Header Ads



மஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்

– மப்றூக் –

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா எனும் முஸ்லிம் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு நாளையுடன் ஒரு வாரமாகிறது.

கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்தவர் 47 வயதுடைய மஸாஹினா. இவர் அணிந்திருந்த ஆடையொன்றில் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, மஹியங்கணை பொலிஸார் கடந்த 17ம் திகதி, மஸாஹினாவை கைது செய்து, மறுநாள் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதனையடுத்து, குறித்த பெண்ணை எதிர்வரும் 27ம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு மஹியங்கணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது

இதேவேளை சர்ச்கைக்குரிய ஆடையை மேற்படி பெண் அணிந்திருந்த நிலையில் எடுக்கப்பட்ட படங்களும், அந்த ஆடையை பொலிஸார் ஊடகங்களிடம் காண்பித்த போது எடுக்கப்பட்ட படங்களும், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் காணப்படுவது தர்மச் சக்கரம் இல்லை என்றும், அது கப்பலைச் செலுத்துவதற்கான ‘சுக்கான்’ (Steering wheel) என்றும், சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு கருத்துப் பகிர்ந்துள்ளவர்களில் பௌத்த, சிங்களவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸாஹினா தற்போது பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் கணவர் முனாப் கூலித் தொழிலாளி. அவர்களுக்கு முனாசியா என்கிற திருமணமான மகள் ஒருவர் உள்ளார்.

இந்த விவகாரத்தில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத்தை தொடர்பு கொண்டபோது, அவரின் மகள் முனாசியா பேசினார்.

“எனது தந்தை கொழும்பில் ‘மேசன்’மாரிடம் உதவியாளராக கூலி வேலை செய்து, அதில் கிடைத்த பணத்தை தாயின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருந்தார்.

17ம் தேதி காலை 9.00 மணியளவில் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து, தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு, எனது தாயார் வீட்டுக்கு வந்தார். ஐந்து நிமிடம் கடந்திருக்கும், போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்து தாயாரை அழைத்தார். தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையொன்றை எனது தாயார் அணிந்திருந்ததாக பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக, அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.

அதனையடுத்து, குறித்த ஆடையை அணிந்த நிலையில் எனது தாயை அந்தப் பொலிஸ்காரர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்து, அதனை அவரின் மேலதிகாரிக்கு அனுப்பினார். பிறகு தனது மேலதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த பொலிஸ்காரர்; ‘சேர், இது தர்மச் சக்கரமில்லை, யாரோ பொய்யாக முறைப்பாடு செய்திருக்கிறார்கள்’ என்று, எங்கள் முன்னிலையில் கூறிவிட்டுச் சென்றார்.

ஆனாலும் காலை 10.30 மணியளவில் ஹசலக பிரதேச பொலிஸார், ஜீப் வண்டியில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை, எனது தாயார் அணிந்திருந்ததாகக் கூறி, அவரைக் கைது  செய்து அழைத்துச் சென்றனர். அன்றிரவு முழுக்க எனது தாயை பொலிஸ் நிலையத்தில்தான் தடுத்து வைத்திருந்தனர். மறுநாள் நீதிமன்றில் ஆஜர் செய்தார்கள். 27ம் தேதி வரை எனது தாயை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்” என்றார் முனாசியா.

சிறையில் வைக்கப்பட்டுள்ள மஸாஹினாவை, அவரின் கணவர் முனாப் அடிக்கடி பார்த்து விட்டு வருகிறார். நாம் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த ஒரு தடவை, சிறையிலுள்ள தனது மனைவியைப் பார்த்து விட்டு, பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

பௌத்த சின்னங்களை அவமதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அவ்வப்போது பௌத்தர்கள் அல்லாதோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றமையை காணக்கூடிதாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஹொரவப்பொத்தானை – கிரலாகல புராதன தூபியொன்றின் மீது நின்று படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில், பல்கலைக்கழகத்தில் கற்கும் 08 முஸ்லிம் இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்..

பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க குறித்த இளைஞர்கள் பல நாட்கள் விளைக்க மறியலில் வைக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

2014ம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த நயோமி கோல்மன் எனும் பெண்ணொருவர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோதும், இது போன்றதொரு ‘பௌத்த சமய அவமதிப்பு குற்றச்சாட்டு’ ஒன்றினை எதிர் கொண்டார்.

அப்போது அந்தப் பெண்ணின் வலது கை புஜத்தில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, அவரைப் பொலிஸார் கைது செய்து, நான்கு நாட்கள் தடுத்து வைத்தனர். பிறகு அவர் நாடு கடத்தப்பட்டார்.

ஆனால், அந்த விடயத்தை குறித்த பெண் அத்தோடு விட்டு விடவில்லை. தனக்கு நேர்ந்த அந்த சம்பவத்துக்கு எதிராக, இலங்கை உச்ச நீதிமன்றில் அவர் வழக்குத் தாக்கல் செய்தார். மூன்று வருடங்கள் வழக்கு நீடித்தது. இறுதியில், 2017ம் ஆண்டு நயோமி கோல்மன் எனும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

புத்தரின் உருவத்தை நயோமி பச்சை குத்திக் கொண்டமை, அவருடைய அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரைக் கைது செய்ததன் மூலம், அவரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. 

எனவே, புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக் கொண்டதைக் காரணம் காட்டி, அந்தப் பெண்ணை தடுத்து வைத்தமைக்காக, 05 லட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று, அரசாங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு, வழக்குச் செலவாக இரண்டு லட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.

இவற்றுக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாவை அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நயோமி கோல்மன் எனும் பெண்ணுக்கு ஏற்பட்டமையைப் போலவே மஸாஹினா எனும் பெண்ணுக்கும் அநீதிழைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, மஸாஹினாவின் ஆடையில் காணப்பட்டது போன்ற ‘சக்கரங்கள்’ அச்சிடப்பட்ட ஆடைகள், கடைகளில் மிகப்பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பேசாமல் இந்த இலங்கை இராணுவத்தை போலீசாரை மாடு மேய்க்க அனுப்பலாம் அதுவே மிகவும் சிறந்தது, பொது அறிவும் உலக அறிவும் என்பது இவர்களுக்கு கொஞ்சமும் கூட இல்லை போக்குவரத்து போலீசார் இது தர்மசக்கரம் இல்லை என்று தெளிவாக மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்து மீண்டும் பொய்யாக்கப்பட்டு கைது செய்யப்படுவது என்றால் வேண்டுமென்றே முஸ்லிம்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் அடையாளம் எனவே இங்கு பாதிக்கப்பட்ட கைதி மஸாஹினாவுக்கு நஷ்ட ஈடுக்கான வழக்குகள் தொடரப்பட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டு அவருக்கு எதிராக பல மில்லியன்கள் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும் ஏழைகள் என்பதால் யாரும் இவரை புறக்கணிக்க வேண்டாம் தயவு செய்து இறைவனுக்காக இதனை படித்தவர்களும் வசதி உள்ளவர்களும் இந்த வழக்கினை போட்டுக் கொடுத்து அவருக்கு உரிய மான நஷ்ட ஈட்டுத் தொகையை பெற்றுக்கொடுக்குமாறு இறைவனுக்காக வேண்டுகிறோம் மேலும் இந்த செய்தியின் அப்டேட்டை இன்ஷா அல்லாஹ் வழக்குகள் முடிந்தவுடன் பழையதை சுட்டிக்காட்டி புதியதை போட்டுக் கொள்ளவும்.

    ReplyDelete
  2. எமது வழக்கறிஞர்கள் அந்த பிரித்தானிய பென்னின் வழக்கை ஏன் ஆதாரமாகவும் காட்டி வாதாடலாம்,

    ReplyDelete
  3. மத அடையாள சின்னத்துக்கே இவ்வாலவ்க்கு கொதிக்கிறார்கள் அப்போ நம்ம இஸ்லாத்தின் அடிப்படை பள்ளிகளை உடைத்து அசிங்க அடுத்தியவாங்களுக்கு எங்கயா சட்டம்....

    ReplyDelete

Powered by Blogger.