April 26, 2019

பதற்றமான சூழ்நிலை தொடர்பான, சில முக்கிய குறிப்புக்கள்

Ash-Sheikh S.H.M.Faleel (Naleemi)

இலங்கை பல இனங்களைக்கொண்ட நாடு என்பதால் இனங்களுக்கிடையிலான சமாதான சகவாழ்வு அவசியமாதாகும். இலங்கை முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களுடன் இரண்டரக்கலந்தும் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வாழுகின்ற சிறுபான்மையாக இருப்பதால் பிறரில் தங்கி வாழுகிறார்கள். பிறரது உதவி எப்போதும் அவர்களுக்குத்தேவை. வைத்தியசாலை,காரியாலயங்கள் போன்ற இடங்கள் இதற்கு உதாரணமாகும்.
ஓர் இனம் மற்றோர் இனம் பற்றிய சந்தேகத்தோடு பயத்தோடு இருந்தால் சகவாழ்வு பாதிக்கப்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த அபிவுருத்தி பாதிக்கப்படும்.தற்போது முஸ்லிம்கள் பற்றிய பயம், அச்சம், சந்தேகம் பிறரது உள்ளங்களில்  நிலவுகிறது.இஸ்லாம் தீவிரவாதத்தை  தூண்டுவதாகவும் பிறரது மத உரிமைகளை மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் பரவலாகக் கூறப்படுகின்றன.அவற்றை நீக்கி நல்லெண்ணத்தை உருவாக்க உடனடியாக பல முயற்சிகள் தேவை.இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய நல்ல மனப்பதிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மத மற்றும்  வழிபாட்டுச் சுதந்திரங்கள்  இஸ்லாத்தில் உள்ளன “மத விடயத்தில் பலாத்காரமில்லை” , “மக்கள் விசுவாசிகளாக மாற (நபியே)அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்கிரீரா?”, “அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக நீங்கள் இல்லை”, “அவர்கள் அழைத்துப் பிரார்த்திப்பவற்றை (தெய்வங்களை) ஏசாதீர்கள்.” ஆகிய குர்ஆனிய வசனங்களை மத சுதந்திரத்துக்கான ஆதாரமாகும்.
முப்பது வருட யுத்தின் போதும் யுத்தம் முடிவடைத்த பின்னரும் எல்லா மதத்தவர்களாலும் எல்லா மதத் தலங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, எவரும் சுத்தமானவர்கள் அல்லர்.ஆனால், இஸ்லாமிய நோக்கில் இந்தத் தாக்குதல்கள் பிழையானவை மட்டுமல்ல கண்டிக்கத் தக்கவையுமாகும்.
உடைந்து போயுள்ள உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதும் சந்தேகங்களுக்குப் பதிலாக நல்லெண்ணத்தையும் அச்சத்துக்குப் பதிலாக மன நிறைவையும் ஏற்படுத்துவதும் உடனடித் தேவையாகும்.
பள்ளி நிர்வாகிகள் ,இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தத்வர்கள் ,உலமாக்கள்,புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைவர் மீதும் பாரிய பொறுப்புக்கள் உள்ளன. 
கிதாபு மத்ரஸாக்களது பாத்திட்டங்களில் எமது நாட்டுக்கு உகந்த வகையில்  ‘ஃபிக்ஹுல் அகல்லியாத்’ எனப்படும் சிறுபான்மையினருக்கான சட்டங்கள் தொடர்பான பாட நெறி இணைக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத சிந்தனைகளில் இருந்து விடுவிக்கவும் புதிதாக எவரும் அவர்களது அணியில் சேர்ந்து விடாதிருக்கவும் வேலைத் திட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அமுல் நடாத்தப்பட வேண்டும்.
கல்வித்து துறையில் முஸ்லிம் சமூகம் மிகவுமே பின்தங்கியிருப்பதும் பண்பாட்டு வீழ்ச்சிக்கும் சதிகளுக்கும் பின்னடைவுகளுக்கும் உள்ளாவதற்கான பிரதான காரணம் என்பதால் அது விடயமாக கூடிய கவனமெடுக்க வேண்டும்.உயர் பதவிகளை  முஸ்லிம்கள் வகிப்பது சமூகம் பற்றிய மதிப்பை அதிகரிக்க உதவும்.
இந்த நாட்டு முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.வியாபார நடவடிக்கைகள் சமூக உறவுகள்,பொது  இடங்களில் நடந்து கொள்ளும் முறைகள் என்பன மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.எமது பண்பாடுகளை அழகாக்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுடனான எமது தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.எமது பாவங்கள் காரணமாக நாம் தண்டிக்கப் படுவதாகவும் இருக்கலாம் என்பதால் இஸ்திக்பார் செய்வதும் அவசியமாகும்.அத்துடன் தொழுகைகளில் உள்ளச்சத்தோடு ஈடுபடுவதும் திலாவதுல் குர்ஆன்,திக்ர்,பொறுமை,தவக்குல்,பாவங்களை முற்றகத் தவிர்ப்பது என்பவும் அல்லாஹ்வுடனான உறவைக் கூட்டி அவனது உதவி வரக் காரணமாக அமையும்.  

