Header Ads



மிகவும் மோசமான நிலையில், மைத்திரியின் நிலைமை

ஜனாதிபதி மைத்திரி , எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த கூட்டணி ஒன்றிணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்த சதிசெய்தபோதே கட்சியாக நாம் விழித்துக்கொண்டோம். இனியும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனித்துவிட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும், மீண்டும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதா என்ற காரணிகளை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை, நாம் கூட்டணி அரசாங்கத்தை குழப்பவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூட்டணி அரசாங்கத்தை கலைத்தார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு துரோகம் செய்வார் என்பதை சிறிதும் நாம் நினைத்துப்பார்க்கவில்லை. எனினும் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஜனாதிபதி மீண்டும் ராஜபக்ஷவுடன் கைகோர்த்தார். ஆனால் இன்று அவரது நிலைமை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. அவருக்கே அவரது அணியில் இடமில்லாத நிலைமையை ராஜபக்ஷவினர் உருவாக்கிவிட்டனர். இப்போது அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் எந்த அணியின் ஆதரவில் அவர் போட்டியிடுவார் என்ற கேள்வி அவர்களுக்குள்ளேயே  எழுந்துள்ளது. 

ஜனாதிபதி செய்த தவறை அவரே நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அவர் விரைவில் கையாள வேண்டும். ஜனாதிபதியின் வாக்குறுதிகளை நாம் இனியும் நம்பத்தயாரில்லை, ஆரம்பத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. அன்று கூறியது ஒன்று இன்று அவர் செய்வது வேறொன்றாக உள்ளது. அவர் மீது எமக்கு தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை. ஆனால் வாக்குறுதிகளை நாம் நம்பவில்லை. 

ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து இந்த ஆட்சியை வீழ்த்த சூழ்ச்சி செய்த போதே நாம் கட்சியாக கைகோர்த்து வெற்றி பெற்றோம். அதேபோல் எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம். தோல்விகளை  கண்டு அஞ்சிய கட்சியல்ல நாம். இன்று நாம் வெற்றிகரமாக ஆட்சியை கொண்டு செல்கின்றோம். எம்மை இப்போது வீழ்த்த முடியாது என்றார்.

No comments

Powered by Blogger.