April 28, 2019

தேவாலயத்திற்கு செல்லவேண்டாம் என தடுப்பதற்கு, தந்தையாருக்கு காரணங்கள் இருந்திருக்குமல்லவா...?

“தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று வாய்மூலக்கதைகள் சென்று கொண்டிருக்கின்றன” என்ற தந்தையின் கருத்தினை வைத்து முழு நாட்டையும் குழப்புவதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்த தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, எனது மனச்சாட்சிக்கும் ஆண்டவருக்கும் உண்மை தெரியும் என்று கருதுகின்றேன். யாருக்கும் பதில் கூறாது விட்டாலும் ஆண்டவருக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி;:- உங்களுடைய தந்தையார் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் உங்களை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார்?

பதில்:- 'தகவல் தெரிவித்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது' என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உள்ளது. அவ்வாறான நிலைமையில் தான் நான் உள்ளேன்.

கேள்வி:- உங்களை தேவாலயத்திற்கு செல்லவேண்டாம் என்று தடுப்பதற்கு தந்தையாருக்கு வலுவான காரணங்கள் இருந்திருக்குமல்லவா?

பதில்:- 20 ஆம் திகதி சனிக்கிழமை நான் பதுளையில் இருந்தேன். இரவு 11மணியளவில் தந்தையாரை தொடர்பு கொண்டேன். அவருடைய நலன்களை விசாரித்த தருணத்தில் நாளை உயிர்த்த ஞாயிறு என்றும் கூறினேன். அதன்போது, தான் தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று வாய்மூலக்கதைகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே நாளை எங்கும் செல்ல வேண்டாம் என்றார். சான் சரி என்று சொல்லிவிட்டு தொலைபேசி தொடர்பினை நிறுத்தினேன்.

கேள்வி:- வாய்மூலக்கதை செல்கின்றது என்றாலும் யார் சொன்னார்கள் என்று கேட்டிருக்கலாம் அல்லவா?

பதில்:- ஆம், நான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. எனது தந்தையார் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ச்சியாக சிகிச்சை பெறுகின்றார். முதிர்ந்த வயது. இவற்றின் காரணமாக ஏதோவொரு அச்சத்தில் கூறுகின்றார் என்று தான் கருதினேன். யார் கூறினார்கள் என்று கூட நான் கேட்கவுமில்லை. அதனை பெரிய விடயமாக கொள்ளவுமில்லை. இவருடைய உளறலை வைத்து நாட்டு மக்களை குழப்ப வேண்டுமா என்றுதான் நினைத்தேன்.

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் உயிர்த்த ஞாயிறன்று எந்த தேவாலயத்திற்கும் செல்லவில்லையா?

பதில்:- இல்லை. நான் பதுளை சென்மேரிஸ் தேவாலயத்திற்குச் சென்றேன். அங்கு அருட்தந்தை ஜுட் இருக்கின்றார். நீங்கள் தேவையென்றால் அவரிடத்தில் உறுதி செய்துகொள்ள முடியும். அங்கு சென்றபோது தான் கொழும்பிலிருந்து எனக்கு குண்டுவெடிப்பு சம்பந்தமான தகவல் கிடைத்தது.

அச்சமயத்தில் உடனடியாக நான் பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொண்டு சென்மேரிஸ் தேவாலயம் உள்ளிட்ட அனைத்தையும் சோதனையிடுமாறு கோரிவிட்டு அவசரமாக கொழும்பு நோக்கி விரைந்தேன்.

கேள்வி:- தந்தை கூறியது போன்றே குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றதால் உங்களுடைய தந்தையிடத்தில் அந்த விடயத்தினை யார் கூறினார்கள் என்று மீண்டும் கேட்டிருக்கவில்லையா?

பதில்:- நான் அவரிடத்தில் கேட்டேன். அப்போதும் அவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் தான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இருப்பினும் அவர் அளித்த பதில் மூலம் அவருடைய பழைய பொலிஸ் நண்பர்கள் யாராவது கூறியிருப்பார்கள் என்பதை தான் என்னால் உணர முடிந்தது. அச்சமயத்தில் உடனடியாக நான் பிரதமரை சந்திக்கச் சென்றேன். அவரிடத்தில் நடந்தவற்றைக் கூறினேன். எனது தந்தை இந்த விடயத்தினை கூறியபோது நான் பொருட்படுத்தியிருக்கவில்லை என்று குறிப்பிட்டேன்.

அதன்போது தான் ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்புத்துறை அறிக்கையொன்றை பிரதமர் எனக்கு காண்பித்தார். பின்னர் அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு ஊடகவியலாளர் மாநாட்டினை கூட்டினேன்.

அச்சமயத்தில் குறித்த அறிக்கையை ஊடகங்களிடத்தில் காண்பித்த போது தான் அந்த அறிக்கை உங்களுக்கு கிடைக்கவில்லையா என்று ஊடக நண்பர்கள் கேட்டார்கள். அப்போது, நான் அறிக்கையை விடவும் எனது தந்தையார் எனக்கு கூறிய விடயத்தினை பகிரங்கப்படுத்தினேன். அத்துடன் சிகிச்சை பெறும் ஒருவர் இந்த விடயத்தினை அறிந்துள்ளார். அவருக்கு அவருடைய பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவித்திருக்கலாம் என்பது எனது கணிப்பு என்பதால் பொலிஸ் தரப்பும், பாதுகாப்புத்தரப்பும் அறிந்துள்ள விடயத்தினை முன்கூட்டியே ஏன் கூறவில்லை என்பதை வெளிப்படுத்தவே விளைந்தேன். 

ஆனால் அதனைப் பயன்படுத்தி என்மீது சேறடித்து அரசியல் இலாபமீட்டும் செயற்பாடு தான் நடைபெறுகின்றது.

கேள்வி:- ஆனால் அமைச்சர் ஹரீனை தந்தை காப்பாற்றிவிட்டார். அப்பாவி மக்கள் இறந்து விட்டார்கள் என்ற விமர்சனம் தற்போது அதிகரித்திருக்கின்றதே?

பதில்:- ஆம், அரசியலில் சுயலாபம் தேடுபவர்களின் பிரசாரத்தால் மக்களும் அதனை நம்புகின்றனர். அதேபோன்று கார்தினல் அவர்களும் என்மீது குற்றச்சாட்டினை வைத்திருந்தார்.

பின்னர் நான் அவருடன் உரையாடி அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தினேன். குறித்த தினமன்று ஏற்பட்ட இழப்புகளால் அவர் கொண்டிருந்த அதிர்ச்சி மற்றும் மனஅழுத்தம் காரணமாக அவ்வாறு கூறிவிட்டதாக கூறியதோடு தான் அதனை திருத்துவதாகவும் கார்தினல் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் சேறடித்தாகிவிட்டது. எனது மனச்சாட்சிக்கும் ஆண்டவருக்கும் உண்மை தெரியும் என்று கருதுகின்றேன். யாருக்கும் பதில் கூறாது விட்டாலும் ஆண்டவருக்கு பதில் கூறியே ஆகவேண்டும்.

கேள்வி:- விசேட பிரதிநிதிகளின் பாதுகாப்பினை வலுப்படுத்துமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் உங்களுடைய பாதுகாப்பு தரப்பிற்கு கிடைக்கவில்லையா?

பதில்:- இல்லை. பிரபுக்களின் பாதுகாப்பினைக் கொண்டவர்களுக்கு மட்டும் தான் அந்த அறிவுறுத்தல் கிடைத்திருந்தது. எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கவில்லை. தேவையானால் அவர்களிடத்திலும் நீங்கள் விசாரிக்க முடியும்.

கேள்வி:- அரசியல் ரீதியாக காணப்படுகின்ற முரண்பாடுகள் தேசிய பாதுகாப்பு வலுவிழப்பதற்கு காரணமாகியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில்:- ஆம், ஆனாலும் ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தபோதும் ஜனாதிபதி, பிரதமருக்கு தெரிவிக்கப்படாது பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்படாது விடப்பட்டது ஏன்? இதற்கான பொறுப்பினை யார் ஏற்பது என்பது பிரதான விடயமாகின்றது.

அடுத்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையை விடவும் அதியுச்ச பாதுகாப்பு காணப்பட்ட அமெரிக்கா, கனடா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்குள் கூட பிரவேசித்தவர்களாகின்றனர். அவர்களுக்கு தீவிரவாதம் மட்டுமே தெரிந்தவொரு மொழியாகின்றது. மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்திருந்தாலோ பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஷ இருந்திருந்தாலோ இந்த தீவிரவாத அமைப்பினை தடுத்திருக்கலாம் என்ற நிலைப்பாட்டினைக் கொள்வது தவறாகும்.

தனி ஈழத்திற்காக இலங்கையின் ஒரு பகுதியை மையப்படுத்திக்கொண்டு போராடிய விடுதலைப்புலிகளுடன் மோதல்களை நடத்துவதை விடவும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் மோதுவது என்பது இலகுவான விடயமல்ல. ஆயுத இயக்கமாக இல்லாது மதத்தின் பின்னால் இருந்து இயங்கும் அமைப்பாகும். இலகுவாக அடையாளம் காண்பது கடினம். ஆகவே உயிர்நீத்தவர்களுக்காகவும், இழப்பீடுகளுக்காவும் கவலை அடைவதை விடவும் இந்த சம்பவத்தினை பயன்படுத்தியாவது அரசாங்கத்தினை கவிழ்க்க முடியும் எனக் கருதுவது கவலைக்குரிய விடயமாகும்.

நேர்ணால்:- ஆர்.ராம்

0 கருத்துரைகள்:

Post a Comment