பிற சமயத்தவருக்கு இஸ்லாம் வழங்கிய மத உரிமைகள் பற்றிய மேலதிக விளக்கங்களுக்காக:
“மதீனாவில் நபி(ஸல்)அவர்கள், இஸ்லாத்தைப் போதிப்பதைக் கேள்விப்பட்ட நஜ்ரான் தேசக் கிறிஸ்தவர்கள் ஹிஜ்ரி 8ம் வருடம் தமது தூதுக் குழுவொன்றை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை தமது மதீனா பள்ளிவாயலில் சந்தித்த நபியவர்கள் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பிரசாரம் செய்தார்கள். அவர்களிற் சிலர் ஏற்றனர். மற்றும் சிலர் ஏற்கமறுத்தனர். ஆனால், அனைவரும் இஸ்லாமிய அரசின் அதிகாரத்துக்குள் இருக்க விரும்பினர். யூதர்களுக்கு அடுத்ததாக முஸ்லிம் உம்மத்துடன் இவர்களை நபி(ஸல்) இணைத்துக்கொண்டார்கள்.
ஆனால்,இந்த நஜ்ரான் வாசிகளுடன்- அவர்கள் திம்மீக்கள் என்றவகையில்-நபி (ஸல்) பின்வரும் உடன்பாடொன்றையும் செய்துகொண்டார்கள்.  ‘நஜ்ரானிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருப்பவர்களுக்கு அவர்களது சொத்து செல்வங்கள், மதம், அவர்களது தேவாலயங்கள், அவர்கள் வைத்திருப்பவை (சொத்துக்கள், அடிமைகள்) அவை அளவில் குறைந்ததாகவோ கூடியதாகவோ இருந்தாலும் அவை அனைத்துக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பும் முஹம்மத் (ஸல்) அவர்களது திம்மத் (அறுதிமானம்-உடன்படிக்கை)யும் கிடைக்கும்.’
வரலாற்றாசிரியர் நிகல்ஸன் எழுதுகையில்,   “நபியவர்கள் இறந்து 12 வருடங்களுக்குள் பாரசீக சாம்ராஜ்ஜியம் (முஸ்லிம் அரசுக்கு) வரி செலுத்தும் பிராந்தியமாக மாற்றப்பட்டது. சிரியாவும் எகிப்தும் பைஸாந்திய ஆளுகையில் இருந்து பிரிக்கப்பட்டன. இப்பகுதியில் சொராஸ்திரியர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாத்திற்கு பலாத்காரமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக எவரும் எண்ணிக் கொள்ளக்கூடாது. ஆயிரக்கணக்கானோர் தமது சுய விருப்பத்திலேயே அதனைத் தழுவினர். இவ்வாறு அவர்கள் அதனைத் தழுவுவதற்கு பல்வேறுபட்ட காரணிகள் உந்து சக்திகளாக அமைந்தன. தாம் பிறந்து வளர்ந்த மார்க்கத்தில தொடர்ந்தும் இருந்தவர்கள் ஜிஸ்யாவைச் செலுத்தியதன் மூலம் பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பெற்றனர்.”என்கிறார்.

