May 22, 2019

முஸ்லிம் சமூகத்தின் முன், இருக்கின்ற சவால்கள் என்ன...?

ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயல். எந்தத் தரப்பிலிருந்தும் இதற்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க முடியாது. இருந்தும் இதனை நிகழ்த்துவதற்கு ஒரு சாராருக்கு நியாயம் ஒன்று இருந்திருக்கிறது. இதற்குப்பின்னால் மதஅமைப்புக்களோ அல்லது அரசியல் காய் நகர்த்தல்களோ எவையாக இருப்பினும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

இந்தத் தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று ISIS பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. இஸ்லாம் மதத்தின் பெயரால் இவ்வமைப்பின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை பலரும் அறிந்ததே. குறிப்பாக, இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் ((NTJ)) என்ற ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வமைப்போடு சேர்த்து ஜமாஅத்தே மில்லத் இப்றாஹீம் ((JMI) எனும் அமைப்புக்கும் அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில முஸ்லிம் தீவிரவாதிகளினால் 300 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்த அவலத்தைத் தொடர்ந்து, நாட்டில் நிகழ்ந்தேறுபவை குறித்து நாம் அறிந்து கொண்டும், இடைவினையாற்றிக் கொண்டும் வருகின்றோம்.

இலங்கையில் யுத்த வரலாறும், அதன் இழப்புக்களும், அதன் பின்னரான விளைவுகளும், வடுக்களும் நாம் அறிந்தவையே. அவ்வாறானதொரு மோசமான சூழ்நிலையை நாம் யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் எதிர்கொண்டு, அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் இன்றைய துரதிஷ்டவசமான நிலை.

மனிதநேயமற்ற இக்கொடூரத் தாக்குதல்களின் பின்னணி என்ன? இது தொடர்பில் முன்னரே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது என்ற கருத்துக்கள் பரவாலாக நிலவி வரும் சூழலில் ஏன் முன்கூட்டியே எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை?, ‘தற்கொலைக் குண்டுதாரி’களின் மனத்தயாரிப்புக்கான செயன்முறை என்பது குறுகியகாலத் திட்டமாக இருக்க முடியாது. அவ்வாறெனில் நீண்டகாலமான காய்நகர்த்தலுக்கான பின்புலங்கள் இன்றி இதனைச் செயற்படுத்தியிருக்க முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றது. இந்நிலையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலர் சிரியா போன்ற நாடுகளில் விஷேட பயிற்சி பெற்றவர்கள் எனும் செய்தியும் கூறப்படுகின்றது.

முஸ்லிம் மதக்குழு ஒன்றினால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்தாக்குதலுக்கான அடித்தளம் கடந்த காலங்களிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் குறித்த சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களுக்கான எதிர்வினையாக உருவானதா? அல்லது தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் அடுத்த ஆட்சியினை நிர்ணயிக்கும் சர்வதேச சக்தியைத் தீர்மானிப்பதற்கான முன்னோட்டமா? என்றெல்லாம் நாம் அரசியல் சார்ந்தும் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதன் மூலம் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இந்நாட்டு அனைத்து மக்களும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தவர்களும் பலியாகிவிடக்கூடாது என்பதிலேயே நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. இதனையே நாம் கடந்த கால வரலாறுகளினூடாக உணர்ந்தும் கற்றும் வருகின்றோம்.

இன்னொரு புறம் இப்பயங்கரவாதச் செயற்பாடுகளின் பின்னணியில் உள்ள மத அடிப்படைவாதம் தாக்கம் செலுத்தியலுள்ள விதம், அதன் பின்னணியில் உள்ள அரூபமான உளவியல் வெளி ஆகியன குறித்தும் நுண்பார்வைகளை நிகழ்த்தி ஆராய வேண்டியும் உள்ளது. மேலோட்டமாக இது வெறுமனே அரசியல் பின்னணி கொண்ட செயல் என்று பேசிவிட்டு நகர்ந்து விட முடியாத அளவுக்கு, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் உருவாக்கியுள்ள பயங்கரவாதத்தை விதைப்பதற்கான சாத்தியச் சூழலே நாம் எதிர்கொண்டிருக்கும் பெரும் அச்சுறுத்தல். தாக்குதலை மேற்கொண்டவர்கள் அல்லது தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதும், அவர்கள் இஸ்லாமிய இயக்கமொன்றினூடாக மத அடிப்படை வாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதுமே எம்மிடம் இருக்கும் இதற்கான நியாயங்களாகும்.

சமூகக் கதையாடல்கள், கலாசாரக் கதையாடல்களை, அவற்றின் உருவாக்கம் குறித்து எத்தகைய பிரக்ஞையும் இன்றி, ஏற்றுக்கொள்ளச் செய்யப்படும் சூழலும், இயல்பான சுதேச இருப்பினை விட்டும் தடம் மாறி, பன்மைத்துவக் கூறுகளை விலக்கி, ஒற்றைத் தன்மையான அடையாளத்தை வலிந்து திணித்துக் கொள்ளும் மனநிலையும், அதன் வழியாக வெளிப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளைப் பற்றி கவலையும் கரிசனையும் கொள்ளாத ஒரு சூழலும் இதற்கு முக்கியமான காரணிகள். எப்பொழுதும் தமது மதமும் கலாசாரமுமே உயர்ந்தது என்ற வகையிலான புனிதக் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்ற போது, அங்கு பின்பற்றப்படக் கூடிய பிற மதங்களும், கலாசாரங்களும் அதனோடு பிணைப்புக் கொண்டிருப்பவர்களும் மற்றமைகளாக வெறுத்து ஒதுக்கப்படுகின்ற ஒரு சூழல் உருவாகின்றது. இலங்கையில் நிலவுகின்ற பன்மைத்துவக் கலாசார சூழலில் இஸ்லாமிய ஒற்றைத் தன்மையான, அதி தூய்மை வாதத்தை முன் நிறுத்தும் மையப்படுத்தல் செயற்பாடுகள், சமூக உறவுகளில் விரிசல்களையும், மத ரீதியான முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்பதையே நாம் கண்டும் அனுபவித்தும் வருகின்றோம்.

