்திருந்தார்.

கடந்த வருடம் இரத்தினபுரி பெரியாஸ்பத்திரியில் சிறுவர்களுக்காக இர ண்டு மாடிகளைக் கொண்ட சிறுவர் வார்ட் தொகுதியொன்று அமைக்கப்பட்டது. அதில் 107 கட்டில்களுடன் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அடிக்கடி இலங்கைக்கு வருகை தரும் லுவிஸ் எலன் இரத்தினக்கல் வியாபாரிகளான புன்சிறி தென்னக்கோன், பிரியன்த சில்வா மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோருடன் இணைந்து சிறுவர்களு க்கான வார்டை அமைந்துள்ளார் .

அதனை அமைக்க விசேட காரணமொன்று அவருக்கு இருந்தது. அவர் மரணமடைந்த தனது மகனின் நினைவாகவே அவர் இந்த வைத்தியசாலையை அமைக்க உதவி செய்துள்ளார். 100 மில்லியன் ரூபாவில் கட்டப்பட்டுள்ள வைத்தியசாலையை காண்பிப்பதற்காகவே லுவிஸ் எலன் தனது மனைவி மோனிக் எலன் மற்றும் புதல்வர்களான ஜெஸன், திமோதி, ஜெஸ்பர் ஆகியோருடன் ஈஸ்டர் விடுமுறை வேளையில் இலங்கைக்கு வந்துள்ளார்.

“நான் இம்முறை விடுமுறையைக் கழிக்க வியட்நாமுக்கு செல்வோம் என்றே கூறினேன். ஆனால் மோனிக் கூறினார் 'நீங்கள இலங்கையில் கட்டிய வைத்தியசாலையைப் பார்க்க விரும்புகின்றேன். நாம் இலங்கைக்குச் சென்று அதனைப் பார்த்து விட்டு மூன்றாவது மாடியை கட்டவும் உதவி செய்வோம்' என்று கூறினார்."

இவ்வாறு எலன் லூவிஸ் கூறினார்.

கடந்த 16ம் திகதி அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் கொழும்பில் சினமன் கிரான்ட் ஹோட்டலிலேயே தங்கியிருந்தார்கள். கடந்த 20ம் திகதி வைத்தியசாலையைப் பார்வையிட சென்றுள்ளார்கள். வைத்தியசாலையைப் பார்வையிட்ட அவர்கள், பலர் அங்கு சிகிச்சை பெற்று சென்றிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். அதனால் மோனிக் எலன் தம்பதியர் இரண்டு வருடங்களில் சத்திர சிகிச்சை வார்டொன்றையும் அமைக்க உறுதியளித்துள்ளார்கள். ஒரு மணித்தியாலமளவில் அங்கு செலவிட்ட அவர்கள் மீண்டும் கொழும்புக்கு வந்தனர்.மறுநாள் இலங்கையை விட்டு பயணிக்கவே அவர்கள் வந்துள்ளார்கள்.

ஈஸ்டர் ஞாயிரன்று பகல் 2 மணிக்கு பாங்ெகாக் செல்வதே அவர்களின் நோக்கமாகும். அது தொடர்பான பயண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மகன்மார் இருவருடன் புறப்பட்டுச் சென்றார். இதேவேளை மோனிக் எலன் தனது மூத்த புதல்வருடன் காலை ஈஸ்டர் உணவருந்த சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றார். குண்டுதாரி சினமன் கிரான்ட் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்தார். லுவிஸ் எலன் பிள்ளைகள் இருவருடன் வைத்தியசாலையில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடியலைந்தார். காயமடைந்த மகனை மாத்திரமே கண்டுபிடித்தார். தனது மனைவியின் உடலை பொலிஸ் பிணவறையிலேயே கண்டுபிடித்தார். மோனிக் எலன் இலங்கையை விட்டுப் போகவில்லை. அவர் மிகவும் நேசித்த பூமியிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் வருகை:

பிரித்தானியாவில் அதிக வருமானம் பெறும் நிறுவனம் ASOS என்னும் பெயரில் அழைக்கப்படும் ஆடை விற்பனை நிறுவனமாகும். அதன் பெருமளவு பங்குகளுக்கு உரித்தானவர் அன்டர்சன் ஹோல்க் போர்சன் ஆவார். அவர் டென்மார்க்கின் பணக்கார வர்த்தகராவரர். அவர் Zalando என்னும் ஜெர்மன் நிறுவனத்தினதும் உரிமையாளர்.

டென்மார்க்கில் காணி விற்பனைத் துறையில் முதன்மையானவரான அவர் 220,000 ஏக்கர் காணிக்கு சொந்தக்காரராவார். பிள்ளைகள் மூவரும் ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்தார்கள். அவர்கள் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அந்த வியாபாரியின் பிள்ளைகள் உருத்தெரியாதவாறு குண்டு வெடிப்பினால் சிறைந்து போயுள்ளார்கள்.

ஈஸ்டர் தினத்தன்று மனைவியும் ஒரு மகளும் ஹோட்டலிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளார்கள். அன்டர்ஸன் தனது இரண்டு மகள்களுடனும் மகனுடனும் காலை உணவருந்த சென்ற வேளையில் முதலாவது குண்டு வெடித்தது. அதிலிருந்து தப்பிய அவர்கள் கீழ் தட்டுக்கு வந்த போது இரண்டாவது குண்டு வெடிப்பில் சிக்கிக் கொண்டார்கள். அன்டர்ஸன் சிறு காயங்களுடன் தப்பிக் கொண்டார். மகனும் இரண்டு மகள்மாரும் மரணமடைந்து விட்டார்கள்.

