May 07, 2019

இலங்கை முஸ்லிம்கள் இன்று, எதிர்நோக்கியுள்ள முக்கிய சவால்கள்

(களனி பல்கலைக்கழக இஸ்லாமிய மஜ்லிஸின் வருடாந்த உஸ்வா சஞ்சிகைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்ஸில் ஒஃப் ஸ்ரீலங்காவின் தலைவரும், களனி பல்கலைக்கழக இஸ்லாமிய மஜலிஸின் ஸ்தாபக செயலாளருமான என்.எம். அமீன் வழங்கிய கட்டுரை)

இலங்கை வாழ் முஸ்லிம்களை ஒப்பீட்டளவில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னிருந்த நிலையைவிட பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் ஒரு சமூகமாக அடையாளப்படுத்தலாம். 

கல்வி, உயர்கல்வித் துறைகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் முஸ்லிம் சமூகம் திருப்திப்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்து வருவதனை புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக உள்ளது. 

சமூகம் இவை குறித்து பெருமைப்படக்கூடிய நிலையிருந்தாலும் சமூகத்தின் சில பிரிவினர்களது செயற்பாடுகள் முழு முஸ்லிம் சமூகத்தையும் தேசத்தின் முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.

அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தவர்களது செயற்பாடு காரணமாக முஸ்லிம் சமூகம் பற்றி மாற்றுச் சமூகத்தினர் குறிப்பாக பெரும்பான்மைச் சமூகத்திடையே முஸ்லிம்களைப் பற்றி கேள்வி எழுப்புகின்ற நிலையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலையும் உருவாகியுள்ளது. 

இக்கட்டுரையை எழுதுவதற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்த நாட்டில் பணிபுரியும் முஸ்லிம் நாடொன்றின் தூதுவரைச் சந்தித்த பெரும்பான்மைச் சமூகத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் இலங்கை முஸ்லிம்கள் ஏன் இந்தப் போக்கில் பயணிக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இப்படி பல இடங்களில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் பற்றி இன்று பேசப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தை பிறிதொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு தலைப்பட்டுள்ளனர்.  இதற்கு முன்னரில்லாத வகையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தீவிரவாதப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. 

அணியும் ஆடை, வியாபாரப் போக்கு, பெருகிவரும் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டியே இக்குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. கூடுதலான பள்ளிவாசல்களை நிறுவி, இந்த நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகின்றன. 

பௌத்த மக்களில் பெரும்பான்மையினர் இந்தக் குற்றச்சாட்டினைச் சுமத்தாத போதும் கடும்போக்கு சிங்கள, பௌத்த அமைப்புக்கள் அடிக்கடி இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்து, பெரும்பான்மையினர் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்துக்களை விதைக்க முற்படுகிறார்கள். இவ்வாறு எழுப்பப்படும் சில குற்றச்சாட்டுக்களுக்கு முஸ்லிம் சமூகத்தினால் இல்லை என்று தெளிவான பதில்களை அளிக்க முடியாதுள்ளது. கிராமங்கள், நகரங்கள் தோறும் வியாபித்து வரும் ஆத்மீக அமைப்புக்களிடையிலான கருத்து மோதல்கள் காரணமாக ஒவ்வொரு அமைப்பும் தமது அமைப்புகளுக்காகப் பள்ளிவாசல்களை நிறுவ முற்பட்டிருப்பதும் பள்ளிவாசல்களின் அதிகரிப்புக்கு காரணமாகும். 

மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சில முஸ்லிம் இளைஞர்கள் சேதப்படுத்திய சம்பவங்களும் சமூகத்தைத் தலைகுனிய வைத்துள்ளன. இலங்கையில் முஸ்லிம்கள் 1100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்தபோதும் பௌத்தர்களது வழிபாட்டுத் தளங்களை சேதத்துக்குள்ளாக்கியதாக ஒருபோதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படவில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில் சிங்கள முஸ்லிம் மோதல்கள் இடம்பெற்று, இரு தரப்பிலும் ஆட்பலிகள் இடம்பெற்றபோதும் பௌத்தர்கள் முஸ்லம்களது இறையில்லங்களை சேதமாக்கி நாசப்படுத்திய போதும் முஸ்லிம் தரப்புக்கள் இந்த விடயத்தில் மிகவும் நிதானமாகவே நடந்துவந்துள்ளன. மாவனல்லை, அளுத்கம, கிந்தொட்ட, அம்பாறை மற்றும் திகன போன்ற இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின் போது முஸ்லிம்களது இறையில்லங்கள் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உடைக்கப்பட்ட போதும் முஸ்லிம்களால் பௌத்த வழிபாட்டுத் தளங்கள் சேதமாக்கப்பட்ட ஒரு சம்பவம் கூட பதிவாகியதில்லை. இந்தப் பின்னணியில் கடந்த டிசம்பர் மாதத்தில் மாவனல்லைப் பிரதேசத்தை சேர்ந்த சில வழிதவறிய இளைஞர்கள் பௌத்த, இந்து, கத்தோலிக்க வழிபாட்டுத் தளங்களை சேதத்துக்குள்ளாக்கியதாகக் கூறப்படும் சம்பவங்கள் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்களா? என்ற கேள்வி இச்சம்பவங்கள் தொடர்பாக எழுப்பப்படுகின்றது.

இந்த நாட்டில் சிங்கள இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் அரசுக்கெதிராக ஆயுதம் தாங்கி போராடி கிளர்ச்சிகளிலீடுபட்ட போதிலும் பெரும் அச்சுறுத்தல்கள் அழிவுகளை எதிர்கொண்டும்கூட முஸ்லிம் இளைஞர்கள் ஜனநாயக ரீதியில் அஹிம்சாவழியில் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முற்படுகின்ற நிலையில், சிலைகளைத் தாக்கி எதனைத்தான் இவர்கள் அடைய முற்பட்டார்கள்? என்ற கேள்வி இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படுகின்றது. 

முஸ்லிம் சமூகம் ஒரு வர்த்தக சமூகம். நேர்மையான முறையில் வர்த்தகம் செய்வதனால் எமது மூதாதையர்களுக்கு சமூகங்களுக்கிடையே பெருமதிப்பும், கௌரவமும் இருந்தது. நாணயம் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களாக முஸ்லிம் வர்த்தகர்கள் கருதப்பட்டார்கள். இன்று இந்த நற்பெயர் நாளுக்கு நாள் மங்கிச் செல்கின்றது. மோசடி வர்த்தகங்களிலீடுபடுவோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏதோவொரு வகையில் அவர்கள் பெயர்தாங்கி முஸ்லிம்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.  

கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவோர்களில் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. நீதிமன்றங்களில் தொடரபட்டுள்ள வழக்குகளும், சிறையிலுள்ளவர்களது எண்ணிக்கையும் இதனை நிரூபிப்பதாகவுள்ளது. 

சட்டவிரோதமான முறையில் கடத்தல் வியாபாரங்களில் ஈடுபடும் பலரும் ஜுப்பா, தொப்பி, தாடி வைத்தவர்களாக இருப்பதும், அபாயா அணிந்த பெண்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இவ்வாறான ஆடைகளை அணிபவர்கள் பெரும் கௌரவத்துடன் நோக்கப்பட்டார்கள். இன்று அந்த நிலை முற்றாக மாறியுள்ளது. 

2018 ஜனவரி முதல் ஜுன் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் கடத்தலில் ஈடுபட்டவர்களது புள்ளிவிபரங்களில் முஸ்லிம்களது விகிதாசாரம் உச்சகட்டத்தில் இருக்கின்றது. 70சதவீதம் சிகரட், 60சதவீதம் நாணயங்கள், 40சதவீதம் மாணிக்கக் கற்கள், 40சதவீதம் தங்கம், 61சதவீதம் ஆபத்தான போதை வஸ்துக்கள் 33சதவீதம் என உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டின் சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளாக இருப்போர் 20மூ மேற்பட்ட விகிதாசாரத்தினர் முஸ்லிம்கள் ஆவார்கள். தினமும் நீதிமன்றங்களுக்குச் சென்றால் இந்த புள்ளிவிபரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். 

