Header Ads



முஸ்லிம் ஆசிரியர்கள் அச்சம், அடிக்கடி சோதனை - தற்காலிக இடமாற்றத்திற்கு முயற்சி

- எம்.எல்.எஸ்.முஹம்மத் -

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகள்  மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கடமைபுரிந்து கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்கள் தொடர்ந்தும் அங்கு  பணிபுரிவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர் .

சபரகமுவ மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் கடந்த வருடங்களில் மாகாணக் கல்வி அமைச்சு வெளிமாகான தமிழ் மொழி மூல பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேவையில் இணைத்துக் கொண்டது.

இதற்கிணங்க 300 இற்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகள் பலவற்றிற்கு 5வருட கட்டாய சேவையின் அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேற்படி கிழக்கு மாகாண ஆசிரியர்களுள் 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமது 5வருட கட்டாய சேவைக் காலம் நிறைவு பெற முன்னர் அரசியல் அழுத்தங்களைப் பயன்படுத்தியும்,மருத்துவக் காரணங்களை குறிப்பிட்டும் தமது ஊர் பாடசாலைகளுக்கு ஏற்கனவே இடமாற்றங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

தற்போது மீதுள்ள 150 ஆசிரியர்களினதும் கட்டாய சேவைக் காலங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் தமது பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி இவ்வாசிரியர்களை விடுவிப்பதற்கு அதிபர்கள் சிலர் பின்வாங்கி வருகின்றனர்.  

அரச காரியாலய அலுவல்கள் உட்பட பொதுத் தேவைகளின்போது   சிங்கள மொழியில் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கி வரும் மேற்படி ஆசிரியர்களுக்கு இதுவரை காலமாக தங்குமிட வசதிகளை வழங்கியவர்கள் பலர் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அவற்றை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனால்  நாட்டின்  தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையில் புதிய தங்குமிடங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இவ்வாசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள  முஸ்லிம் பிரதேசங்களில் தங்குமிட வசதிகளைப் பெற்றுள்ள சில கிழக்கு மாகாண ஆசிரியர்களின் அறைகளை   பாதுகாப்புத் தரப்பினர் அடிக்கடி சோதனைகள் செய்து வருவதால் சமூகத்தில் முகங்கொடுக்க முடியாத அளவுக்கு மன உளைச்சல்களுக்கு தாம் ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய மனிதநேயப் பிரச்சினையாக  மாறிவரும் மேற்படி ஆசிரியர்களின் பாதுகாப்புப் பிரச்சினையை முன்னிட்டு 5வருட  கட்டாய சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள அனைத்து கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் அவசரமாக தமது ஊர் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென இவ்வாசிரியர்களின் குடும்பத்தினர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமைபுரியும் வெளிமாவட்டம் மற்றும் வேறு வலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை முன்னிட்டு இரண்டு மாதங்களிட்கு தற்காலிகமாக தமது சொந்த ஊர் பாடசாலைகளில் கடமைபுரியும் வகையில்  இடமாற்றங்களை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் மேற்கொண்டுள்ளதாக பல தேசிய  ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. கிழக்கு மாகாணத்துக்
    குள்ளேயே தமிழ்பிர
    தேசங்களில் பணிபுரி
    யும் நூற்றுக்கணக்கா
    ன ஆசிரியர்கள் பாது
    காப்பு வேண்டி முஸ்
    லிம்பிரதேசங்களுக்கு
    தற்காலிக இடமாற்ற
    ங்களை பெற்றுக்கொ
    ள்ளும் சூழ்நிலையில்
    இரத்தினபுரி ஆசிரிய
    ர்களின் விடயத்தினை
    முஸ்லிம் அரசியல்
    தரப்புக்கள் கட்டாயம்
    முன்னெடுக்கவேண்
    டும்.

    ReplyDelete

Powered by Blogger.