Header Ads



எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - மாவை

பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, அவசரகால நிலைமையினாலோ  அல்லது பயங்கரவாத தடை சட்டத்தினாலோ அப்பாவிகள் தண்டிக்கபடக் கூடாது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று -10- நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அவசரகால சட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்துகொண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த காரணியில் அவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம். அவர்களை ஏன் கைது செய்தீர்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தை தமிழ் பிரதேசங்களில் திணிக்க வேண்டாம். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

உடனடியாக எமது மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கப்பட்ட காரணம் என்ன. ஜனாதிபதி மீண்டும் மீண்டும் தவறிழைத்து வருகின்றார் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம், இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக இளம் சமுதாயத்தை மீண்டும் போராட்டத்தில் தள்ள வேண்டாம்  என்றார். 

இலங்கையில் எல்லா அரசாங்கத்தின் ஆட்சியிலும் தமிழர்கள் தான்  அதிகமாக அழிக்கப்பட்டுள்ளனர். யுத்தமாக இருந்தாலும் சரி இப்போது சர்வதேச பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி தமிழர்களே அழிக்கப்படுகின்றனர். ஆகவே தமிழர்களுக்கும் தமிழர் பிரதேசங்களுக்கும் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.