Header Ads



இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட, ஊரின் தற்போதைய நிலை


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல அமைதியின்மை சம்பவங்கள் ஏற்பட்டிருந்தன.

குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இவ்வாறான அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

குறிப்பாக முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் உள்ளிட்ட அவர்களின் சொத்துக்களுக்கு பெரியளவில் சேதம் விளைவிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்ட பகுதிகளில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாத்தாண்டி பகுதியும் ஒன்றாகும்.

நாத்தாண்டி பகுதியில் கடந்த 13ஆம் தேதி பிற்பகல் வேளையில் பெருந்திரளான அடையாளம் தெரியாத நபர்கள், பிரதேசத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து, முஸ்லிம் மக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.

பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பலர் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டிருந்தன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புகள் காணப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியிருந்த போதிலும், அதனை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள பின்னணியில் அந்த பிரதேசத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக பிபிசி தமிழ் அந்த பகுதிக்கு பயணம் மேற்கொண்டது.

பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் தாக்குதல் நடத்தப்படவில்லை என ராணுவ தளபதி உறுதியாக கூறிய போதிலும், ராணுவத்தினர் தன்மீது பாரதூரமான தாக்குதல்களை நடத்தியதாக நாத்தாண்டி பகுதியைச் சேர்ந்த குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நாத்தாண்டி - துன்மோதர பகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்ற நிலையில், அங்கு வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் ஒரே தமிழராக குமார் விளங்குகின்றார்.

நாத்தாண்டி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தனது வர்த்தக நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, தான் துன்மோதர பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு அந்த சந்தர்ப்பத்திலேயே சென்றதாக அவர் தெரிவித்தார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்று, வர்த்தக நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்ந்து கொண்டிருந்த தருணத்தில், வாகனம் ஒன்றில் வந்த ராணுவத்தினர் எந்தவித விசாரணைகளையும் தன்னிடம் நடத்தாமல், தன்னை வலுக்கட்டாயமாக ராணுவ வாகனத்திற்குள் ஏற்றியதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

இவ்வாறு வாகனத்திற்குள் ஏற்றிய தன்னை, பல ராணுவத்தினர் ஒன்றிணைந்து, சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக தாக்கியதாக குமார் தெரிவிக்கின்றார்.

ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த தருணத்திலேயே, வாகனத்திற்குள்ளே இருந்த ராணுவத்தினர் தன்னை தாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதணி அணிந்த கால்களினாலும், துப்பாக்கியினாலும், பொல்லுகளினாலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் அடையாளங்களையும் குமார் காட்டினார்.

சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னரே "ஏன் அந்த இடத்தில் நின்றாய்" என ராணுவத்தினர் வினவியதாக அவர் குறிப்பிட்டார்.

அது தனது வர்த்தக நிலையம் எனவும், தனது வர்த்தக நிலையத்திற்கு அருகில் தனக்கு இருக்க முடியாதா எனவும் தான் ராணுவத்திடம் வினவியதாக குமார் கூறினார்.

அதற்கு, ஏன் இந்த விடயத்தை இதற்கு முன்னதாகவே தெரிவிக்கவில்லை என தன்னிடம் ராணுவத்தினர் கேட்டபோது, தன்னை பேசுவதற்கு இடமளிக்காத பின்னணியில் தான் எவ்வாறு கூறுவது என பதிலளித்தாதகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, வர்த்தக நிலையத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் தன்னை இறக்கிவிட்டு, எந்தவித மன்னிப்பும் கோராத நிலையில் ராணுவத்தினர் சென்றதாக குமார் கவலை வெளியிடுகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுமார் 2 வார காலம் தான் சிகிச்சைகளை பெற்று, மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் ஏன் புகார் பதிவு செய்யவில்லை என பிபிசி தமிழ் குமாரிடம் வினவியது.

 புத்தளம் - நாத்தாண்டி பகுதி இப்போது எப்படியுள்ளது? பிபிசி தமிழின் கள ஆய்வு
தான் சிகிச்சைகளை பெற்ற காலப் பகுதியில் இந்த பகுதிக்கு போலீஸார் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் வருகைத்தந்து விசாரணைகளை நடத்தியிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தான் பிரதேசத்தில் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

குமார் மீதான தாக்குதலுக்கு ராணுவத்தினரின் பதில்

நாத்தாண்டி - துன்மோதர பகுதியைச் சேர்ந்த குமார் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என ராணுவ பதில் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தான் உரிய தரப்பினருக்கு அறிவித்து, சம்பவம் தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.