April 10, 2019

நான் இராஜினாமாச் செய்யவில்லை - நசீர் Mp

நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடும் அதன் தலைமையோடும் முரண்பட்டுள்ளதாகவும் அதனால் அட்டாளைச்சேனைப் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நான் இராஜினாமாச் செய்துள்ளதாகவும் சில ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்விடயமானது வெறும் கட்டுக்கதை எனவும் இதனை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீதிகள் சிலவற்றை காபட் வீதியாக மாற்றியமைத்து அபிவிருத்தி செய்யும் வேலைகளை பார்வையிட்டதுடன் கோணாவத்தைப் பாலம் நிர்மாணத்திற்கான முன்னெடுப்பு வேலைத்திட்டத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்கள் சிலவற்றில் தன்னைப் பற்றி வேண்டுமென்று சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமிக்கும் நிகழ்வு  அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச சபை உறுப்பினர் ரி.ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் என்றென்றும் விசுவாசமாகவே நடந்து வருகின்றேன். இக்கட்சி எனக்கு வழங்கிய அரசியல்  அதிகாரத்தின் மூலம் இப்பிராந்திய அபிவிருத்திகளுக்கும், சமூக நல செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடிந்தது.
மாற்றுக் கட்சிக்காரர்களின் சில சதித்திட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பல்வேறு விடயங்கள் தற்காலத்தில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்தான் என்மீதான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக நான் உணர்கின்றேன். எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எந்த சந்தர்ப்பத்திலேனும் நான் துரோகம் இழைக்க நினைத்தும் கூடப் பார்த்ததில்லை. 
கட்சியின் தலைமைக்கும் எனக்குமிடையில் பரிவினையினையும், பிழவுகளையும் ஏற்படுத்தி வேறு சிலர் நன்மையடையப் பார்க்கின்றார்கள். இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு நான் ஒருபோதும் அஞ்சிவிடப் போவதில்லை. எமது பிராந்திய மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு என்றும் விசுவாசமாக செயற்படுபவர்கள். அதன் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேசிப் பட்டியல் மூலமாக எனக்கு வழங்கப்பட்டு இப்பிராந்திய மக்களின் நன்மைகளுக்காக செயற்படும்படி எமது கட்சியின் தலைமை பணித்தது. அதற்கமைவாக நமது மக்கள் நலனுக்காக நான் செயற்பட்டு வருகின்றேன்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்தான் அம்பாறை மாவட்டத்தின் உள்ள கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பிரதேசமும் நன்கு திட்டமிடப்பட்டு அபிவிருத்தியின் தேவைகள் அடையாளப்படுத்தப்பட்டு பிரதேச ரீதியாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலமாக மக்களின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திகளை மக்கள் கரங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கைக்கு பாரிய சவாலாக உள்ள கோணவத்தைப் பாலத்தினை புனர்நிர்மாணம் செய்து புதியதோர் பாலத்தினை அவ்விடத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம். அதற்கான வேலைத்திட்டத்தினை எதிர்வரும் 20 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளோம். இப்பாலத்தின் கீழ்ப் பகுதியில் நீர்த்தாவரங்கள் தேங்குவதால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கைகள் ஒவ்வொரு போகங்களிலும் பாதிப்படைகின்றன.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சிதைந்துபோயிருந்த பல வீதிகளை நாம் காபட் வீதிகளாகவும் கொங்றீட் வீதிகளாகவும் மாற்றியிருக்கின்றோம். அத்தோடு கோணாவத்தை ஆற்றங்கரை நடைபாதை அமைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்தினையும் இங்குள்ள பொது விளையாட்டு மைதானத்தினை தேசிய தரத்திற்கு கொண்டு செல்வதற்குமான வேலைத்திட்டங்களையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்னாலான உதிவிகளை நான் செய்து வருகின்றேன். நமது மக்கள் அனைத்துத் துறைகளிலும் விருத்தி பெற்று ஏனையவர்கள்போல் சமமாக வாழ வேண்டும் என்பதே எனது நோக்காகும் என்றார்.   

(எம்.ஏ.றமீஸ்)

0 கருத்துரைகள்:

Post a Comment