Header Ads



கத்தியால் குத்தும் சு.க. - மைத்திரியை நம்ப முடியாது - பிரசன்ன ரணதுங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைமைத்துவதையும் தொடர்ந்தும் நம்ப முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இது சம்பந்தமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாததன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மினுவங்கொடை உடுகம்பளை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கனவு வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கு முதல் நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் எனக் கூறினார்.

என்னை வேலை செய்ய விடுவதில்லை, காலை பிடித்து இழுக்கின்றனர் என்று ஜனாதிபதி புலம்பியதுடன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். எனினும் மறுநாள் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறைமுகமாக ரணிலின் அரசாங்கத்திற்கு ஆசி வழங்கி, அரசாங்கத்தை கொண்டு நடத்த உவியுள்ளது. பகலில் மிகேல் இரவில் டேனியல் கொள்கையையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்பற்றி வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நடத்தையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தை விமர்சித்தால், நெஞ்சை நிமிர்த்தி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து கட்சியினரையும் நாட்டையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏமாற்றி வருகிறது.

பின்னால் இருந்து கத்தியால் குத்தி வருகிறது. தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் ஏமாற தேவையில்லை. இரவில் விழுந்த குழியில் பகலில் விழ முடியாது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டணி குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்.

நாங்கள் இப்படி பேசும் போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு கடைக்கு போகும் சுதந்திரக்கட்சியினருக்கு வலிக்கின்றது. நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ரணிலுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை. நாங்கள் நாட்டு மக்களுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்துக்கொள்வோம்.

ரணிலையும் ரணில் அரசாங்கத்தையும் காப்பாற்றும் அணியினருடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றே நாட்டு மக்கள் கூறுகின்றனர். எனினும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு வாக்கும் பெறுமதியானது என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. My3 knows that GR is the presidential candidate.....

    ReplyDelete

Powered by Blogger.