Header Ads



முஸ்லிம்கள் மீது வன்முறைகளை திணித்தபோதும், அவர்கள் பதிலுக்கு வன்முறைகளை கையில் எடுக்கவில்லை

முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளை திணித்தபோதும் அவர்கள் பதிலுக்கு வன்முறைகளை கையில் எடுக்கவில்லை என்பதை மதிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை இன்று -24- நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அதற்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

தாக்குதல் ஒன்று நடத்தினால் தமது கோரிக்கைகள் அல்லது அதற்கான காரணங்களை அவர்கள் முன்வைப்பர்.

எனினும் இதனை பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மனநல ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் போன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது, அரசாங்கம் மாத்திரம் அன்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புமே என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை, இடம்பெற்ற தாக்குதலுக்கு ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறைமா அதிபர் பொறுப்பு கூறவேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டிலும் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றிருந்தால், பொறுப்பானவர்கள் பதவி விலகி இருப்பார்கள்.

எனிவும் இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லும் போது பாதுகாப்புக்கு பொறுப்பான ஒருவரை நியமித்துச் சென்றிருக்கவேண்டும்.

எனினும் அவர் அவ்வாறு செய்யாது, இந்தியா, சிங்கபூர் ஆகிய நாடுகளுக்கு சென்றமையினால், நாட்டில் தற்போது பாரிய அசம்பாவித செயல் ஒன்று அரங்கேறியுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன், இடம்பெற்ற தாக்குதல்கள் ஒரு சில அரசியல்வாதிகளின் அனுசரணையுடனேயே நடைப்பெற்றதாக குற்றம் சுமத்தினார்.

No comments

Powered by Blogger.