Header Ads



மக்களின் தொடர் போராட்டங்களின் பின்னர், அல்ஜீரியா ஜனாதிபதி அப்துலசீஸ் ராஜினாமா

ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டின் ஜனாதிபதியாக அப்தெலாசிஸ் பவுடேபிலிகா, 4வது முறையாக பதவி வகித்து வருகிறார்.

இவர் 5வது முறையாக மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமிட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு முன்பாகவே அவரை மாற்ற வேண்டும் என பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, வரும் 18ஆம் திகதி நடைபெற வேண்டிய தேர்தலை அப்தெலாசிஸ் தள்ளி வைத்ததுடன், தேர்தலில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தையும் திரும்ப பெற்றார்.

இதன் காரணமாக அல்ஜீரியாவில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதன் பின்னர் ராணுவ தளபதியை சந்தித்து அப்தெலாசிஸ் பேசினார்.

அவரிடம் உடல்நலக்குறைவு காரணமாக நாட்டில் ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கவும், நாட்டை நிர்வகிக்க அரசியல்சாசன குழு ஒன்றை அமைக்கவும் வழி வகுக்கும், அரசியல் சாசனத்தின் 102வது பிரிவை அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் புதிய அமைச்சர் சபையை அமைத்ததுடன், தனது ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அந்நாட்டில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் காரில் ஒலிப்பான்களை எழுப்பினர்.

மேலும் பலர் பல கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அல்ஜீரியா அரசியல் அமைப்பின் படி, ஜனாதிபதி பதவி விலகிவிட்டால், நாடாளுமன்ற மேலவையின் சபாநாயகர் 90 நாட்கள் இடைக்கால தலைவராக இருப்பார். இந்த 90 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை சபாநாயகர் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.