Header Ads



இலங்கையில் குண்டுவெடிப்புகளிற்கான திட்டமிடல், மிகத் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் குண்டுவெடிப்புகளிற்கான திட்டமிடல் மிகவும் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டதையும் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தினையும் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கை தாக்குதல்களுடன் சர்வதேச பயங்கரவாதத்திற்கு தொடர்புள்ளது என்ற முடிவிற்கு வரமுடியும் என கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் ஜிகாதி பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தால் மாத்திரமே அந்த அமைப்பிற்கு தாக்குதல்களை மேற்கொள்வதற்கான வளங்களும் திறனும் கிடைத்திருக்கும் என ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் என்பது சிறிய குழு, கடந்த வருடம் பௌத்தமதத்திற்கு எதிரான போதனைகள் மற்றும் புத்தரின் சிலை உடைப்பு போன்ற சம்பவங்கள் மூலம் குறிப்பிட்ட குழு முக்கியத்துவம் பெற தொடங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பிடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றது போன்ற  ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை வெளிச்சக்திகளிடமிருந்து உதவிகள் இல்லாமல் மேற்கொள்வதற்கான திறன் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தற்கொலைகுண்டுதாரிகள்  டீஏடீபீ எனப்படும் இரசாயனப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல்கள் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்புள்ளதை உறுதிசெய்கின்றன என ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் பிரான்ஸ் பிரிட்டன் ஆகியநாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் இந்த இரசாயனபொருள்  பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டீஏடீபீயை குண்டுகளை கண்டிபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது இதன் காரணமாக ஐஎஸ் ஹமாஸ் போன்ற அமைப்புகள் இதனை பயன்படுத்துகின்றன எனவும் ஹரிகரன் தெரிவித்துள்ளார்

ஐஎஸ் அமைப்பின் கொள்கைகள் மூலம் தீவிரவாதமயப்படுத்தப்படுவதற்கு எவரும் சிரியாவிற்கு செல்லவேண்டியதில்லை என தெரிவித்துள்ள ஹரிகரன் ஐஎஸ் அமைப்பின் கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை எனவும் தெரிவித்துள்ளார்.

சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பு அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும்  அதன் கொள்கை வேகமாக பரவிவருகின்றது எனவும் ஹரிகரன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களை கருத்தில் கொள்ளும் போது குறிப்பாக  சங்கிரி லா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை பார்க்கும்போது ஐஎஸ் அமைப்பு பரவலாக்கப்பட்டுவருவது புலனாகியுள்ளது எனவும் கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.