April 17, 2019

சமூகப்பிரச்சினைகளை அணுகிய, ஈழத்தின் முதல் நாவல் ஆசிரியர் சுபைர் இளங்கீரன்

-  பரீட் இக்பால் -

முஹம்மது கலீல் என்பது இவரது இயற்பெயர் ஆகும். சுபைர் என்பது சமூகத்தில் அறியப்பட்டதும் அழைத்ததுமான பெயர் ஆகும். சுபைர் இளங்கீரன் என்பது எழுத்துலகத்தில் சங்கே முழங்கு என ஓங்கி ஒலித்த பெயராகும்.

காலங்கள் உருண்டோடினாலும் அவரது இலக்கியப் படைப்புக்கள் எவராலும் மறக்க முடியாதவையாகும். 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஐம்பதில் அவர் தமிழ் நாவலுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். முற்போக்கு எழுத்தாளர்களுக்குள் மூத்தவராக மதிக்கப்படும்; இளங்கீரன் சரளமாகக் கதை கூறுவதில் வல்லவர். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி சாதனை  புரிந்து சமூகப் பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை அணுகித் தீர்வு கூற விழைந்த ஈழத்தின் முதல் நாவலாசிரியராக அவர் மதிக்கப்படுகிறார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சுல்தான் முஹிதீன், முஹிதீன் நாச்சியா தம்பதியினருக்கு 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் திகதி சுபைர் இளங்கீரன் பிறந்தார். இவரது இயற்பெயர் முஹம்மது கலீல் ஆகும். ஆனால் இவர் சோனகத் தெருவில் சுபைர் என்றே அழைக்கப்பட்டார். தனது ஆரம்பக் கல்வியை யாழ்.கில்னர் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம்  கற்றார். ஆங்கில மொழி மூலம்  கற்றாலும் தமிழ் மொழியிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

சுபைர் இளங்கீரன் இளம் பராயத்தில் மீலாத் மேடைகளில் நன்றாக சொற்பொழிவாற்றுவார். இந்திய இஸ்லாமிய பேச்சாளர்களின் திறமைக்கு சற்றும் குறைவில்லாமல் சொற்பொழிவாற்றக்கூடிய வல்லமை கொண்டிருந்தார்.

இவரது தந்தையார் சுல்தான் முஹிதீன் பெண்களுக்கான உடைகள் தைப்பதில் கைதேர்ந்தவர். ஆதலால் இவரது தந்தை லேடீஸ் சுல்தான் என்று அழைக்கப்பட்டார். இவரது தந்தை தொழில் நிமித்தம் மலேசியா சென்றிருந்தார். மலேசியா சென்றவர் நாடு திரும்பவில்லை. தந்தை சந்திப்பதற்காக சுபைர் இளங்கீரன் 19 வயதில் மலேசியா சென்றார். மலேசியாவில் பேச்சாளர் சுபைர் இளங்கீரன் எழுத்தாளரானார். மலேசியாவில் வாராந்த பத்திரிகையான 'இனமணி'  இதழுக்கு ஆசிரியராக 1947-1951வரை ஆசிரியராக பணியாற்றினார். இனமணி இதழில் இளங்கீரன் எனும் புனைப்பெயரில் எழுதினார். 'இனமணி' இதழில் வெள்ளையர்களுக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்தார்.ஆதலால் 24 மணிநேரத்தில் நாடு கடத்தப்பட்டார். 

சுபைர் இளங்கீரன், யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த அப்துஸ் ஸமத்-பாத்திமா தம்பதியினரின் மகள் துல்ஹானுன் (சபியா) என்பவரை திருமணம் செய்தார். சுபைர் இளங்கீரன்-சபியா தம்பதியினருக்கு முத்தான இரண்டு ஆண்பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் பிறந்தனர். மூத்தவர்  மீலாத் கீரன் ஆவார்.  மீலாத் கீரன் ரூhபவாஹினியில் நிகழ்ச்சி தயரி;ப்பாளராக பணியாற்றினார். மீலாத் கீரன் ஓரு நல்ல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமாவார். மீலாத் கீரன் இலங்கை வங்கியில் முகாமையாளராக பணியாற்றினார்.