இஸ்லாமிய வரையறைகளை முன்நிறுத்தி ஹராம் – ஹலால், சொர்க்க வாதி – நரகவாதி, முஸ்லிம் – காபிர் போன்ற எதிர் நிலை உரையாடல்களை முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் திணிக்கின்றமை, வித்தியாசமான பண்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமை, அவற்றின் இருப்பின் நியாயத்தை உணராமை, இனம், மதம், மொழி, பாலினம் சார்ந்த ஒடுக்குதல்கள் போன்றன வெளிப்படையான வன்முறைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

இன்று சிறுபான்மை இனங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சாடியும், பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டியும் இனமுறுகல்கள் துளிர்விட்டிருக்கின்றன. ஒரு வகையில் கடந்தகால வடுக்களையும், கசப்பான சம்பவங்களையும் கடந்து சகவாழ்வை நோக்கிப் பயணிக்க விடாமல் இருப்பதற்கு குறித்த வன்முறைக்கான நினைவுத் தடயங்கள் மீட்டப்பட்டு வருவதும் ஒரு காரணம்தான்.

மட்டுமன்றி ஒருவருடைய தனிப்பட்ட கருத்தையோ, செயற்பாட்டையோ முன்நிறுத்தி முழுச் சமூகத்தையும் குற்றம் காணும் மொத்தத்துவ அணுகுமுறைதான் இன்றைக்கு இருக்கின்ற மிகப்பெரும் சவால். ஒருவருடைய பிரச்சினை முழு இனத்தினுடைய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஒருவருடைய கருத்து முழு இனத்தினுடைய கருத்தாக பிரதிநிதித்துவப் படுத்தக்கடுகிறது. தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து சமூக வளைதளங்களில் அதிகமாக இத்தகை போக்கினைக் காணமுடிகின்றது. உணர்ச்சி வசப்பட்டு சிந்திக்காமல் நாம் பேசுகின்ற வார்த்தைகள் குரோதத்தை வளர்த்துவிடக்கூடாது. அதே நேரத்தில் தாக்குதலாக இருக்கட்டும், அதன் பின்னரான முறுகல்நிலையாக இருக்கட்டும் அதனை மொத்தத்துவப் பார்வையில் அணுகுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது.

இந்நாட்டில் பயங்கரவாதத்தையோ, தீவிரவாதத்தையோ விரும்பாத வெகுஜன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் நம்பிக்கையற்ற சூழல் மாறிவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் எப்பொழுதும் உண்டு. எனவே, அனைத்து இன, மத, மொழி, பாலினக் கலாசாரங்களையும் அவற்றின் வேறுபாடுகளோடு ஏற்றுக்கொள்கின்ற மனநிலை நம் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். வீடு, பாடசாலை, பல்கலைக்கழகங்கள் போன்ற சமூகமயமாக்கலுக்கான பயிற்சி நிறுவனங்களிலிருந்து இவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் உரையாடல்கள் மூலமும், கல்வியின் மூலமும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னுள் எப்பொழுதுமே இருக்கின்றது. ஒருவர் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதற்காக அவரது இருப்பைக் கேள்விக்குட்படுத்த முடியாது, அது தான் சார்ந்து மட்டும் சிந்திக்கின்ற ஒற்றை மனநிலைக்குக் காரணமாக அமையும் என்பதை கற்பிக்கப்பட வேண்டும். இருக்கின்ற வித்தியாசங்களோடும், வேறுபாடுகளோடும் மனிதர்களை ஏற்று, நேசிக்கின்ற மனோநிலையயை உருவாக்க இதனை நாம் சாத்தியப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது.

கே_எல்_நப்லா

2 கருத்துரைகள்:

எது எப்படியோ..
நாட்டில் உள்ள அனைத்து
தௌஹீத் ஜமாஅத் அமை
ப்புக்களையும் முற்றுமுழு
தாக தடைசெய்வதற்கு
ஜனாதிபதி அவர்களிடம்
வலியுறுத்த வேண்டும்...NTJ தவிர மீதமுள்ள
அனைவரும் ISIS இன்
தீவிரவாதத்தின் 90% வீத
செயற்பாடுகளில் ஒன்று
பட்டே இருக்கின்றார்கள்.
நாளை இவர்களுக்குள்ளி
ருந்து ஒரு பிரிவினர் பயங்கரவாதத்தினை
ஆதரித்து விலகிச்சென்று
மீண்டும் ஒரு இரத்தக்க
லரியை நாட்டில் ஏற்படுத்
துவார்கள். இந்நிலைமை
மீண்டும் தோன்றுவதை
தடுக்கவேண்டும் என்றால்
தௌஹீத் ஜமாஅத் அமை
ப்பின் அனைத்துப்பிரிவு
களும் இலங்கையில் தடைசெய்யப்படல்வேண்
டும் என்பதனை ஜனாதி
பதி முன்னிலையில் தெளிவுபடுத்த வேண்டும

அடிப்படைவாதிகளின் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னணியை விளக்கும்வகையில் முஸ்லிம் அறிவு தரப்பிலிருந்து விஞானபூர்வமான கோட்பாட்டுரீதியான கட்டுரையொன்று வெளிவந்திருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது. நன்றி கெ.எல்.நப்லா.

Post a comment