Header Ads



முஸ்லிம் சகோதரர்களை நோக்கி....!

உங்கள் இன்றைய ஆதங்கம் புரிகிறது. ஆனால், இங்கே யாருமே ஒட்டுமொத்தமாக கூடி நின்று ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குறை கூறவோ, பயங்கரவாத பட்டியலில் போடவோ முனையவில்லை.

ஆங்காங்கே ஒருசில குற்றச்சாட்டு குரல்கள் இருக்கலாம். பல்லின சமூகத்தில் அவை தவிர்க்க முடியாதவை. ஆனால், பெரும்பாலான சிங்கள, தமிழ் மக்கள், இந்த நெருக்கடி வேளையில் முதிர்ச்சியுடன் நடந்து கொள்கின்றார்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அரசாங்க, எதிர்கட்சி அரசியல் தலைமைகளும், சகல மத தலைமைகளும், பாதுகாப்பு தரப்பினரும் கவனமாக இருக்கின்றார்கள்.

எங்காவது இந்த பொதுக்கொள்கை மீறப்படும் போது எம்மை போன்றோர், உடனடியாக தலையிட்டு, அரச உயர் மட்ட கூட்டங்களின் போது, அவற்றை சுட்டிக்காட்டி, சரி செய்கிறோம்.

இன்றைய நிலைமையை கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சந்தித்த துன்பங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள்!

1950 முதல் 2009 வரை பேரினவாதிகளின் எத்தனையோ பரந்துப்பட்ட இனக்கலவரங்கள், முழுமையான சிங்கள ராணுவ-பொலிஸ் படையணிகளின் அரச பயங்கரவாத தாக்குதல்கள், சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் கடத்தல்கள்-காணாமல் போதல்கள் ஆகியவை தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டன.

முழுமையான போர் ஆரம்பிக்க முன், 1958ல் நடைபெற்ற கறுப்பு மே, 1977 ல் நடைபெற்ற கறுப்பு ஆகஸ்ட், 1983 ல் நடைபெற்ற கறுப்பு ஜூலை கலவரங்களின் போது தமிழ் மக்களை தாக்கி கொலை செய்ய, சொத்துகளை சூறையாட, பெண்களை மானபங்கம் செய்ய, குழந்தைகளை தூக்கி எரியும் தீயில் வீச, தமிழரின் தொழில் நிறுவனங்களை-கடைகளை-இல்லங்களை எரியூட்ட, அன்றைய அரசாங்க தலைமைகளே நேரடியாக சிங்கள மக்களை தூண்டி விட்டன.

இத்தகைய பேரினவாத அரச பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகவும், தமிழ் அரசியல் தலைமைகளின் ஜனநாயக வழிமுறைகளை அதே பேரினவாதம் நிராகரித்தமையும்தான், தமிழ் இளையோரை ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளின. வரலாற்றில், தமிழ் இளைஞர், மனநோயாளிகளாக எடுத்த எடுப்பிலேயே ஆயுதம் தூக்கவில்லை.

அன்றைய அந்த தேசிய நெருக்கடி வேளைகளில், இந்நாட்டிற்குள்ளே அப்பாவி தமிழரின் துயரை துடைக்கவும் ஆளிருக்கவில்லை. ஆறுதல் சொல்லவும் ஆளிருக்கவில்லை. ஆக, பாரத தேச பிரதமர் இந்திரா காந்தியும், தொப்புள் கொடி உறவுகள் சார்பாக முதல்வர் எம்ஜிஆரும் தான், அன்று 1983களில் எமக்காக குரல் கொடுத்து, தம்மால் இயன்றவற்றை செய்தார்கள்.

அதன் பின்னர் 2005-2009 யுத்தத்தின் போது சொல்லொணா துன்பங்களுக்கு தமிழர் முகம் கொடுத்தார்கள். இனப்படுகொலையானோர், காணாமல் ஆக்கப்பட்டோர், உலகம் முழுக்க விரட்டி அடிக்கப்பட்டோர் என்ற பெரும் பட்டியலும், உடைமை, கல்வி, கலாச்சார அழிவுகள் என்ற இன்னொரு பெரும் பட்டியலும் இன்று உலக துன்பியல் வரலாற்றில் இடம்பெற்று விட்டன.