சுபைர் இளங்கீரன் தனது மனைவி சபியா, 6 மாத குழந்தையான மீலாத் கீரனுடன் இலங்கையில் இருந்து சென்னை சென்று திருவள்ளிக்கேணியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து சுமார் ஒன்றரை வருடங்கள் வசித்தார். இஸ்மாயில் பாய்க்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.  இந்த வீட்டின் மேல் மாடியில் இஸ்மாயில் பாய், சுபைர் இளங்கீரனுடன் கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன் போன்றோர் அடிக்கடி சந்தித்து இலக்கிய விடயமாக பேசுவார்கள். சுபைர் இளங்கீரன் அந்த காலத்தில் தி.மு.க.வுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். 

1965 – 1970 வரை சுபைர் இளங்கீரன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடான 'தொழிலாளி' பத்திரிகைக்கு ஆசிரியராக பணியாற்றினார். இந்த கட்டத்தில் 1969 இல்  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒரு கருத்தரங்கு விடயமாக அல்பேனியா சென்றார். சுபைர் இளங்கீரன் ஜனவேகம் பத்திரிகையிலும் 1973இல் இருந்து பல வருடங்கள் ஆசிரியராக பணியாற்றினார். 

சுபைர் இளங்கீரனுக்கு முன் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லிம் இலக்கியவாதிகள் அனைவருமே புலவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே காவியங்களும் செய்யுள்களுமே இயற்றினர். ஆனால் இளங்கீரன் முதல் உரைநடை இலக்கிய கர்த்தாவாக மதிக்கப்படுகிறார். அவரது பங்களிப்புகள் பலதுறைகளில் வியாபித்துள்ளன. நாவல், சிறுகதை, நாடகம், இலக்கிய விமர்சனம், இலக்கியக் கட்டுரைகள் என்பவற்றில் மட்டுமல்லாமல் பத்திரிகையாளராகவும் சேவையாற்றியிருக்கிறார். அரசியல், பொருளாதாரம், சரித்திரம், சமூகப் பிரச்சினைகள் மதம் சார்ந்த கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவரதுபங்களிப்புகள் தனி ஒரு சமூகத்துக்கென்றோ பிரதேசத்திற்கென்றோ அமையாமல் தேசம் தழுவியதாகவும், மனிதசமூகம் தழுவியதாகவும் அமைந்தன.

அவரது இலக்கியப் படைப்புகள் இலங்கையில் மட்டுமல்லாமல் மலேசியா, தமிழ்நாடு முழுவதும் மேலோங்கிக் காணப்பட்டன.

சுபைர் இளங்கீரன் 1950 தொடக்கம் 1978 வரை சுமார் 25 நாவல்கள் எழுதியுள்ளார். 1954 இல் சுபைர் இளங்கீரன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமான போது அதன் செயற்குழு உறுப்பினராக இருந்து சங்கத்தின் கொள்கைகளை நாடளாவிய ரீதியில் பரவச்செய்ததில் பெரும் பங்களிப்பு ஆற்றினார்.;; இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாற்று நூலையும் வெளியிட்டார். ஈழத்து இலக்கியத்தில் நாவல் இலக்கிய முன்னோடி சுபைர் இளங்கீரனுடைய பங்களிப்பு அளப்பரியது என்றால் மிகையாகாது. சுபைர் இளங்கீரன் 1982இல் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு 'மகாகவி பாரதி' என்னும் நாடகத்தை எழுதி தயாரித்து மேடையேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமமாகும்.   

சுபைர் இளங்கீரன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, தமிழ் சேவை, கல்விச் சேவையிலும் நூற்றுக்கணக்கான கதைகள், நாடகங்கள், உரைச்சித்திரங்கள் எழுதியுள்ளார். 

