Header Ads



கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என எதற்காக கூறினேன் ஹிஸ்புல்லாவின் விளக்கம் இதோ

வடக்கு கிழக்கை இணைப்பதற்கான யோசனையை அரசாங்கம் நாடாளுமன்றில் முன்வைக்குமானால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று நான் பேசினேனே தவிர தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்த கருத்தையும் கூறவில்லை என கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட தற்கொலை குண்டுதாரிகளுடனும் தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்புடனும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு தொடர்பு என குற்றச்சாட்டுக்களை பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர்,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்காக வட கிழக்கில் நாம் துக்க தினத்தை அனுஷ்டிக்கவேண்டும். அதற்கு பூரண ஆதரவு வழங்குங்கள். தமிழ் முஸ்லிம் மக்கள் எல்லோரும் சேர்ந்து அதனை அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னை சந்தித்து கோரியிருந்தார். நான் அதற்கு பூரண ஆதரவு வழங்குவதாகக் கூறினேன். அதன் பின்னர் ஊடக சந்திப்பை நடத்தினோம். அதில் அலிசாஹிர் மௌலானாவும் கலந்துகொண்டார்.

வடகிழக்கில் கடைகளை மூடி காரியாலயங்களுக்கு செல்லாமல் துக்க தினத்தை அனுஷ்டித்து எமது கண்டனத்தை தெரிவிப்போம் என ஊடகவியலாளர்களுக்கு நாம் பேட்டியளித்தபோது மிக தெளிவாக கூறியிருந்தோம். இந்த பேட்டியின்போது ஒரு வார்த்தைகூட ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு நான் உச்சரிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னுடன் சேர்ந்து பேசிவிட்டு வெளியே சென்று நான் ஹர்த்தால் அனுஷ்டிக்க கூறியதாக சொல்லியிருந்தார்.

அன்று மாலை தமிழ் உணர்வாளர் அமைப்பு ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் துக்கதினத்துக்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள். கிழக்கு ஆளுநருடன் சேர்ந்து கூட்டமைப்பு அனுஷ்டிக்கவிருக்கும் துக்க தினத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாமென அத்துண்டு பிரசுரத்தில் மக்களை அந்த அமைப்பு கோரியிருந்தது.

சில தமிழ் பிரதேசங்களில் கடைகள் கூட திறக்கப்பட்டிருந்தன. அதனால்தான் என்னவோ கூட்டமைப்பின் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் செவிசாய்க்கவில்லை என்பதற்காகவே தமது கட்சியின் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக சுமந்திரன் தனது கருத்தை மாற்றியிருக்கலாம். அதேவேளை பயங்கரவாதியான சஹ் ரான் என்பவர் தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்காக மிக மோசமாக செயற்பட்டவர்.

என்னை தோற்கடித்து எனது அரசியல் வாழ்வை நிர்மூலமாக்க தீவிரமாக செயற்பட்ட ஒருவர். இவர் சுயேச்சைக்குழுவொன்றைப் பயன்படுத்தி மேடைகளில் ஏறி காத்தான்குடி முழுவதும் எனக்கு எதிராக பிரசாரம் செய்தார். முஸ்லிம்களில் பல குழுக்கள் உண்டு. அதில் ஒரு குழு மதம் மாறியவர்கள். அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்கள். அக்குழுவினரோடு என்னை தொடர்புபடுத்தி இவனுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது வாக்களிப்பது ஹராம் என்று மேடை மேடையாக பிரசாரம் செய்தார்.

சஹ்ரான் இதனால் கடந்த பொதுத் தேர்தலில் நான் 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டேன். இவ் வாறு எனக்கு எதிரான பொய்யான பிரசாரங்களை மேற்படி குழுவினர் மேற்கொண்டதன் காரணமாக எனக்கு ஆதரவான 2 ஆயிரம் வாக்குகளை அந்த தேர்தலில் இல்லாமல் ஆக்கினர். இவ்வாறான நிலையில் எனக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் எவ் வித தொடர்புமில்லை.

இந்நாட்டில் மீண்டும் ஒரு பயங்கர வா தத்தை உருவாக்கி நாட்டை சீரழிக்க நான் உடந்தையாக இருக்கமாட்டேன். எவ்வாறு முந்திய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்தோமோ அதைவிட மோசமாக வேகமாக எமது முழுப்ப லத்தையும் பயன்படுத்தி இந்த தீவிரவா தத்தை முறியடிப்போம் என்றார்.

இதேவேளை, நான் தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை நாடாளுமன்றில் கூறவில்லை. வடக்கு கிழக்கை இணைக்க இந்த அரசாங்கத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. வடக்கு வடக்காகவும்இ கிழக்கு கிழக்காகவும் இருக்கவேண்டும். ஆனால் இரு சமூகமும் ஒன்றுபட்டு வாழ்வோம். இருமாகாணங்களையும் இணைக்க அரசு முயன்றால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினேன். தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த கருத்தையும் நான் நாடாளுமன்றில் கூறவில்லை.

பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களையும் தாக்க முற்படும்போது அதனை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். நிறுத்தாமல் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைந்தால் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவார்கள். அந்த சூழ்நிலைக்கு இடமளிக்கக்கூடாது என கூறியிருந்தேன். இது ஒரு பௌத்த நாடு. எனவேதான் இத்தகைய இனவாதத்துக்கு இடமளித்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள் என்று கூறியிருந்தேன். மாறாக எதனையும் கூறவில்லை என்றார்.

1 comment:

  1. Mr ஹிஸ்புல்லாஹ் நீங்கள் முதலில் ஒன்றை தெரிந்து வைத்துக்கொள்ளுங்க இலங்கையொரு ஜனநாயக நாடு மாறாக இது பவ்த நாடில்லை.

    ReplyDelete

Powered by Blogger.