Header Ads



தாமரை கோபுரத்தில், நீர் குழாய் உடைந்தது

ஆசியாவின் மிகவும் உயர்ந்த கோபுரமாக வர்ணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் நீர் குழாய் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் பாரிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம் இந்த மாதம் இறுதியில் திறக்கப்படவிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தாமரை கோபுரம் திறக்கப்படவிருந்தது. இந்த நிலையில் அதன் நீர் குழாய் உடைந்தமையினால், நிர்மாணிப்பு குழுவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

தாமரை கோபுரத்தின் பணிகளை அதன் ஒப்பந்த நிறுவனம் முழுமையாக நிறைவு செய்துள்ளதாகவும் அதனை உத்தியோகபூர்வமாக திறக்கும் வரை, பூட்டு போட்டு மூடி வைத்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நேற்று பாரிய நீர் குழாய் ஒன்று வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் தகவல் ஆராய்வதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அங்கு சென்ற போதிலும் பாதுகாப்பு பிரிவினால் அவரை தடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் அங்குள்ள ஊழியர்கள் தாமரை கோபுரத்தின் நீர் குழாய் வெடித்துள்ளதனை உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் அதனுள் மேலும் சில பகுதிகளில் இவ்வாறான பாதிப்புகள் காணப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த திட்டத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவரிடம் வினவிய போதிலும் அவர் தகவல் வெளியிடுவதனை புறக்கணித்துள்ளார்.

No comments

Powered by Blogger.