தோமஸ் ஆர்னோல்ட் எழுதுகையில்: “இந்த மதமாற்றங்களைத் தீர்மானிக்கும் விடயமாக  பலப்பிரயோகம்  இருக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கும் அரபு முஸ்லிம்களுக்குமிடையில் நிலவிய சிநேகபூர்வமான உறவுகள் மூலம் இதனை உணரமுடியும். முஹம்மத் (ஸல்) அவராகவே பல கிறிஸ்தவ கோத்திரங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டார்.அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதாக வாக்களித்ததுடன் அவர்கள் தமது மதத்தைச் சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கும், அவர்களது மதகுருக்கள் தமது பழைய உரிமைகள், அதிகாரங்கள் என்பவற்றை அனுபவிக்கவும் அவர் அந்த உடன்படிக்கைகளில் உத்தரவாதமளித்தார்.”””என குறிப்பிடுகிறார். Arnold,(1979) The Preaching of  Islam, Sh. Muhammad Ashraff. ed. 2nd, Lahore, Pakistan  PP.47-48. 

மத வழிபாட்டுத் தலங்கள்
பிற மத ஆலயங்கள் பற்றிய பின்வரும் வசனம் முக்கியமானதாகும்  “அல்லாஹ் மனிதர்களில் சிலரைக்கொண்டு வேறு சிலரைத் தடுக்கவில்லையாயின் (கிறிஸ்தவ துறவிகளது) ஆசிரமங்களும்,கிறிஸ்தவ (பொதுமக்களுக்கான) தேவாலயங்களும், யூதர்களது வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் நாமம் அதிகமாக உச்சரிக்கப்படும் பள்ளிவாயல்களும் மோசமாக அழிக்கப்பட்டிருக்கும்.” என்ற சூரா ஹஜ்ஜின் வசனம் பிற மத ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அது ஜிஹாதின் நோக்கங்களில் ஒன்று என்றும் கூறுகிறது.
உமர்(ரலி)அவர்களது கிலாபத்தின் போது ஜெரூஸலம் கைப்பற்றப்பட்ட போது அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு அவர்கள் வழங்கிய உத்தரவாதம் வருமாறு:-
 “இது விசுவாசிகளின் தலைவர் உமர், ஈலியா மக்களுக்கு வழங்கும் பாதுகாப்பாகும். அவர்களுக்கும் அவர்களது சொத்துக்களுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்களது மார்கத்தின் ஏனையவற்றுக்கும் அவர் பாதுகாப்பு வழங்கியுள்ளார்.அவர்களது தேவாலயங்களில் எவரும் குடியிருக்கலாகாது.  அவை இடிக்கப்படலாகாது. கட்டங்களின் பகுதிகள் குறைக்கப்படலாகாது. அவற்றிற்குரிய காணிகளோ சிலுவைகளோ அவர்களது செல்வங்களோ குறைக்கப்படலாகாது. அவர்களது மார்க்கத்திலிருந்து வெளியேறும் படி அவர்கள் பலாத்காரப்படுத்தப்படமாட்டார்கள்.' (இப்னு ஹிஷாம்-சீரத்துன் நபி 4:181)

உமர்(றழி) அவர்கள்  பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையிலும் கிறிஸ்தவ தேவாலயத்தின் எதிர்காலப் பாதுகாப்புப் பற்றி சிந்தித்தார்கள். பலஸ்தீன் சென்ற அவர்கள் தாவீது கோயிலுக்குப் போய்த் தொழுதுவிட்டு பின்னர் பாதிரியாரின் சகாக்களுடன் அங்கிருந்த ஜெரூஸலத்தின் மிகப் பெரிய தேவாலயத்துக்குச் சென்றார்கள். அடுத்த தொழுகை நேரம் வந்துவிட்டபடியால் அந்த தேவாலயத்திலேயே தொழும்படி மதகுரு அவர்கள் உமர்(றழி) அவர்களை வேண்டிக்கொண்டார்;. ஆனால், அவ்வாறு செய்ய மறுத்த உமர்(றழி) அவர்கள் ஷநான் இங்கு தொழவேண்டுமா? இங்கு முஸ்லிம்கள் (ஏலவே) தொழுதிருக்கிறார்கள் என்பதை சாட்டாக வைத்து இந்த இடத்தை (எதிர்கால) முஸ்லிம்கள் கைப்பற்றிவிடுவார்களோ எனப் பயப்படுகிறேன். என்றார்கள்.
எகிப்து நாட்டின்(கிறிஸ்தவ) கிப்தியர்களுடன் அம்ரிப்னுல் ஆஸ்(றழி) செய்த உடன்படிக்கை வருமாறு :  “இதன் மூலம் அம்ரிப்னு ஆஸ் எகிப்தியருக்கு அவர்களது மதம், சொத்துக்கள், தேவாலயங்கள், சிலுவைகள் அவர்களது நிலப்பகுதி, கடல் பகுதி அனைத்துக்கும் பாதுகாப்பு வழங்குகிறார். இவற்றில் எந்தவொரு பகுதியும் குறைக்கப்படலாகாது.” 
 முஸ்லிம்கள் புதிதாக வெற்றிகொண்டு ஆட்சி நடத்திய எகிப்து, லிபியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளாக  இருக்கட்டும், இந்தியா, ஸ்பெய்ன், இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளாக இருக்கட்டும்  அவற்றில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம் அல்லாதவர்கள் வாழ்ந்து வருவதாயின் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் இன்றும் பாதுகாப்பாக இருப்பதுடன் அவற்றில் வழிபாடுகளும் நடந்து வருவதாயின் அது இஸ்லாத்தின் மத சகிப்புத் தன்மைக்கான (Religious Tolerance)ஆதாரங்களாகும்.
ஸஹாபாக்களும் தாபியீன்களும் எகிப்தில் நுழைந்த பொழுது பழைய நாகரீகச் சின்னங்களை அவர்கள் கண்டார்கள். ஆனால், அவற்றை அவர்கள் எதுவுமே செய்யவில்லை.மிகப்பெரும் சஹாபாக்களும் தாபியீன்களும் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இராக்,எகிப்து போன்ற பிரதேசங்களில் வாழ்ந்தார்கள். குறிப்பாக இமாம் ஷாபி , அபூஹனிபா போன்ற இமாம்கள் இந்த நாடுகளில் வாழ்ந்தும் கூட அந்த பழைய நாகரிக சின்னங்களை  அகற்றும்படி தீர்ப்புக் கொடுக்கவில்லை.

