Header Ads



காத்தான்குடி தனிமைப்படுத்தப்படுவதை, அனுமதிக்க முடியாது

காத்தான்குடி உங்களை வரவேற்கிறது...! இந்தத் தலைப்பே கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை மனதில் வைத்தே இதனை இட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்னதாக இப்படி ஒரு தலைப்பை நான் எனது கட்டுரை ஒன்றுக்கு வைத்திருப்பேனா என்று என்னால் கூறமுடியாது. ஆனால், இது பல விடயங்கள் பற்றி பேசவேண்டிய தருணம்.

காத்தான்குடி என்ற பெயரே கடந்த சில நாட்களாக இங்கு சர்ச்சைக்கு உரிய ஒரு சொல்லாக மாறியிருக்கிறது என்பது உண்மை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஒருவர் அங்கு பிறந்தார் என்பதும், தாக்குதலாளிகள் சிலராவது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம்.

மட்டக்களப்பு நகரில் இருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கின்ற இந்தச் “சிற்றூர்” நகரம் என்றோ கிராமம் என்றோ இலகுவில் பிரித்தறிய முடியாத ஒன்று. ஆனால், சனநெருக்கடி மிக்க ஒரு ஊர்.

மட்டக்களப்புத் தமிழர்கள் என்னதான் முஸ்லிம்கள் மீது விமர்சனத்தை முன்வைத்தாலும் ஒரு உணவு விடுதியில் ஜாலியாகச் சாப்பிட வேண்டுமானால் அதிகமாகச் செல்லும் இடம் இதுதான். முஸ்லிம்களின் வணிகங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்ட காலகட்டங்களில் கூட மட்டுநகர் தமிழர்கள் காத்தான்குடி செல்வதும், அங்கு உண்பதும் என்றும் குறைந்தது கிடையாது.

இன்று நேற்றல்ல, “டல் கோப்பி” என்று அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கோப்பிக்கடைகளுக்கு காத்தான்குடி பிரபலமாக இருந்த பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமைதான்.

பாய் பின்னுதலும் பன் உற்பத்திப் பொருட்களும் சாரன்கள் என்னும் லுங்கிகளும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்ட காத்தான்குடியின் பரிமாணம் இன்று மாறிப்போய் இருக்கிறது. கிழக்கில் வணிகத்தில் சிறந்து விளங்கும் ஆட்கள் நிறைந்த ஊர். காத்தான்குடியில் மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு நகரிலும் கணிசமான கடைகள் காத்தான்குடிக்காரர்களுக்கே சொந்தமானவை.

கிழக்கு மாகாணத்தில் வாகனம் ஓட்டுபவர்களைக் கேட்டால் ஒன்றை உறுதியாகக் கூறுவார்கள். அதாவது எந்த அகால நேரத்தில் போனாலும் காத்தான்குடியில் உணவுக்கடை திறந்திருக்கும் என்பதுதான் அது. அங்கு கிடைக்காத எந்தப் பொருளும் கிடையாது. இந்த வசதிகள் கிழக்கு மாகாணத்தில் எந்த ஊரிலும் கிடையாது.

காத்தான்குடிக்காரர்கள் மிகுந்த திறமைசாலிகள்; கடினமான உழைப்பாளிகள்.

ஆனால், முன்பகுதியில் கூறியது போல இப்போது எல்லா கரங்களும் காத்தான்குடியைச் சுட்டுகின்றன.

தாக்குதலாளிகளின் தலைவர் என்று கூறப்படுபவர் (தலைவர் யார் என்பது சில வேளைகளின் பின்னர் மாறலாம்) காத்தான்குடிக்காரர், மட்டக்களப்பு சியோன் தேவாலய தாக்குதலாளி காத்தான்குடிக்காரர் என்ற காரணத்தால் எல்லோர் கரங்களும் காத்தான்குடியை சுட்டுகின்றன. தமிழர், சிங்களவர் என்றல்ல சில ஏனைய ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் சுட்டுவிரலை நீட்டி காத்தான்குடியை குற்றஞ்சாட்டுகிறார்கள். “எல்லாத்துக்கும் இந்தக் காத்தான்குடிக்காரந்தான் காரணம் அண்ணன்” என்று என்னிடம் ஒரு முஸ்லிம் செய்தியாளரே சொன்னார். இதெல்லாம், விடுதலைப்போராட்டம் ஆரம்பித்து, குண்டுகள் வெடிக்கத் தொடங்கிய போது, “இதுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தாந்தான் காரணம் என்று ஏனைய இடங்களைச் சேர்ந்த சிலர் சொன்னதற்கு நிகரானது. அது தவறு. இங்கு எல்லோருக்கும் பொறுப்பு உண்டு.

காத்தான்குடியில் நடந்தவை குறித்து எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால், அதற்காக காத்தான்குடியை தனிமைப்படுத்த முடியாது.

காத்தான்குடியில் 2017 இலேயே இந்தத் தீவிரவாதக் குழுவுடன் மோதல்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் அங்கு கத்திகளும் வாள்களுமே அதிகபட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இரு வருடங்களில் குண்டுகளும் தற்கொலைத்தாக்குதலாளிகளும் தயாராகியிருப்பதைப் பார்த்து அந்த ஊரே அதிர்ந்துபோய் இருக்கிறது.

