April 07, 2019

சுகாதார விழிப்புணர்வை விருத்திசெய்து, நீண்ட ஆயுளுக்கு வித்திடுவோம்

- பரீட் இக்பால் -

உணவு, உடை, உறையுள் ஆகிய இன்றியமையாத் தேவைகளுக்கு அடுத்து ஒரு மனிதனின் முக்கிய தேவையாக அமைந்திருப்பது சுகாதாரமாகும். மனித வளங்களை ஆரோக்கியப்படுத்துவதன் மூலமே நாட்டின் வளத்திற்கு வித்திடலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். மனிதரின் அடிப்படைத் தேவைகளைத் தொடர்ந்து சுகாதாரமும் சுகநலமும் முக்கிய இடம் வகிக்கின்றன. 

நாடொன்றின் வளத்துக்கு பூரணமிகு ஆரோக்கியமான மனித வளங்கள் மூலமாவது போலவே பொருளாதார அபிவிருத்திக்கும் சுகாதாரத்துறை முக்கிய இடம் வகிக்கிறது. 

உலக மக்களின் சுகாதார நலன்களை மேம்படுத்தும்  தூரநோக்குடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பு  07.04. 1948 இல் அமைக்கப்பட்டு அன்று இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் 07.04.1950 இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார தினத்தைக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. 

உலக சுகாதார அமைப்பு அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. இவ்வமைப்பின் தலைமை அலுவலகம் சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. 

'உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்'. இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 193 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

இன்று உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகப் பல காரணிகள் விளங்குகின்றன. சனத்தொகை அபிவிருத்தி, வதிவிட வசதியின்மை, உணவின்மை, பட்டினி, தொழிற் துறை வாய்ப்புகள், சுற்றாடல் மாசுறுதல், இயற்கை அனர்த்தம், போரும் பிணக்குகளும், அகதி முகாம் வாழ்க்கை, நவீன விஞ்ஞான தொழிநுட்ப மாற்றங்கள், இயந்திரப் பொறிகள் மயம் என அக்காரணிகளை அடுக்கிச் செல்லலாம். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் கோரப் பட்டினிகள் ஆரோக்கியமின்மை, தகுந்த சுகாதார நலச் சேவையின்மை போன்றவை மக்களின் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சவாலாக அமைந்துள்ளன. 

உலக மக்களின் சுகநலம், போஷாக்கு, தேகாரோக்கியம் போன்றவற்றைக் கருத்திற்கொண்டு சிபாரிசு  செய்யப்பட்ட போஷாக்குணவுகள், மருந்து வகைகள், நவீன சுகாதார உபகரணங்கள், மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கான மற்றும் தாதியர்களுக்கான நவீன பயிற்சிகள், சுகாதாரக் கல்வி, தொற்று நோய்த் தடுப்புகள், போன்ற பலவிதமான சேவைகளை உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு வழங்கி வருகின்றது.

நவீன தொழில்நுட்பம் காரணமாக மக்கள் நுகரும் உணவு மற்றும் பானங்கள் என்பன மாறுபட்டுள்ளதோடு இனந்தெரியாத பிணிகளையும் தருவிப்பதாகவுள்ளன. பூளோக ரீதியில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட நோய்கள் புதிதாக பரவி வருவதை சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த அறிக்கையில் நோக்க முடிகின்றது. 

சமூக உட்கட்டமைப்புத் துறைகளில் இலங்கையின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சுகாதார நலக் குறிகாட்டிகளான மகப் பேற்றுக் கால மரணம், சிசு மரண வீதங்கள் குறைவடைந்தும் வாழ்நாள் எதிர்பார்ப்பு வீதம் (ஆயுள்)  ஆண்டாண்டு தோறும் அதிகரித்தும் உலக நாடுகளுடன் ஒப்பிடத்தக்க  மட்டத்தை அடைந்துள்ளது. 

இவ்வுலகில் அவதரித்த மானிடர் அனைவருமே நீண்ட ஆயுள் வாழத்தான் விரும்புகின்றனர் என்பதை நாமறிவோம்.