தோமஸ் ஆர்னோல்ட் பின்வருமாறு தெரிவிக்கிறார் “ஆசியாவிலிருந்த கீழைத்தேய தேவாலயங்கள் மேற்கிலிருந்து-கிறிஸ்தவ சாம்ராஜ்யத்திலிருந்து முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்டிருந்தன. அவர்களது நலன்களைக் கவனிக்க எவரும் இருக்கவில்லை. இந்த தேவாலயங்கள் இன்றுவரை நிலைத்திருப்பதானது அவர்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு)முஹம்மதிய அரசு காட்டிய சகிப்புத்தன்மை மனோபாவங்களுக்கான பலமான சான்றாகும். (உதுமானிய ஆட்சியாளர்) முஹம்மதின் படையெடுப்பின் போது மேற்காசியாவிலிருந்த பழங்கால தேவாலயங்களுள் இன்னும்11,50,000 நஸ்தோரிய தேவாலயங்கள் இருக்கின்றன.”இது ஒரு பிரபல கீழைத்தேய அறிஞரின் குறிப்பாகும்.
  
உதுமானிய ஆட்சியாளர் (இரண்டாம் முஹம்மத்)(கி.பி.1481 ஹி431) கொன்ஸ்தான்துநோபிளை வெற்றிகொண்டு அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்திய பின்னர் எடுத்த முதற்கட்ட நடவடிக்கைகளில் ஒன்று தன்னை கிரேக்க திருச்சபையின் பாதுகாவலராக பிரகடனம் செய்ததாகும்.அந்தவகையில்,  கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை அவர் முற்றாகத் தடைசெய்தார். பாதிரியாரும் அவரைப் பின்பற்றுவோரும் அவரது தலைமையை ஏற்றுப் பின்பற்றும் மதகுருக்களும் கடந்த காலங்களில் அனுபவித்த வரப்பிரசாதங்களையும் வருமானங்கள், நன்கொடைகளையும் தொடந்தும் அனுபவிப்பதனை உத்தரவாதப்படுத்தும் ஒரு சட்டத்தை அவர் (இரண்டாம் முஹம்மத்) பிறப்பித்தார். புதிய தலைநகரில் கால் பதித்தபின்னர், தான் கிறிஸ்தவ மதக் கிரியைகளை எதிர்க்கப்போவதில்லை என்றும் மாறாக, அவர்களது மார்க்க சுதந்திரத்தை தான் உத்தரவாதப்படுத்துவதாகவும், அவர்களது சொத்துக்களை பாதுகாப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவித்தலின் பின்னர் தலைநகரில் இருந்து ஒதுங்கியோர் மீண்டும் திரும்பி வந்தனர். (கிறிஸ்தவர்கள்) தமக்கு ஜோர்ஜ் ஸ்கோலிரியோஸை பாதிரியாக தெரிவு செய்த போது அவருக்கு முஹம்மத் தனது தனிப்பட்ட படையிலிருந்த பாதுகாவலர்களையும் வழங்கினார். மேலும், ரோமர்களுடன் சம்பந்தமான சிவில், குற்றவியல் சட்டங்களில் தீர்ப்பு வழங்கும் உரிமையை கொடுத்ததுடன் மாதா கோவிலின் பணியாளர்களில் பெரியவர்களான சிலரைக் கொண்ட ஒரு குழுவையும் அவருடன் கலீபா நியமித்தார்.”

