Header Ads



அவசரகால சட்டம் ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் - ஜனாதிபதி

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிதுசேனவிற்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என நான் நம்புகின்றேன்.

மேலும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பாதுகாப்புத் துறையினரால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதுடன், நிறுவனக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் காணப்படுகின்றமையினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பல நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை தளர்த்துமாறும் ஜனாதிபதி தூதர்களிடம் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாகவும் பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும் பாராட்டினார்.

No comments

Powered by Blogger.