Header Ads



கல்முனையில் பாதுகாப்பை பலப்படுத்துவது, பற்றி அவசர கலந்துரையாடல்

இன்று செவ்வாய்க்கிழமை -14- மாலை கல்முனை நகரில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆகியோரை அவசரமாக சந்தித்து இப்பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் இன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் சகோதரரும் தொழிலதிபருமான அமீர் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், சிவலிங்கம், சந்திரசேகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இன்று மாலை கல்முனை நகரில் சில தமிழ், முஸ்லிம் நபர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலையானது இரு சமூகத்தினரிடையே மேலும் விரிசல்கள் ஏற்படாமலும், இப்பிரதேசத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாதிருப்பதையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் மோதல் நிலைமைகள் ஏற்படாதவாறும் கல்முனை மாநகரின் பாதுகாப்பு கருதியும் மாநகரம் பூராகவும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக கல்முனை பூராகவும் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இரவு ஒன்பது மணிக்குப் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் நடமாடுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை புதன்கிழமை கல்முனையில் தமிழ், முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான சபை ஒன்றை அமைப்பதற்கும் மேற்படி கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கல்முனையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தேவையான அறிவுறுத்தல்களைையும் வழங்கியுள்ளார்.

(அஸ்லம் எஸ்.மெளலானா)

1 comment:

  1. காலம் காலமாக கல்முனை நெய்தலும் மருதமும் தமிழ் முஸ்லிம் அறிஞர்களும் கலைஞர்களும் மருவி அழகு செய்த பூமி. அது தன்னை தற்காத்துகொள்ள செயல்படும் சிவில் சமூகத்தை கொண்டுள்ளது. சம்பவம் நடந்த நேற்று இரு முக்கிய சந்திப்புகள் நடந்தமை வரவேற்க்கத்தக்கது. ஒன்று இந்து முஸ்லிம் பெளத்த சமய தலைவர்கள் கலந்துகொண்ட போதகர் கிருபைஆசா தலைமையில் நடந்த கல்முனை இன ஐக்கிய சம்மேளனம்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. அடுத்தது மாநகர தலைவர் எ.எம்.றஹீப் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பு. கல்முனை நகரம் செயற்ப்படும் சிவில் சமூக ஆர்வலர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவது நம்பிக்கை தருவதாகவும் முன்மாதிரியாகவும் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.