Header Ads



"இன்றைய நமது சூழலுக்கும், இது அப்படியே பொருந்தும்"


(இரவு சிறப்புத் தொழுகையில் நேற்று 20.05.2019 "அல் கஹ்ஃப்-" குர்ஆனின் 18ஆம் அத்தியாயம் ஓதப்பட்டது. அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு சுவையான காட்சி...)

அவன் அதிபயங்கர கொடுங்கோல் மன்னன்.

நாட்டு மக்கள் அனைவரும் தன்னைத்தான் வழிபட வேண்டும், தனக்குத்தான் சிரம் பணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான்.

யாராவது மறுத்தால் உயிர் உடலில் இருக்காது.

“இறைவனைத் தவிர வேறு யாரையும் வழிபட மாட்டோம்...

அந்த ஏகனைத் தவிர வேறு யாருக்கும் தலை சாய்க்க மாட்டோம்” என்று கொள்கை முழக்கம் செய்த ஏகத்துவவாதிகளுக்குக் கொடூரங்களும் அடக்குமுறைகளும் காத்திருந்தன.

இத்தகைய சூழலில் இளைஞர்கள் சிலர் தங்களின் ஏகத்துவக் கொள்கையைத் துணிந்து பிரகடனம் செய்தனர்.

அவ்வாறு பிரகடனம் செய்துவிட்டு அரசின் அடக்குமுறைகளிலிருந்து தப்பிப்பதற்காக மலைக்குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். குகையில் தஞ்சம் புகுந்தபோது அந்த இளைஞர்கள் மனம் உருகிப் பிரார்த்தித்தனர்.

“எங்கள் இறைவனே, உன் பிரத்யேக அருளை எங்களுக்கு வழங்குவாயாக. எங்கள் காரியங்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக.”

இந்தப் பிரார்த்தனைக்கு இறைவன் அளித்த பதில் என்ன?

அற்புதமான முறையில் அந்த இளைஞர்களை உறங்கவைத்தான். ஓராண்டல்ல, ஈராண்டல்ல. கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகள்.

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அந்த நாட்டில் கொடுங்கோல் மன்னனின் ஆட்சி ஒழிந்து, ஓரிறைக் கொள்கையாளர்களின் ஆட்சியே மலர்ந்துவிட்டது.

முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்களை இறைவன் மீண்டும் விழிக்கச் செய்தான்.

விழித்துப் பார்த்த இளைஞர்கள் தேசமே அடியோடு மாறி இருப்பதைப் பார்த்து வியந்தனர்.

எந்தக் கொள்கைக்காக நாம் குரல்கொடுத்தோமோ, போராடினோமோ அந்தக் கொள்கையாளர்களின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தனர்.

கொள்கைத் தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு மீண்டும் குகையில் படுத்துக்கொண்டனர்.
அவர்களின் உயிர் பிரிந்தது.

“ஏகத்துவமும் மறுமையும் உண்மையானவை. இவற்றில்தான் உங்கள் நன்மை அடங்கியிருக்கிறது. இவற்றைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அன்றைய மக்காவின் இறைநிராகரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்தவே இந்த நிகழ்வு இறுதி வேதத்தில் பதிவு செய்யப்பட்டது.

இன்றைய நமது சூழலுக்கும் இது அப்படியே பொருந்தும்.

இறைமறுப்பின்- இணைவைப்பின் ஆட்சிதான் மேலோங்கியிருக்கிறது என்று ஒருபோதும் நாம் அஞ்சவோ கலங்கவோ தேவையில்லை.

ஓரிறைக் கொள்கையிலும் மறுமைக் கொள்கையிலும் நாம் உறுதியோடு இருந்து அந்த இளைஞர்களைப் போல் இறைவனையே முற்றிலும் சார்ந்திருந்து பொறுமையுடனும் விவேகத்துடனும் செயல்பட்டால்-

காட்சியும் மாறும், ஆட்சியும் மாறும்.

அச்சம் அகன்று அமைதி மலரும்.

இது உறுதி. 

-சிராஜுல்ஹஸன்


4 comments:

  1. Masha allah great example

    ReplyDelete
  2. இதை எழுதியவர் அந்த இளையோர் போல் செய்து காட்டட்டும் நாங்களும் பின்னால் வருகிறோம்.

    ReplyDelete
  3. உண்மையாகவே பொருந்துகிறது.

    ReplyDelete

Powered by Blogger.