Header Ads



83 இலட்சம் பணம், 97 பவுண் தங்க ஆபரணங்களுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவர் கைது

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு முக்கிய சந்தேக நபரான தெஹிவளை, கல்விகாரை வீதியைச் சேர்ந்த புஹாரி மொஹம்மட் ராபிக் என்பவரை கொம்பனிவீதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 10, மருதானை, டி. பி. ஜாயா வீதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி சந்தேக நபரின் தனிப்பட்ட அலுவலகத்தை சோதனையிட்ட பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 83 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தையும், 97 பவுண் தங்க ஆபரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

அத்துடன் மேற்படி சந்தேக நபரின் தெஹிவளை பிரதேசத்திலுள்ள சொகுசு வீடொன்றையும், வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

இதேவேளை, பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும் நெருக்கமான உறவையும், நிதிகொடுக்கல் வாங்கல்களையும் பேணி வந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹம்மட் அலியார் என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

60 வயதுடைய இச் சந்தேகநபர் பயங்கரவாதிகளினால் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயன்படுத்திவந்த மறைவிடம் அல்லது பயிற்சி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சஹ்ரானுடன் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்பை பேணிவந்த இச் சந்தேக நபர் பயன்படுத்தி வந்த பல்வேறு வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆயுதங்களையோ,வெடிபொருட்களையோ கண்டுபிடிக்காமல் விட்டுவைக்கப் போவதில்லையென்றும் அவற்றை எவ்வாறாவது கண்டுப்பிடித்தே தீருவோம் என்று உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த பயங்கரவாத குழுவுடன் தொடர்பு வைத்துள்ள அனைவரையும் கைது செய்யும் அதேசமயம் அவர்களுடன் தொடர்புபட்ட சகல சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடி மற்றும் மருதானை பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரினால் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்

No comments

Powered by Blogger.