1871 ஆம் ஆண்டின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 வருடங்களாகக் கணிக்கப்பட்டது. அதேவேளை, 1991 ஆம் ஆண்டின் சராசரி மக்கள் ஆயுட்காலம் 72.5 ஆக அதிகரித்தது. 120  ஆண்டு காலப்பகுதிக்குள் ஆயுட்காலம் அபரிமித முன்னேற்றம் அடைந்ததிற்குக் காரணம் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்பட்டதே ஆகும்.

நாம் அவதரித்த நாளிலிருந்து முதுமையை எட்டி மரணப்படுக்கை வரையிலும் கண்டிப்பாகச் சில பருவங்களைக் கடக்க வேண்டியுள்ளது. குழந்தையாக தவழுகின்ற போதும் வயதான  காலகட்டத்திலும் சிலர் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பொதுவாக கட்டிளமைப் பருவத்தில்  பிணியின் தாக்கம் கணிசமான அளவு குறைவடைந்து காணப்படுவது இயற்கை. இது யதார்த்தமும்கூட.  மகப்பேற்றினைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடந்து கொள்வது பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் தலையாய கடமை என்பதை மறந்துவிடலாகாது. 

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனையின் நிமித்தம் சிசு பிறந்த குறிப்பிட்ட கால எல்லைக்குள் சொட்டு மருந்து, தடுப்பூசி என்பவற்றைத் தவறாது பெற்றுக்கொள்ள வைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இளம்பிள்ளை வாதம் மற்றும் பல நோய்கள் உண்டாகி குழந்தையின் எதிர்காலமே சூனியமாகி விடவும்கூடும். எனவே விழிப்புடன் செயலாற்ற வேண்டிய கடமை நம் கையிலேயே தங்கியுள்ளது என்றும் கூறலாம். 

கட்டிளமைப்  பவருவத்தின் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சிலருக்கு குறிப்பாக  போதைவஸ்து உட்கொள்ளுதல், வக்கிரமான பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றால்  எச்.ஐ.வி. வைரஸினால் ஏற்படுகின்ற ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயாளர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இதனால் இவர்கள் இருள் சூழ்ந்த வாழ்க்கைக்குள் தள்ளப்படுகின்றனர்.

வயோதிப வயதை எட்டிய சிலருக்குப் பல வியாதிகள்  ஒன்றன் பின் ஒன்றாக தன்னிச்சையாக தொற்றிக் கொள்கின்றன. சிலர் உணவுக் கட்டுப்பாட்டைப் புறந்தள்ளிவிட்டு வாய்க்கு ருசியான உணவு வகைகளுடன் உப்பையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டு சிந்திக்காமல் புசிப்பது இதற்கு காரணியாகக் கொள்ளலாம் என்பது சுகாதாரத்துறையினர் கூற்றாகும். 

உணவு வகைகளின் தன்மையை சுருக்கமாக கூறுவதாயின் சரியான உணவு சரியான புத்தி, தவறான உணவு தவறான புத்தி எனலாம். உணவு அருந்துவதில் கட்டுப்பாட்டை மீறுவது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய், பாரிசவாதம், சொறிநோய், பேதி, வயிற்றுப்போக்கு என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இன்றைய காலகட்டத்தில் சுகாதாரப் பிரிவினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள சில நோய்களையும் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் இதயசுத்தியுடன் செயலாற்றி வருவதை மூன்றாம் உலக நாடுகளில் காணமுடிகின்றது.அதே நேரம் அரசாங்கங்களும் மக்களின் நோயற்ற வாழ்விற்காக பாரிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

அதே நேரம் மக்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டியது மக்களினதும் கடமையாகும் எமது உணவு முறைகள் பழக்கவழக்கங்கள் என்பவற்றைச் சீராகக் கடைப்பிடித்து சுகதேகிகளாக எமது நாட்டின் பொருளாதார விருத்திக்குரிய பிரஜைகளாக மாற இச்சுகாதார தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment