April 07, 2019

பேராசைத் தலைமைகளும், பெரு நெருப்பில் முஸ்லிம்களும்...!

இலங்கை அரசியலில் முஸ்லிம் பாத்திரம் காலத்திற்கு காலம் பல்வேறு வடிவங்களைப் பெற்று வந்திருக்கின்றது, ஆனாலும் அதன்மூலம் பெறப்பட்ட பலாபலன்களைக் கொண்டே,மக்கள் மனதில் தலைவர்களும், அவர்களது சேவைகளும் இடம் பிடித்துள்ளன, அந்தவகையில் இன்றைய முஸ்லிம்  அரசியல் தலைமைகளின் சமூகம் சார் நடத்தை பற்றிய பதிவாகவே இது அமைகின்றது,  

#இலங்கை_முஸ்லிம்கள், 

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து முஸ்லிம்கள் இலங்கையில் ஒரு பரந்து பட்டு வாழும் சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர் வடக்கில் தமிழர் பெரும்பான்மையுடன் இணைந்து சிறுபான்மையாகவும், கிழக்கில் சிறுபான்மை தமிழர், சிங்களவருடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், வாழ்கின்ற அதே வேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பான்மை சிங்களவர்களுடன் இணைந்த சிறுபான்மையாக பரந்தும் வாழ்கின்றனர், 

அந்தவகையில் இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத மாவடட்டங்களே இல்லை எனலாம், இந்த சிதறியும், செறிந்தும் வாழ்தலே இலங்கை முஸ்லிம்களின் சிறப்புத் தன்மையாகவும் உள்ளது எனலாம், 

#அரசியல்_செயற்பாடுகள்,

இலங்கை முஸ்லிம்களின், நிலவமைப்பு, சனப்பரம்பல்,மொழி வளம், ஏனைய இனத்தவருடனான தொடர்பு, போன்றன குறித்த பிரதேசத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும், அவற்றின் பலம், பலவீனத்தையும் தீர்மானிக்கின்ற சக்திகள் எனலாம்,  

அந்தவகையில் கிழக்கு, வடக்கில், பெரும்பான்மை பலத்துடன் கூடிய, தமிழ்மொழி, ஒன்றித்த நிலவமைப்பு, தமிழர் தொடர்பு போன்ற காரணிகளைக் கொண்ட விடயங்களில் முஸ்லிம் தனித்துவ  அரசியல் போன்ற விடயங்களிலும் சமத்துவ உரிமைகளில்  தமது கவனத்தைச் செலுத்தவேண்டி  உள்ள அதே வேளை,  

இப் பிரதேசங்களுக்கு வெளியே, இன்னொரு வகையான பொறிமுறையுடன் கூடிய, தேசிய அரசியல் செயற்பாடுகளையே அதாவது சகவாழ்வு  நடைமுறைகளையே  முன்னெடுக்க வேண்டியும் உள்ளது, 

 #இன்றைய_பிழையான_வழிமுறைகள்,

மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் கிழக்கை அடிப்படையாக்க் கொண்ட ஒரு தலைமையையும், அதன்பின்னணியிலான உரிமைக்கோசங்களை கொண்டதுமாகவே தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார், அதற்கு கிழக்கு பற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுத்தது,  அதற்கான ஆளுமையும் அவரிடம் இருந்தது,

ஆனால் இன்றைய நிலையில் "#தேசியத்_தலைமைகள்" என்ற பெருங்கோசத்தில் முஸ்லிம் தலைமைகள் தூக்க முடியாத பாரத்தை தூக்க முனைந்து எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத, " #கூப்பாடு" அரசியலையே கொண்டு செல்லுகின்றனர் 

இதன் மூலம்  தமது "தேசியத் தலைமை ," பெருமையைப் பாதுகாக்க,  தேர்தல் காலங்களில்  எல்லை தாண்டல்  பலப்பரீட்சைக்காக, தமது பணத்தையும், பலத்தையும் பயன்படுத்துகின்றனரே தவிர மக்கள் நலனைக் கவனத்தில் கொள்ளவில்லை, 

இதனால் சாதாரண ஒரு பிரதேச சபை உறுப்பினரால் தீர்க்கக்கூடிய பிரச்சினையையும் தீர்க்க முடியாத தேசியத்  தலைவர்களாக இவர்கள் மாறி உள்ளனர்,  இது முழு முஸ்லிம் சமூகத்திற்குமான  இழப்பாகவும், அவமானமுமாகவும்  அமைந்து விடுகின்றது, 

#நெருக்கடிகள், 

"தேசியத் தலைமைத்துவ"நிரூபணத்திற்கும், அதன்மூலமான ஆட்சி ஒப்பந்தம், அமைச்சுப்  பதவிகளையும் கட்சித்தலைவர்கள் தமது இலக்காகக் கொண்டு செயற்படுவதனால் சமூகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்துள்ளது, ,உதாரணமாக, 

1)அம்பாறை மாவட்ட சுனாமி, நுரைச்சோலை வீடுகள் இதுவரை தீர்வின்றி, காடாகி உள்ளன, 

2). புத்தளம் அறுவைக்காட்டு பிரச்சினை, 

3). அம்பாரை, திகண, காலி,போன்ற கலவரங்களுக்கான இழப்பீடு இன்மை,

4).மவ்லவி ஆசிரியர் பிரச்சினை,

5).  வடக்கு,கிழக்கில் உள்ள, காணிப்பிரச்சினை

6). தொல்பொருளியல் புனித்த்துவ பிரதேசங்கள் தொடர்பான பிரச்சினைகள்,

இன்னும் பல கலாசார, இருப்பியல் பிரச்சினைகளும் எண்ணிலடங்காது நிறைந்துள்ளதோடு, அவற்றுக்கான தீர்வுகளும் ,  திட்டங்களும் இதுவரை எமது தலைமைகளிடம்  இல்லை, 

#திட்டமிட்ட_உள்_சமூக_அழிப்புக்கள்,/ #கௌரவக்_கொலை

இந்த அரசியல். தலைமைத்துவ தற்காப்புப் பிரச்சினைகளில் உருவாகி உள்ள சீரியசான பிரச்சினையே, " #தமது_சமுகத்தையே_தாமே_அழித்தல் நுட்பமாகும்" இது தமது தலைமைத்துவப்பலவீனம் காரணமாக ,எதிர்க்கேள்வி கேட்கும் ஊர்களையும், நபர்களையும், திசை திருப்புவதும், , முன்னேற்றத்தை தடுக்க பிரதேச வாதங்களை தூண்டும் ஆசையுணர்வுகளை வளர்த்து, மக்களிடையே பிரிவினையை வளர்த்து தமது தலைமைத்துவத்தை பாதுகாத்தலையும்  செய்து தமது கௌரவத்திற்காக சமூகத்தைக் கொலை செய்து வருகின்றனர்,  இதனை #கௌரவக்_கொலை எனலாம்,

இது அண்மைக்காலமாக கிழக்கில் இடம்பெற்றுவரும், பிரதேசவாத உள்ளூராடசி, நிர்வாகப் பிரிப்புக்கள், தமிழர், முஸ்லிம் பிரிவினை என்பனவற்றின்  பின்னால் அரசியல்வாதிகள் ஆசை வார்த்தை காட்டியமையையும் ,சும்மா இருந்த மக்களை உசுப்பேத்தி, ஊர்களுக்கிடையே, இனங்களுக்கு இடையே, பகைமையை உண்டுபண்ணி, தமது தலைமைத்துவப் பலவீனங்களை மறைத்துக்கொள்வதற்கு முயலுவதையும் ஆழமாகச் சிந்தித்தால்  தெளிவாக விளஙகிக் கொள்ள கூடியதாக இருக்கும்

இவ்வாறு பல பிரதேசங்களிலும் தமது சமூகத்திற்குள்ளேயே, உட்பிணக்குகள் உருவாகி உள்ளதற்கான காரணிகளை, தலைவர்கள் , தாம் இணைந்து ஆட்சி அமைத்துள்ள்அரச  தலைவர்களுடனேயோ, பாராளுமன்றத்திலேயோ, பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை  உரிய இடங்களில்,உடனடியாகத் தீர்க்காது மக்களிடம் பிரச்சினைகளை எடுத்துச் சென்று மக்களை அவற்றுக்காக போராட விட்டுவிட்டு, அரசியல்வாதிகள் கள்ள மௌனம் காப்பதும் ,மறைந்திருப்பதும் இடம்பெற்று வருகின்றது,

