April 27, 2019

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம், மக்களுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் என்பன மக்களுடன் இணைந்து வெளியிடும் ஊடக அறிக்கை

நேற்று 26.04.2019 வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக மக்களுக்கும், நாட்டிற்கும் விழிப்பூட்டும் வகையில் இவ்வூடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.

நேற்று பிற்பகல் 6.15 மணியளவில் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தின் பீஃ183 வது இலக்க வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சாய்ந்தமருது அல்லாத வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த பள்ளி நிருவாகத்தினரும், அப்பிரதேச கிராம சேவை உத்தியோகத்தரும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் உறுப்பினர்களும், அப்பிரதேச வாசிகளும் இணைந்து விசாரணை நடாத்தி பொலிசாருக்கும் உடனடி தகவல் வழங்கினர். 

அதன் பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும், குறித்த குழுவினரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாதவாறு பாதைகளை மறித்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த படையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து, தீவிரவாதிகளுடன் போராடி நிலமையை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

குறித்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்தி எம்மை மிகுந்த கவலைக்குள் ஆழ்த்தியிருக்கும் இப்பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவரது உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்பதுடன், அவர்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம். 
ஸியாரம் அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விசமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என பொலிசார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமது பள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம். இக்கொடிய காட்டு மிராண்டிகள் எமது பள்ளிகளை இலக்கு வைத்திருப்பார்களாயின் அது பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிடலாம். அல்லாஹ் இப்பிரதேசத்திற்கு ஏற்படவிருந்த பெரும் அபாயத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

தங்களது உயிரைப் பணயம் வைத்து, சந்தேகத்திற்கிடமான நபர்களை சென்று விசாரித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கி ஒரு பேரழிவிலிருந்து இப்பிரதேசத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட எமதூரின் துணிச்சலான அந்த சகோதரர்களையும், எமது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்ட இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு முப்படையினரையும் மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகின்றோம். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து மீள் குடியேறியுள்ள இம்மக்களை மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இக்கயவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

இச்சந்தர்ப்பத்தில் மக்களை அமைதி காக்குமாறும், தொழுகைகளிலும், பிராத்தனைகளிலும் ஈடுபடுமாறும், பாதுகாப்பு தரப்பின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இப்பிரதேச மக்களை அன்பாக வேண்டுகின்றோம். எனவும் தமது ஊடக அறிக்கையில் விடப்பட்டது. 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேஹ் எம்.எம். சலீம் சர்க்கி, வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

யூ.கே. காலித்தீன்

1 கருத்துரைகள்:

Terrorism must be obliterated from its root. IS terrorists & plotters of this heinous crime must be hanged.
Death penalty is the only solution to curb terrorism. ACJU must encourage the government to execute all terror suspects once proved

Post a Comment