கொலையும் துன்புறுத்தலும்
பொதுவாகவே ஓர் உயிரைக் கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொலை செய்வதற்குச் சமனாகும் என்பது அல்லஹ்வின் கருத்தாகும். அந்த வகையில் முஸ்லிம் அல்லாதவர்களது உயிர்களும் பாதுகாக்கப் பட வேண்டும்.
மனிதர்கள் எப்படிப் போனாலும் ஒரு மிருகத்தைக் கூட துன்புறுத்த முடியாது:
ஒரு பெண்ணைப் பற்றி முஹம்மது(ஸல்) பிரஸ்தாபித்தார்கள்:

(முன் சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனையின் காரணமாக வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான். நூல் : புகாரி 2365 

மிருகத்துக்கே இந்த மதிப்பாயின் மனிதனது நிலை என்ன?அதுவும் ஆதம்(அலை),ஹவ்வா(அலை)ஆகிய எமது பெற்றாரின் வழி வந்த மனித இனத்த்ச் சேர்ந்த ஒரு பிற சமயத்தவரைக் கொல்வது எப்படியிருக்கும்.
  “யார் (எம்முடன் நல்லுறவைப் பேணும் முஸ்லிம் அல்லாதவனான) ஒரு திம்மீயை துன்புறுத்துகிறாரோ நான் அவருக்கெதிரானவனாவேன். நான் யாரின் எதிரியாகிறேனோ, அவருக்கெதிராக நான் மறுமையில் வாதிடுவேன்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஒப்பந்த்ததிற்குள்ளான (முஸ்லிமல்லாத)வரை எவரேனும் கொலை செய்தால் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. அதன் நறுமணமோ நாற்பது ஆண்டுகள் தூரத்திற்கு கடந்து செல்வதாகும்! (புகாரி)

யுத்தங்களின் போது கூட மனிதாபிமானம்
நிர்ப்பந்தமான, தவிக்கவே முடியாத நிலையில் யுத்தமொன்று ஏற்பட்டாலும் அதன்போது கடைபிடிக்கவேண்டிய தர்மங்கள் ஏராளம் உள்ளன.
அபூபக்கர் (ரல்)(அவர்கள் உஸாமா பின் ஸைத்(ரலி)அவர்களது படையை அனுப்பிய போது செய்த உபதேசத்தில்: “மனிதர்களே! துரோகம் செய்யாதீர்கள்,அத்து மீறாதீர்கள்,மோசடி செய்யாதீர்கள்,சித்திரவதை செய்யாதீர்கள்,சிறிய குழந்தைகளையோ ,வயோதிபர்களையோ பெண்களையோ கொலை செய்யாதீர்கள் ஈச்ச மரங்களை வெட்டவோ தீயிடவோ வேண்டாம்.பழம் தரும் மரங்களை வெட்ட வேண்டாம். சாப்பிடுவதற்காக அல்லாமல் ஒரு ஆட்டையேனும் மாட்டையேனும் ஒட்டகத்தையேனும் அறுக்க வேண்டாம் மடாலயங்களில் வாழ்விலிருந்து ஒதுங்கிய நிலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போரை அவர்களது பாட்டில் விட்டு விடுங்கள்”(தப்ரி 2-246)என்றார்கள்.

ஆகவே,பொது மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் கடுமையாக் கண்டிக்கத்தக்கவையாகும்.நாட்டை அவை மிக மோசமான சூழ்நிலக்குள் தள்ளி விட்டுள்ளன.எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் இந்த அனுபவத்தை அடிப்படையாக் கொண்டு திட்டமிட்டு செயல்படுவோமாக.அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!


0 கருத்துரைகள்:

Post a Comment