உண்மையில் இது திட்டமிட்டு தமது சமூகத்தை முன்னேற விடாது, தடுத்து பிரச்சினைகளை திசை திருப்புவதன் மூலம்,தமது தலைமைத்துவ காலனித்துவத்தை , எல்லாப்பிரதேசங்களிலும்,அத்து மீறி வைத்திருப்பதற்கான நுட்பமாகவே கருத வேண்டி உள்ளது,  இதனை புரியாமல் அப்பாவி போராளி ஆதரவாளர்கள் கூக்குரலிடுகின்றனர்.

#என்ன_தீர்வு,

இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் பொறிமுறை புத்தி ஜீவிகளால் வகுக்கப்பட வேண்டும், அந்தவகையில் தமிழர், மலையக அரசியல்வாதிகள் தமது பிராந்தியங்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைப்போல,  கிழக்கிற்கும், வடக்கிற்கும், ஏனைய மாகாணங்களுக்கும், அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த தலைவர்களால் பிராந்தியக் கட்சிகள், சிவில் அமைப்புக்கள்  உருவாக்கப்பட்டு  அந்த பிரதேசங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், 

அப்போதே, குறித்த மக்களுக்கான பிரச்சினைகளும், அதன் தன்மைகளும் தெரிந்த தலைவர்கள் உருவாகி, செயற்படுவதற்கான வாய்ப்பு அமையும், அத்தோடு,  முஸ்லிம்கள் தொடர்பான தேசிய பிரச்சினைகளில் ஒருமித்து தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியும், இந்த   முறையையே, இந்திய முஸ்லிம்களும் சில மாநிலங்களில்  கடைப்பிடிக்கின்றனர்,

எனவேதான், #தேசியத்தலைமை,  #தேசியத் தலைவர் என்ற செத்த பாம்புக்காக மகுடி ஊதுவதையும், பதவி நப்பாசைக்காக தனது சொந்த சமூகத்தையே திட்டமிட்டு அழிப்பதையும்  முஸ்லிம் தலைவர்கள் உடனடியாகக் கைவிட்டு விட்டு, பிராந்திய ரீதியிலான, பலமான கூட்டு அரசியல் தலைமைகளை உருவாக்கிச் செயற்பட முன்வர வேண்டும், மாறாக, உங்கள் தலைமைக்காக மக்களைத் திசை திருப்பலும், தூண்டி விடுதலும்,   தொடருமாயின்,இறுதியில் சமூகமும், எதிர்கால இளைஞர்களும், உங்களை நோக்கிய வன்முறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அது உருவாக்கிவிடலாம்,  

அந்த வகையில் இன்றைய கிழக்கில் நிலவும்  பிரச்சினைகளை தீர்க்கவும், சமூகத்தைக் கட்டி எழுப்பவும், கிழக்கைச் சேர்ந்த பலமான அரசியல்  அமைப்பு அவசியம் என்பது  பலராலும் உணரப்படுவதோடு, ஆளுனர் ஹிஸ்புள்ளாவின் நியமனமும், அதற்கான உற்சாகத்தையும், அத்தாட்சியையும்  முன்வைப்துள்ளதை உணரக் கூடியதாகவும் உள்ளது,  அது போலவே நாட்டின்   ஏனைய  பிரதேசங்களில்  உள்ள ஆர்வமிக்கவர்களும் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதும்  அவசியமாகின்றது,

எனவே, அதற்கான முயற்சிகளில் ,அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றே கருத வேண்டி உள்ளது, 

முபிஸால் அபூபக்கர் 
முதுநிலை விரிவுரையாளர் - மெய்யியல் துறை
பேராதனை பல்கலைக்கழகம்

0 கருத்துரைகள்:

Post a comment