சுபைர் இளங்கீரன் எழுதிய வானொலி நாடகங்களில் 'வாழப் பிறந்தவர்கள்' என்னும் நாடகம் இரண்டரை வருடங்கள் தொடராக ஒலிபரப்பப்பட்டதும் 'மனித புராணம்' ஒரு வருடத்திற்கு மேலாக தொடராக ஒலிபரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இளங்கீரன் படைத்த நாவல்களில் பதினைந்து நாவல்கள் இந்திய மண்வளம் கமழ்பவை அவையாவன.1. வண்ணக்குமரி 2. நீதிபதி 3. பைத்தியக்காரி 4. பொற்கூண்டு 5. மீண்டும் வந்தாள் 6. மரணக்குழி 7. காதலன் 8. ஒரே அணைப்பு 9. காதல் உலகிலே 10. கலாராணி 11. அழகுரோஜா 12. பட்டினித் தோட்டம் 13. ஆணும் பெண்ணும் 14. எதிர்பார்த்த இரவு 15. மனிதனைப் பார் ஈழத்து மண்வளம் கமழும் நாவல்கள் பத்தாகும் அவையாவன 1. புயல் அடங்குமா 2. சொர்க்கம் எங்கே? 3. தென்றலும் புயலும் 4. மனிதர்கள் 5. நீதியே நீ கேள் 6. மண்ணில் விளைந்தவர்கள் 7. இங்கிருந்து எங்கே? 8. காலம் மாறுகிறது 9. அவளுக்கு ஒரு வேலை வேண்டும் 10. அன்னை அழைத்தாள்.

இந்தியாவில் சுபைர் இளங்கீரனால் எழுதி வெளியிட்ட நாவலான 'கலாராணி' யை தழுவி சினிமா படம் எடுப்பதற்காக சேலத்தில் உள்ள மொடேன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் சுபைர் இளங்கீரனை சந்தித்து பேசினர். சுபைர் இளங்கீரன் கலாராணிக்கான திரைக்கதை வசனம் எழுதிக்கொடுத்த போதும் ஏதோ காரணத்தினால் படம் வெளிவரவில்லை. 

அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் நாடகங்களிலும் வாழ்க்கைப் போராட்டமே சித்தரிக்கப்படுகிறது. இளமையிலே வறுமையின் பிடியில் சிக்குண்டு சீரழிந்த வாழ்வு அவரைப் புடம்போட்ட தங்கமாக்கியது. சமுதாhயத்தில் அடக்கி ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார். அவரைச் சமதர்ம தத்துவம் தனக்குள்ளாக்கிக் கொண்டது. அதனால் அவர் சமதர்மத்தை வளர்த்துச் சென்றார். பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் சமதர்மமே மிளிர்ந்தது. இந்த நாட்டிலே அவர் ஒரு மாற்றத்தை மறு மலர்ச்சியை மக்கள் எண்ணங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்த எண்ணம் கொண்டிருக்கின்றமை அவரது படைப்புகளில் நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

சுபைர் இளங்கீரன் பேராதனை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகிய  பல்கலைக்கழகங்களிலும் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவிலும் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும் சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலக்கியத்துறையில் மட்டுமல்லாமல் சமுதாய வாழ்விலும் அவர் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து யாழ்ப்பாண முஸ்லிம் வாலிபர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றார். சமூக விவகாரங்களிலும் பொது வேலைகளிலும் தீவிர பங்கேற்றார். யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்துள்ள குளத்தடி பள்ளிவாசல் (சின்னப் பள்ளிவாசல்) சீர்திருத்த சபையின் செயலாளராகக் கடமையாற்றி பெரியகுளம், சின்னக்குளம் ஆகியவற்றைப் புனரமைத்தார். இவரது இலக்கியப் பணியிலான வெள்ளிவிழா 1975 இல் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெற்றது. இரு விழாக்களிலும் அவருக்கு பொற்கிழி வழங்கிக் கௌரவித்தனர்.

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை மக்களுக்கே பெருமை சேர்த்த கலாபூஷணம். சுபைர் இளங்கீரனை எவராலும் மறக்க முடியாது. 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி சுபைர் இளங்கீரன் தனது 70 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் எம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவரது இலக்கியப் படைப்புகள் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர் விட்டுச் சென்ற இலக்கியப் பயணத்தை தொட்டுத் தொடர்ந்து செல்வதற்கு எமது சமுதாய இலக்கிய வாதிகள் முன்வர வேண்டும். சுபைர் இளங்கீரன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்திற்கு நுழைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்

1 கருத்துரைகள்:

Post a comment