தமிழர் முன், ஐநா சபை இன்று வெட்கி தலை குனிந்து நிற்கிறது. அதனால்தான் இந்த ஐநா இன்றும் குரல் எழுப்பி இலங்கை அரசின் கடமைகளை ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

2009ம் ஆண்டு மே (இன்னமும் இரண்டு வாரத்தில் பத்தாண்டுகள் நிறைவு..!) மாதத்தில் நிறைவு பெற்ற யுத்தம், “தமிழருக்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது” என சொல்லப்பட்டாலும்கூட அப்படியா அது நிகழ்ந்தது?

அப்படியா, 2009 மே 19ம் திகதிய வெற்றி கொண்டாடப்பட்டது?

கொடும் போர் நிகழ்ந்த வன்னியில் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என ஒட்டுமொத்த இலங்கையிலும் வாழ்ந்த தமிழரின் வீடுகள் “சாவு வீடுகளாக” மாறி அழுகை ஓலங்கள் ஒலிக்கும் போது, வெளியே தெருக்களில், ஏதோ அந்நிய நாட்டுக்கு எதிராக போர் செய்து வெற்றி பெற்றதை போன்று, அந்த 2009 மே 19ம் நாள், நாடு முழுக்க, பட்டாசு வெடித்து, பாற்சோறு பொங்கி, ஜெயப்பேரிகை கோஷங்கள் எழுப்பி, ஊர்வலங்கள் போய், கொண்டாடப்பட்டது.

நெருக்கடி வேளையில் எம்குல மாந்தரின் அழுகை ஓலத்தின் ஊடே கொலைஞர்கள் மத்தியில் நின்று போராடிய எனக்கு இந்த வரலாறு நன்கு தெரியும்.

ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. ஆத்திர குரல்கள் ஆங்காங்கே ஒலித்தாலும், அரச பயங்கரவாதம் அன்றைய பாணியில் இன்று இல்லை. நாடு முழுக்க நல்லிணக்க பிரசாரம் வேலை செய்கிறது.

இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் நின்று, இன்று முழு நாட்டுக்கும் எடுத்துகாட்டாக அமைந்து, பேராயர் தலைமையில் கத்தோலிக்க மதத்தலைவர்கள் கத்தோலிக்க மக்களை வழி நடத்துகிறார்கள். சொல்லொணா துன்பங்களை சந்தித்துள்ள தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்களும், ஏனைய பெளத்த, இந்து மக்களும் அமைதி காக்கிறார்கள்.

அதேவேளை இன்றைய நிலைமை இன்னமும் மேம்பட வேண்டும். இந்த மேம்பாட்டு வேலையை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு முஸ்லிம் சமூக முன்னோடிகள் அமைதி காக்க கூடாது.

இஸ்லாமிய மத தலைவர்களும், முஸ்லிம் சமூக முன்னோடிகளும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் “பயங்கரவாத கொலைகள் புரிந்தவர்கள், முஸ்லிம்கள் இல்லை", “பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது" என்பவைகளை மாத்திரம் தொடர்ந்து சொல்வதுடன் நின்று விடாமல், அதற்கு அப்பால் சென்று, "சுய-பரிசோதனை" செய்துக்கொண்டு, இந்த பன்மத, பன்மொழி, பல்லின இலங்கை நாட்டிற்கு பொருந்தும் வகையில், முற்போக்கான பாதையில் அப்பாவி முஸ்லிம் மக்களை வழி நடத்த முன் வரவேண்டும்.

“புர்கா தடை” என்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே. தமது கலாச்சார அடையாளம் எது என்பதை முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும். இதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

அமைச்சரவையில் “இலங்கையர் அடையாளம்” என்ற உப குழு இருக்கிறது. அதையும் அழைத்துக்கொண்டு, புதிய முற்போக்காளர்களையும் இணைத்துக்கொண்டு, அடுத்த வாரம், கொழும்பில் “இலங்கையர் அடையாளம்”, என்ற தலைப்பில் நாம் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்த உள்ளோம். அதில் முஸ்லிம் சமூக தலைவர்கள் பங்களிப்பு வழங்க வேண்டும்!