இந்த கோடீஸ்வரரின் பிள்ளைகளின் உருக்குலைந்த உடல்களை அடையாளம் காண முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அவர்களின் உடல்கள் கொழும்பு நீதிமன்றம் வைத்திய அதிகாரி காரியாலய குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டிருந்தன.

ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸ் அதிகாரிகள் சிலர் இலங்கைக்கு வந்திருந்தார்கள். டென்மார்க் நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் மற்றும் டென்மார்க் வைத்திய நிபுணர்கள் சிலரும் வந்திருந்தார்கள். அவர்கள் இந்நாட்டு நீதிமன்ற அதிகாரிகளிடம் இறந்த பிள்ளைகளின் உடலை அடையாளம் காண விசேட பரிசோதனையை தங்களது நாட்டில் நடத்தவுள்ளதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரினார்கள்.

அதன்படி தமது நாட்டின் நிபுணர்கள் பரிசோதனையை பூர்த்தி செய்து உறுதி செய்த பின்னர் மீண்டும் வந்து உடல்களை பொறுப்பேற்கவுள்ளார்கள். ஸ்கொட்லன்யார்ட் பொலிஸார் குண்டுவெடிப்பு இடம்பெற்ற கொழும்பு சங்கரிலா ஹோட்டல் வளாகத்தில் விசேட விசாரணை நடத்தவும் அனுமதி கோரியுள்ளார்கள்.

ஜப்பான் சமையற்கலை

நிபுணரின் மனைவி:

கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் ஜப்பான் சமயற்கலை நிபுணர் முகங்கொடுத்த துரதிர்ஷ்டமான சம்பவமும் இதனிடையே உள்ளது. இவரின் மனைவியும் பிள்ளைகள் மூவரும் இவர்கள் பணிபுரியும் ஹோட்டலுக்கு ஈஸ்டர் விடுமுறையை கழிக்க வந்துள்ளார்கள்.

குண்டு வெடிக்கும்போது சமையற்கலை நிபுணரின் மனைவியும் மூத்த மகளும் உணவருந்தச் சென்றுள்ளார்கள். அவரும் ஏனைய பிள்ளைகளும் ஹோட்டலின் வேறு இடத்தில் இருந்துள்ளார்கள். குண்டுவெடித்தவுடன் அவர் மனைவியையும் பிள்ளையையும் தேடிய போது மனைவி கீழே விழுந்து கிடந்துள்ளார். மகள் எவ்வித பாதிப்புமின்றி அருகில் இருந்துள்ளார். மனைவியை வைத்தியசாலைக்கு அனுமதிக்க முயற்சி செய்தபோது குண்டு வெடித்த அதிர்ச்சியினால் சமையற்கலை நிபுணரும் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவிக்கு அனைத்தும் ஞாபகமிருந்தது. அவர் அதுபற்றி அனைவருக்கும் கூறினார். ஆனால் விதியின் கொடூரம் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் மரணமடைந்துள்ளார். நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் உடலை பரிசோதித்த போது அவரது உடலை சிறிய இரும்புத் துண்டுகள் தாக்கியிருந்தன.

மனைவி, இரண்டு

பிள்ளைகளை இழந்த தந்தை:

பிரித்தானியரான பென் நிகள்சன் சிங்கப்பூரில் வசிப்பவராவார். அவரும் அவருடைய மனைவியும் சிங்கப்பூரில் பிரபலமான அகழ்வு நிறுவனமொன்றில் சட்டத்தரணிகளாக பணியாற்றுகின்றார்கள். பென்னின் மனைவி எனிட்டாவும் மகள் எலெக்ஸ் மகள் எபைல் என்பவரும் ஈஸ்டர் விடுமுறையை கழிக்க இலங்கையை தெரிவு செய்தார்கள். அவர்கள் சங்கிரிலா ஹோட்டலிலேயே தங்கிருந்தார்கள். ஹோட்டலில் இரண்டாவது மாடியில் குண்டு வெடித்த போது மனைவி இறந்து விட்டார். அந்த துயரத்துடன் அங்குமிங்கும் ஓடி தனது பிள்ளைகளைத் தேடினார்.

ஓரிடத்தில் கனவிலும் நினைக்காத காட்சியாக மகன் இறந்து கிடந்தான். ஆனால் மகளைப் பற்றிய தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவளும் இறந்திருப்பார் என தந்தை அறிவார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவர் தயாரில்லை.

உலகத்தையே மரணவீடாக மாற்றிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பல வெளிநாட்டவர்கள் இறந்துள்ளார்கள்.

இந்த கட்டுரையை எழுதும் வேளையிலும் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அடையாளம் காணப்படாத வெளிநாட்டவர்கள் 17 பேரின் உடல்கள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவை அடையாளம் காணமுடியாத நிலைமையில் காணப்படுவதாலும் அவர்களின அடையாளத்தை உறுதிப்படுத்த உறவினர்கள் இங்கு இல்லாமையாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் லங்கா ஜயரத்னவும் வைத்திய அதிகாரிகளும் நேரடியாக தலையிட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினாலும் அவர்களே எதிர்பாராத வகையில் சிக்கல்கள் உள்ளன.

1 கருத்துரைகள்:

for Ramadan reward Russia & Assad ally started their air bombardment in Idlib - Syria. for 3-4 days more than 300 people killed. Including women & children. Also in Palestine , Israel started bombing for Ramadan, here & there all innocent live without any reasons. who is behind on these cruel act.

Post a comment