Header Ads



தம்புள்ள குகைக்குள் பாரிய புதையல் - கொள்ளையடிக்க அரசியல்வாதிகள் இரகசிய திட்டம்

இலங்கையில் குகையொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பாரிய புதையலை கைப்பற்றும் நோக்கில் பிரபல இந்திய நிறுவனம் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கொழும்பு பத்திரிகையொன்றில் இன்றைய தினம் -11- வெளியாகியுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

பிரபல இந்திய நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக இணைந்து பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் துணையுடன் புதையல் ஒன்றை தோண்டி எடுக்கும் இரகசிய நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தம்புள்ள நகர பிரஜா உரிம பங்காளிகள் அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தம்புள்ள ரங்கிரி ரஜமஹ விகாரைக்குரிய கற்பாறை ஒன்றில் அமைந்துள்ள கற்குகைக்குள் மறைந்திருப்பதாக கூறப்படும் புதையல் ஒன்றையே இவ்வாறு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் சிலரும் இதில் தொடர்புபட்டிருப்பதால் தம்புள்ளையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

வரலாற்று சின்னங்கள் அழிவடைந்த, புராதான குளம் ஒன்றுக்கு சமீபமாக அமைந்துள்ள கற்பாறை குகையொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பாரிய புதையலை கைப்பற்றும் நோக்கில் பிரதேசத்திலுள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அடங்கிய இரண்டு குழுக்கள் இரகசிய திட்டம் வகுத்து செயற்படுவதாகவும், மற்றொரு குழுவை சேர்ந்த மூன்று அரசியல்வாதிகள் அப்புதையல் பொருட்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்திய நிறுவனம் ஒன்றுடன் 2500 கோடி ரூபா பெறுமதியான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாததிட்டிருப்பதாகவும் பிரஜா உரிமப் பங்காளிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதையல் அமைந்துள்ள நிலையத்தை குறிப்பிடும் குறியீட்டு அடையாளம் பொறிக்கப்பட்ட குறித்த காணியில் தங்கியிருக்கும் உரிமையாளர் அதனை சுற்றி மதில் அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை குறித்த புதையல் குறியீட்டு அடையாளம் பொறிக்கப்பட்ட காணித்துண்டை 500 போடி ரூபாவிற்கு விற்பனை செய்து விடுமாறு புத்த பிக்கு ஒருவர் தமக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது தொடர்பில் குறித்த காணியில் குடியிருந்து வரும் வீட்டு உரிமையாளர் தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த புதையல் தோண்டும் விவகாரம் தொடர்பில் தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் குமார விக்ரம ரத்னவிடம் வினவியபோது,

இது தொடர்பில் தமக்கு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்கள் கிடைத்து வருவதுடன் கடிதங்களும் கிடைத்த வண்ணம் உள்ளதாகவும், தாம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த இடங்கள் தொல்லியல் பெறுமதி உடையனவா என வினவியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.