Header Ads



சமையல் கத்திகளையும், மீன் வெட்டும் கத்திகளையும் கைப்பற்றிய கடற்படை - கல்முனையில் நகைச்சுவை

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேற்கொண்ட துரித முயற்சி காரணமாக கல்முனையில் மீன்பிடிப் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட கத்திகளை அப்படகுகளின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்பரப்பில் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து மீன்பிடிப் படகுகளையும் இன்று புதன்கிழமை (15) அதிகாலை தொடக்கம் சோதனையிட்ட கடற்படையினர் அப்படகுகளில் மீனவர்கள் தமது சமையல் பயன்பாட்டுக்கும் பெரிய மீன்களை வெட்டுவதற்காகவும் வைத்திருந்த கத்திகள் அனைத்தையும் கைப்பற்றி, கல்முனை இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள், பிராந்திய கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்த போதிலும், இவ்விடயம் தொடர்பில் தம்மால் படைத் தரப்புகளுடன் கதைக்க முடியாது என ஒதுங்கிக் கொண்டதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் அனுசரணையுடன் குறித்த கத்திகள் பயங்கரவாத நோக்கத்திற்குரியவையல்ல என்பதை இராணுவத்தினருக்கு தெளிவுபடுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தார்.

இதன் பிரகாரம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளையிடும் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு விளக்கியதையடுத்து, அவர் அக்கத்திகளை உரியவர்களிடம் மீள ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸ் அத்தியட்சகருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த கத்திகள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, உரியவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, குறித்த மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் தத்தம் கத்திகளை அடையாளப்படுத்தி, பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(அஸ்லம் எஸ்.மெளலானா )

No comments

Powered by Blogger.