Header Ads



மத்ரசாக்கள் கல்வியமைச்சின் கீழ் உள்ளீர்ப்பு - ஷரிஆ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் - ரணில்

கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு (ஷரி-ஆ) அனுமதி வழங்காதிருக்கவும் மத்ரசாக்களை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில், நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேற்படி பல்கலைக்கழகம் மற்றும் மத்ரசாக்கள் குறித்து, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இதுபற்றி கலந்துரையாடப்பட்ட நிலையில், அவ்வனைவரதும் இணக்கத்துடன், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.

பட்டக்கல்வி நிறுவனமொன்றுக்கான அனுமதியை மாத்திரமே வழங்க முடியுமென்றும் தவிர, ஷரி-ஆ பல்கலைக்கழகமொன்றை நடத்த, ஒருபோதும் இடமில்லை என்றும் இனம், மதத்தை முன்னிலைப்படுத்தாது, கல்வியை மாத்திரம் நோக்காகக் கொண்டு மாணவர்களை உள்வாங்கி நடத்துவதற்கே அனுமதி வழங்கப்படும் என்றும், பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மத்ரசாக்களை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இது விவகாரத்தில், கல்வி அமைச்சும் முஸ்லிம் விவகார அமைச்சும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும், பிரதமர் வலியுறுத்தினார்.

1 comment:

  1. கௌரவ ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் ஷரியாப் பல்கலைக்கழகம் அல்லவென்றும் அது சகல இன மாணவர்களுக்கும் தொழிற் கல்வியைக் கற்பிக்க வல்ல ஒரு கல்விக்கூடம் என்றும் பல பேட்டிகளில் மாறி மாறிக் கூறியுள்ளார்கள். திரும்பத் திரும்ப ஏன் அந்த வேகாத பருப்பை இயக்கமற்ற Grinder இல் போட்டுத் திரும்பத் திரும்ப அரைக்கின்றீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.