இரு வருடங்களுக்கு முன்னரே உங்கள் ஊரில் தீவிரவாதிகள் இருப்பது தெரிந்தும் ஏன் அது குறித்துப் பேசவில்லை என்று கேட்டதற்கு காத்தான்குடி மக்கள் கூறிய பதில் நியாயமானதாகவே பட்டது. ‘அவர்கள் குறித்து அனைத்துத் தரப்புக்கும் முறையிட்டுள்ளோம், ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்கிறது காத்தான்குடி சிவில் சமூகங்களின் சம்மேளனம். அதனைவிட ஒரு சிவில் சமூகத்தால் எதனைச் செய்யமுடியும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது பற்றி (அது நடந்தது 1990இல்) 2002இல் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதனை ‘ஒரு வரலாற்றுத்தவறு’ என்று கூறும்வரை 12 வருடங்களாக சில மாற்றுக்கருத்தாளர்களைத் தவிர, தமிழ் சமூகத்தில் இருந்து எவரும் பேசவில்லை. எம்மிடம் தமிழ் சிவில் சமூகம், யாழ் சிவில் சமூகம் என்றெல்லாம் எவ்வளவோ அமைப்புக்கள் இருந்தும் அதனைப் பற்றிப் பேச தமிழ் சமூகத்துக்கு 12 வருடங்கள் பிடித்தன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை அடுத்து தமிழ் கிராமங்கள் தாக்கப்பட்டதால், அதனைப்பற்றியும் தமிழர் தரப்பில் பேசப்படவில்லை.

ஆனால், தேவாலயங்கள் தாக்கப்பட்டமை குறித்து ஒரு வாரத்தில் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் மன்னிப்புக் கோரியுள்ளது. அந்த வகையில் காத்தான்குடிச் சமூகம் மேம்பட்டு நிற்கிறது. அதனை நாம் மதித்தாக வேண்டும். அந்தச் சமூகத்தின் மீது குற்றம் சுமத்தும் எவரும் இதனை மனதில் கொண்டாக வேண்டும். காத்தான்குடி மக்கள் அல்லது அதன் தலைவர்கள் அனைவரும் செய்த எல்லாம் சரி என்று நான் கூறமாட்டேன். ஆனால், அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் தனிமைப்படுத்த முடியாது.

காத்தான்குடி கடந்த சில நாட்களாக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பலரிடம் இதுபற்றிக் கதைத்த போது அங்கு வாழும் மக்கள் நிலைகுலைந்து போயிருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. இந்த அனுபவம் தமிழ் சமூகத்துக்கு ஏற்கனவே இருக்கிறது. இங்கு நாம் தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று உண்டு. அந்த நிலைமை ஏனைய சமூகங்களுக்கு வர நாம் அனுமதிக்க முடியாது. பெரிய கடைகளை வைத்திருப்பவர் முதல் ஆட்டோ ரிக்ஷோ ஓட்டுனர் வரை மன வலியில் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த மன்னிப்பு கோரலுக்கும், மனவலிப் பிரதிபலிப்புக்கும் “பயம்” உட்பட வேறு காரணங்களை நாம் கற்பிக்க முடியும், சில சந்தர்ப்பங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம், ஆனால், நாம் அவர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது.

அந்த ஊரில் பாதுகாப்புச் சோதனைகள் முற்றாக முடிந்துவிட்டதா என்பதும் நமக்குத் தெரியாது, சல்லடை போட வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறதா என்றும் தெரியாது. ஆனால், நடவடிக்கைகள் எல்லாம் பொருத்தமான அளவுக்கு மாத்திரம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், மேலும் இளைஞர்கள் பயங்கரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாமல் போய்விடக் கூடும்.

பல மதத்தலைவர்கள் சமூக நல்லிணக்கத்துக்காக சில நிகழ்வுகளை இங்கு வைபவ ரீதியாகச் சடங்குபோலச் செய்வதைக் காணமுடிகிறது. ஆனால், இந்த வைபவ ரீதியான நிகழ்வுகள் எல்லாம் பெரும் பலனைத்தராது. சில நாட்களில் இவை முடிவுக்கு வந்துவிடும். சமூகங்களின் ஊடாட்டம் என்பது ஒருவரை அடுத்தவர் வீட்டு வாசலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அடிமட்டத்தில் இருந்து அது வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பெரிய அளவில் இந்த மதத்தலைவர்கள் செய்ததாக என்னால் முழுமையாக நம்ப முடியாது.

குண்டு வெடிப்பை மக்கள் மறக்க அவர்களும் அப்படியே விட்டுவிடுவார்கள். உண்மையான நல்லிணக்கம் என்பது வெறும் ஜோடனைப் பொருள் போல ஆகிவிடும்.

ஆக, காத்தான்குடி மாத்திரமல்ல எந்தவொரு சமூகமும் தனிமைப்படுத்தப்பட முடியாது. தனிமைப்படுத்தப்படுபவர்களே அதிக வலியை அனுபவிப்பர். அது குண்டு வெடிப்பின் வலியைவிட மோசமானது. நாட்டை அது தீவிரவாதத்துக்குள் தள்ளிவிடும்.

- அரங்கம் பத்திரிகையில் இருந்து...
சீவகன் பூபாலரட்ணம் ---


2 comments:

  1. 1 silar senJa velayala ella Muslims kum ketta per.

    ReplyDelete
  2. Thanks to editor. I'm Kattankudiyan. My society needs more editors same as you well done ur service. Thanks to again,again,again.....

    ReplyDelete

Powered by Blogger.