Header Ads



சூடானில் பெரும் குழப்பமான நிலை, இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கினர்


சூடானில் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் அங்கு மக்களாட்சி கோரி போராட்டம் வலுப்பதால் பெரும் குழப்பமான நிலை நிலவுகின்றது.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் திகதி முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தவர் 75 வயதுடைய உமர் அல் பஷீர். 

இவர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். உமர் அல் பஷீரை பதவி விலகக்கோரி அங்கு போராட்டங்கள் நடந்து வந்தன.

சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் இராணுவ அமைச்சராக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11 ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். இதனால் சூடானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியை கவிழ்த்த கையுடன் அவாத் இப்ன் ஆப், இராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் இராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றார்.

இவர் உள்நாட்டுப்போரின்போது, இராணுவ உளவுத்துறை தலைவர் பதவியும் வகித்தவர் ஆவார். இதையொட்டி அவர் மீது 2007 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது.

ஆட்சியை கவிழ்த்த நிலையில், சர்வதேச  நீதிமன்றில் வழக்கு இருந்தாலும், உமர் அல் பஷீர் நாடு கடத்தப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 2 ஆண்டுகள் இராணுவ ஆட்சி தொடரும், அதன்பின்னர் தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இராணுவ ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. பெருமளவில் போராட்டங்களை மக்கள் நடத்த தொடங்கினர். 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த திருப்பமாக இராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப் பதவி விலகி விட்டார். இதை அவரே சூடானிக் அரச தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

இராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறினார்.

ஆனால் மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் என்று போராட்டம் நடத்துவோர் தெரிவிக்கின்றபோதிலும் சூடானில் போராட்டங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் பெரும் குழப்பமான நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. It is an usual situation in most of the Muslim countries in the world

    ReplyDelete

Powered by Blogger.