இன்று நாட்டில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் வியாபாரத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டப்படுகின்றது. 33சதவீதம் சதவீதமான முஸ்லிம்கள் இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. 

இது தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் முஸ்லிம் சமூகமே விரோதச் செயல்களில் ஈடுபடும் ஒரு சமூகம் என்ற தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து முஸ்லிம் சமூகம் மீட்டெடுக்கப்படாவிடின் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கே பாதிப்பாக அமையும். குறுகிய இலாபம் கருதி சமூகத்தின் ஒரு சாராரின் இவ்வாறான செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் இன்று குற்றவாளிக் கூண்டிற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

பத்து சதவீதமாக வாழும் முஸ்லிம்கள் அரச தொழில்வாய்ப்புக்களிலோ பல்கலைக்கழகங்களிலோ பத்து சதவீதம் கூட இல்லாத போதும் சமூக விரோத செயற்பாடுகளில் 50சதவீதம் சதவீதத்தையும் தாண்டிச் செல்வது பற்றி சமூகம் தீவிரமாக சிந்திக்கத் தவறினால் ஏற்படப் போகும் விளைவுகள் பாரதூரமானதாகவே இருக்கும்.

அத்தோடு, கொழும்பு முஸ்லிம்களின் நிலைமையும் சந்தோசப்படும் நிலையில் இல்லை. கொழும்பு நாட்டின் தலைநகராகவும், பொருளாதாரத்தின் கேந்திரமாகவும் காணப்படுவதோடு பல முஸ்லிம் சமூக அமைப்புகளின் தலைமைக் காரியாலயமும் கொழும்பிலே அமைந்துள்ளது. அவ்வாறிருந்தும் அவற்றின் சேவைகள் கொழும்பு மக்களைச் சென்றடைகின்றதா? என்பது இன்றளவிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. கொழும்பு முஸ்லிம்களில் ஒரு பகுதியினரின் நிலையை சமூக வலைத்தளத்தில் எம்.என்.முஹம்மத் என்பவர் பதிவிட்டிருந்த கீழ்வரும் உண்மைச் சம்பவம் உணர்த்துகின்றது.   

 ஒரு சமூகமாக இலங்கையில் வாழ்வதற்கு வெட்கப்பட வேண்டிய நிலைமையில் உள்ளோம் .
அண்மைக்காலமாக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்க்கின்றபோது மிகவும் கவலை தருகின்றது துபாயின் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலில் பல முஸ்லிம் இளைஞர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அதனை அடியொற்றியதாக கொழும்பில் நடைபெறும் திடீர் தாக்குதல்கள் கைதுகள்எங்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தியைச் சொல்கிறது அதாவது இந்த நாடு சீரழிவதற்கு எமது சமூகத்தை சேர்ந்த பலர் நல்ல பங்களிப்பை வழங்கியுள்ளனர். உண்மையில் இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஒரு ஆய்வு தேவைப்படுகின்றது
ஆயிரம்தான் நியாயங்கள் சொல்லிக்கொண்டாலும் எமது கொழும்பு முஸ்லிம்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது கொழும்பில் அநேக முஸ்லிம் இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்களாக காணப்படுவது என்பதை சிலர் பேசவும் கூச்சப்படுகின்றனர
ஆனால் கொழும்பு இளைஞர்களின் நிலைமை மிக பயங்கரமானது ஒரு நாட்டின் தலைநகரத்தில் வாழ்கின்ற மக்கள் ஆரோக்கியமாக உள்ள போதே அந்த நாடும் ஆரோக்கியமாக இருக்கும் .ஆனால் சேரிப்புறங்களில் வாழும் கொழும்பு மக்களின் நிலைமை மிக பயங்கரமானது ஆயிரக்கணக்கில் வாக்குகளை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த பின்பு அவர்களை திரும்பிப் பார்ப்பதும் இல்லை.