Mano Ganesan

7 comments:

  1. ஏன் அமைச்சரே முஸ்லிம்களுக்கு எதிராக இன்னும் வன்முறை வெடிக்கவில்லையென்று கவலையா? ஓநாய்கள் யாரென்று எமக்கு நன்றாகவே தெரியும்

    ReplyDelete
  2. பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் உதவியது போல் புலிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் உதவியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது அமைச்சரே..

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவதில் நிறைய உண்மைகள் இருக்கின்றன. ஆனால் அன்றைய அன்றைய சூழல் இன்றைய சூழலை விட வித்தியாசமானதாகும். இது வெறுமனே உள்நாட்டு பயங்கரவாதம் அல்ல வெளிநாட்டு சக்திகளின் துணையோடு செய்யப்பட்ட ஒரு கொடூர நிலையாகும். இதில் முஸ்லிம்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. எங்கள் சமூகத்தில் பிற்போக்குத்தனத்தை வளர்ப்பவர்கள் இனியாவது கல்வியை பற்றி சிந்திக்க வேண்டும். கல்வி கற்றாலும் மதத்தை பின்பற்ற முடியாமல் போகும் என்ற பிற்போக்குத்தனத்தை விட்டுவிட வேண்டும்.

    ReplyDelete
  4. Shedding crocodile tears, is a good part time hobby for many these days.

    ReplyDelete
  5. தோழர் மனோ கணேசன் எல்லா தரப்பாலும் நசுக்கபடும் மலையக தமிழரின் தலைவர். அவரது கருத்தின் நிறை குறைகளை விவாதியுங்கள். தூற்றாதீர்கள். இந்த தருணத்தில் விவாதிப்பது மட்டுமே ஆரோக்கியம். விவாதங்கள் மூலம் இருக்கிற பாலங்களை செம்மைப் படுத்த வேண்டிய தருணம் இது

    ReplyDelete
  6. Please be unite as One Srilankan Nation... At this time its very impotant for all communities. God Protect SriLanka.

    ReplyDelete
  7. ஐயா ஜெயபாலன் அவர்களுக்கு வணக்கம்,

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எமது முஸ்லீம் இளைஜர்களின் பின்னூட்டங்களை பார்க்கும் போது, நாம் இன்னும் பரந்த சிந்தனை கொண்டவர்களாக மாற இன்னும் முயட்சி செய்ய வெண்டியவர்களாகவும் போது வெளி தடங்களில் ஆரோக்கியமான கருத்துப்பரிமாறுதல் போன்ற வற்றில் இன்னும் பக்குவ பட வெண்டியவர்களாகவே இருக்கிறோம் என்பதையும் சுட்டி நிட்கின்றது.

    நடந்த நிகழ்வு யாரும் விரும்பாத ஒன்று, எந்த ஒரு உண்மையான முஸ்லிவும் இதட்கு எதிரானவனாகத்தான் இருக்கிறான். இருந்தாலும் இன்றைய உலகம் முஸ்லீம் எதிர்ப்பு அலையையே உண்டு பண்ணி இருக்கின்றன. அது இலங்கையிலும் விதி விளக்கு இல்லை.

    நடந்த சம்பவம், இஸ்ரயேலினுடைய முக்கியமாக மோசடி , அமெரிக்காவின் CIA இணைந்து நடத்திய மறைமுக செயட்பாடு. அது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டும் அல்ல, பூகோள அரசியலில் சீனா வை எதிர் கொல்லுவதட்கான அடித்தளத்தை இடுவதுமாகும் மேலும் இலங்கையில் அண்மையில் ஆயில் இருப்பதாக உறுதிப்படுத்த பட்டுள்ளது. அதை சோரண்டுவதட்கான வெளிகளே இவைகளை.

    கவலைப்பட வெண்டிய விடயம் என்ன என்றல், எமது அரசியல் தலைமைகளும் , பெரும்பான்மை மக்களும் இதை உணர்ந்து கொள்ளவில்லை அவர்களால் இதை உணர்ந்து கொல்லுவதட்கு சிறிது காலம் செல்லும்.

    மிகவும் இருண்ட ஒரு எதிர் காலத்தை நான் இப்போதே காண்கிறேன்.

    என்னுடைய இறைவா எனது நாட்டையும் நட்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்திடு இறைவா.

    ReplyDelete

Powered by Blogger.