Header Ads



முஸ்லிம்களை சந்தேகத்தோடு பார்க்க வேண்டாம் - சிங்கள மக்களிடம், ஜனாதிபதி பகிரங்க வேண்டுகோள்

இந்தியா விடுத்திருந்த எச்சரிக்கை உள்பட, இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்த பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்கள், தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் கிடையாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என ஜனாதிபதி, தமிழர் மற்றும் சிங்கள மக்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்லும் நோக்குடனேயே அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். BBC

No comments

Powered by Blogger.