அனேகமாக எல்லா விடயங்களும் வாய்ப்பேச்சு அளவிலேயே உள்ளன .சில உதாரணங்களை உங்களுக்கு முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்

ஒருமுறை கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையில் மாணவிகளுக்கான ஒரு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை செய்து கொண்டிருந்தேன் கருத்தரங்கின் இறுதியில் ஒரு மாணவி என்னிடம் வந்து கூறினார் நீங்கள் மிகவும் அழகான சில வழிகாட்டல்களை அளித்தீர்கள் ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளாத கண்டுகொள்ளாத ஒரு பெரிய பிரச்சினை கொழும்பு முஸ்லிம் சமூகத்தை இருக்கின்றது அப்பொழுது நான் அந்த மாணவியிடம் மிகவும் அன்பாக கேட்டேன். மகள் உங்களுடைய பிரச்சினை என்ன ,

அந்த உயர்தரம் கற்கும் இந்தப் பிள்ளையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. ஒரு மிகச்சிறிய ஒரு அறையில் நாங்கள் 9 பேர் தூங்குகிறோம் நீங்கள் கற்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கவேண்டும் என்று அழகாகச் சொன்னீர்கள். ஆனால் நாங்கள் எப்படி அடுத்தநாளை கழிப்பது என்பதை எங்களுக்கு தான் தெரியும் .அந்த மாணவி சொன்னார் இங்குள்ள அநேக பிள்ளைகள் நிலைமை இதுதான் எங்கள் சகோதரர்களும் தந்தைமார்களும் ஒழுங்கான தொழில் இன்றியும் பல போது போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டும் நாங்கள் வாழும் வாழ்க்கை மிகப் பயங்கரமானது.
எமது ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வதே எமக்கு மிகப்பெரிய சவால் உண்மையில் அந்த மாணவியின் அந்த கருத்துக்களுக்கு முன்னால் நான் மௌனித்து போனேன் .

எல்லோருக்கும் அழகாக பேசலாம் ஆனால் மக்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் .

கொழும்பு தெற்கில் வாழும் வியாபார சமூகத்தினரே! நீங்கள் கூலி வேலைக்காக பயன்படுத்தும் அந்த இளைஞர்களை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள் ஒன்றுக்கு இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு வைத்துள்ளோம்,ஆனால் அங்கே சேரிப்புறங்களில் எமது ஒரு சமூகம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கின்றது

இன்னொரு சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் முகநூலில் இவ்வாறான விடயங்களைபகிர்ந்து கொள்வது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பது எனக்கு நன்கு தெரியும் என்றாலும் சில அற்ப விஷயங்களுக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி செல்லும் எமது தலைமைகள் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக குறிப்பிடுகின்றேன்.

எமது சமூகத்தில் பெண்களை மாணிக்கமாக ஒரு கூட்டம் மூடிப் பாதுகாக்கிறது .ஆனால் இன்னொரு பக்கம் தாய் விபச்சாரம் செய்யும் போதும் மகள் ஒரு வாடிக்கையாளர் உள கே உள்ளார் பின்பு வரவும் என்று கூறும் அவலம் கொழும்பில் நடக்கிறது.

நான் இதனை கற்பனை செய்து கூறவில்லை மிகவும் ஆதாரபூர்வமான தகவலின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

அன்பின் சமூகத் தலைவர்களே !பால்மாவில் பன்றிக்கொழுப்பு இருப்பதா இல்லையாஎன்பது முக்கியம்தான் ஆனால் அதற்கு அப்பால் மிகப்பெரியதொரு ஹராம் சமூகத்தில் பகிரங்கமாக நடக்கின்றது .

இந்த நாட்டுக்கு நாங்கள் கொடுக்கும் முன்மாதிரி இதுதானா? இந்த நாடு எங்களால் அழியக்கூடாது நாம் எமது சமூக கடமைகளைச் செய்ய வேண்டும் .

கொழும்பு முஸ்லிம்கள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் ஆனால் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எவ்வளவுதான் கஷ்டங்கள் இருந்தாலும் மிகவும் பண்பாக வாழும் சமூகமும் கொழும்பில் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது .

ஆனால் அவர்கள் மொத்த சனத்தொகையில் சொற்ப அளவினரே கொழும்பு சமூகத்தின் அது முஸ்லிம்கள் மாத்திரமல்ல எல்லா சமூகங்களுக்கும் கல்விக் கண்களைத் திறக்க வேண்டிய தேவையுள்ளது. ஆயிரம் பேரை துபாயில் என்ன அமெரிக்காவில் கைது செய்யலாம் ஆனால் பிரச்சினைக்கான அடிப்படைகளை கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியமானது.

இக்கட்டுரையை எழுதி முடிக்கும் போது நியுஸிலாந்தில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாக்குதல் எம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. தாக்குதலை மேற்கொண்டவரை உலகமே அங்கீகரிக்காத போதும் அவர் எழுதியிருந்த 89 பக்க கடிதத்தில் உள்ள சில விடயங்கள் எமக்கும் படிப்பினையாக அமைய வேண்டும். நாம் இலங்கையர்களாக இருந்தபோதும் பெரும்பான்மையினரது மனோபாவத்தைப் புரிந்து வாழ்வது முக்கியம். சிதறுண்டு வாழும் முஸ்லிம்கள் என்றவகையில் மற்றவர்களை வெறுப்புக்குள்ளாக்காத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளத் தவறினால் நியுஸிலாந்தில் நடந்தது போன்ற சம்பவங்கள் எமக்கும் நடக்காதிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்.  

இறை பாதுகாப்புக்கு அடுத்து நாம் வாழும் சூழலில் உள்ளவர்கள் மாற்று மதத்தவர்களது மனதை வென்றெடுப்பதே எமது பாதுகாப்புக்கான சிறந்த ஆயுதமாகும். சமூகம் என்றவகையில் குறுகிய பேதங்களை மறந்து ஒரு மேசையில் இருந்து பேசி எதிர்காலம் குறித்த நல்ல தீர்வுகளை காண்பதற்காகவே கசப்பானாலும் சில விடயங்களை முன்வைத்தேன். 


3 கருத்துரைகள்:

We must be objective when we write article like this. I do not support all what these radicals did? They are wrong and yet, we must tell Sri Lankan government they must support Muslim community too. We like all have been paying taxes and we like all other communities work hard to earn money and yet, we have been deliberately marginalised in many areas.
1) In law colleges examination.
2) in SLAS Examinations
3) in SLES examinations
4) In SLOS Examinations.
5) In many other areas of jobs and employment
6) In police, Air force, Army and Navy and other government jobs.
we should demand for all this basic human rights.
We have been a community of trade that is one of main problems. we do not update our skills and knowledge....
our poverty level is higher than any other community? People do not do crimes except there is some social discrimination and bias.
I know well in the past, Sri Lankan governments did have bias. since they won the war, they have been looking down our community as if we have supported for LTTE. What crime we have done? what crime people of Aluthgama have done? what crime people Digana have done? When BBS did all crimes Sri Lankan government did not take actions and yet, When some Muslim radicals did some crimes they take quick action why this discrimination in applying the rule of law

மதத்தீவிரவாதமும்
வியாபாரதீவிரவாத
மும் (பேராசை) இல
ங்கை முஸ்லிம்களை
சூழ்ந்துவிட்ட நிலை
மை கவலையளிக்கி
ன்றது.
பள்ளிவாசல் மதரஸா
அதிகரிப்புக்குக்கார
ணமாக வெளிநாட்டு
நிதிமூலங்களில் இய
ங்கும் இஸ்லாமிய
அமைப்புக்களின்
செயற்பாடுகள் அமை
கின்றன.
இவ்விரண்டு போக்கு
களும் இலங்கை
முஸ்லிம்களின் எதிர்
கால இருப்பை கலங்
கப்படுத்தி நிற்கின்ற
ன.
அமைதியையும் நேர்
மையையும் விரும்பும்
பல முஸ்லிம்குடும்ப
ங்கள் இன்நிலைமை
யினால் புலம்பெயர்
ந்து செல்வதும் தவிர்
க்கமுடியாது போய்
விடும்.

some Saudi support clerics become rich with money and commission they get from them to spend on poor. All these money brought destruction to us

Post a Comment