Header Ads



முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளை பிரயோகிக்கும்போது அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும்

தமிழ் மக்களின் போராட்டம் மக்களின் விடுதலைக்காக ஆரம்பிக்கபட்டிருந்தது என்பதை பலதரப்பினரும் இன்று ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ரெலோ அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் 20ம் ஆண்டு நினைவு தினம் வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்போதைய பயங்கரவாதம் எமது மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தமிழர் பகுதிகளிலே இராணுவ சோதனை சாவடிகள் பல அமைக்கபட்டுள்ளன. மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை 2009க்கு முற்பட்ட போருடனான காலத்துடன் ஒப்பிடமுடியும். சோதனை செய்வது தவறில்லை. ஆனால் அது கெடுபிடியாக மாறகூடாது.

அத்துடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கின்ற ஒரு நிலமை தற்போது காணப்படுகின்றது.

அது நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளை பிரயோகிக்கும் போது அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும்.

இந்த செயல் மீண்டும் அந்த பயங்கரவாதிகளுடன் இணைந்தால் என்னவென்று எண்ணும் சூழலை அவர்களிடத்தில் உருவாக்கிவிடும்.

எனவே அந்த சூழலை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி, தமிழ் மக்களாக இருந்தாலும் சரி அவர்களை தாக்குகின்ற நிலையிலே இருந்து மாறவேண்டும்.

பொதுமக்கள் தமது கருமங்களை அமைதியான முறையில் ஆற்றவேண்டும், அனைத்து மக்களும் இந்த விடயத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்று மக்களை நிர்க்கதிக்குள் தள்ளுகின்ற நிலமையை ஏற்படுத்தி விட்டு ஜனாதிபதி சீனாவிற்கு சென்றுள்ளார். அவர் சென்றவுடன் இங்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தபட்டுள்ளது.

இப்படியான நேரத்தில் நாட்டிலிருந்து அதனை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதே அரசதலைவரின் கடமையாக இருக்கவேண்டும். இந்த பிரச்சினையை அரசியலாக்க யாரும் முயலக்கூடாது.

இன்று ஊடகங்கள் தமது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகின்ற நிலையில் அவர்களிற்கு சேறுபூசும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொள்கின்றார்கள். அது கண்டிக்கப் படவேண்டியது. போராட்ட காலங்களில் பல்வேறு விடயங்களை ஊடகங்களே வெளிக்கொணர்ந்திருந்தன.

இதேவேளை, அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது முன்வைக்கபடவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவீர்களா? என கேட்டபோது,

“அவர் குற்றவாளியாக கருதப்படுகின்ற பட்சத்திலே அதனை நாம் பரிசீலிக்க முடியும். இந்தவிடயத்தில் நாம் உடனடியாக பதில் சொல்ல முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.