Header Ads



சிங்களவர்களோடு ஒட்டி உறவாடிக் கொள்வதற்கான, சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை

பெரும்பான்மை சமூகத்தோடு எங்களது பழக்க வழக்கங்களை ஒட்டி உறவாடிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கவலை என்னுடைய உள்ளத்தில் உள்ளது என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையின் ஏற்பாட்டின் இன நல்லுறவுக்கான இப்தார் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் மனிதாபிமான முறையிலும், கௌரவமாகவும் வழி நடாத்தி எங்களது உள்ளங்களை வென்று உங்களது பணிகளை திறம்பட செய்தமைக்கு இராணுவனத்தினர் மற்றும் பொலிஸாருக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறு செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன்.

எமது பிரதேசத்தில் பிழையான நடவடிக்கையில் யாராவது ஈடுபடுவார்களாக இருந்தால் அவர்களை காட்டிக் கொடுப்பதில் எமது மக்கள் பின் நிற்கமாட்டார்கள் என்பதை இந்த இடத்தில் தைரியமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

எப்பொழுதும் இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடமே கிடையாது. இதில் சிலருக்கு மதம் தலையில் கொண்டு அடித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பழிகள் இன்னும் பலரது மனதில் இருந்து நீங்கவில்லை. இந்த அநியாயத்தை ஏன் செய்தார்கள் என்றும் எங்களுக்கு தெரியாமல் உள்ளது.

நாங்கள் உங்களோடு இருக்கின்றோம். நீங்களும் எங்களோடு இருங்கள். உலகத்திலே இலங்கையைப் போல் ஒரு நாடு எங்கும் கிடையாது. பெரும்பான்மை சமூகத்தோடு எங்களது பழக்க வழக்கங்களை அவர்களோடு ஒட்டி உறவாடிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கவலை என்னுடைய உள்ளத்தில் உள்ளது.

எதிர்காலத்தில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்கள் என்கின்ற விடயத்தில் அவர்களை நாங்கள் நெருங்கி, அவர்கள் எங்களை நெருங்க வைத்து எங்களது கடமைகள், நோன்புகள், வாழ்க்கைகள், நடவடிக்கைகள், தொழுகைகள் என்ன என்கின்ற விடயத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

முஸ்லிம்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்ற விடயத்தில் நாங்கள் தவறியிருக்கின்றோம் என்பது சில பிரச்சனையாக இருக்கின்றது என்றார்.

No comments

Powered by Blogger.