Header Ads



தற்கொலை தாரி மொஹம்மட் சஹ்ரான் பற்றி, பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

 நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க தலைமையிலான குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

இந் நிலையில் இந்த தொடர்  தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக ,  ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான  தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக  பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில்  பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில்  சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட தெஹிவளை பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில்  வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர வீரகேசரிக்கு உறுதி செய்தார்.

இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  சர்வதேச  பொலிசார் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

 வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றிய வேனும், சோதனை செய்த வீடும்

 இதேவேளை கொழும்பு தாக்குதல்களுக்கு வெடிபொருட்களை எடுத்து வந்ததாக கூறபப்டும் வேனை நேற்று முன் தினமே வெள்ளவத்தை பொலிசார், தமது பொலிச் பிரிவின் இராமகிருஷ்ண மிஷன் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.  இந் நிலையில்  அந்த வேனின் சாரதி கொடுத்த வாக்கு மூலத்தின் படி, ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடாத்த வந்த  தற்கொலைதாரிகளில் ஒருவர்  தங்கியிருந்து தாக்குதல்களை திட்டமிட்டு தயாரானதாக கூறப்படும் பாணந்துறை, சரிக்காமுல்ல பகுதியைச் சேர்ந்த  வீடு கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளரையும் வெள்ளவத்தை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் ஷெங்ரில்லா தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி புகைப்படத்தை காட்டி  விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கே தான் வீட்டை வாடகைக்கு கொடுத்ததாகவும், வாடகைக்கு பெறும் போது உயர்ந்த மெல்லிய தோற்றம் உடைய மற்றொருவரும்  உடன் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந் நிலையில் அந்த வீட்டில் இருந்து ஷெங்ரில்லா தாக்குதலுக்கு பயன்படுத்தி வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில திரவியங்கள்,  குண்டு கையாளும் திட்டம் அடங்கிய ஆவணம்,  கையடக்கத் தொலைபேசி பாகங்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் நேற்று அவ்வீடு அரச இரசாயன பகுப்பாய்வாளரின் சோதனைக்குட்பட்டதுடன்  தற்போது அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பிரதான சூத்திரதாரி

 இந் நிலையில் ஷெங்ரில்ல ஹோட்டலில் இரு தர்கொலை குண்டுதற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில்,  அவர்களில் மொஹம்மட் சஹ்ரான் எனும் நபரே தொடர் குண்டுவெடிப்புக்களை நெறிப்படுத்திய சூத்திரதாரி என இதுவரையிலான விசாரணைகளை வைத்து பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கின்றது. அவர் தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவர் எனும் பெயரில் தோன்றியவர் எனவும்  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந் நிலையில் இவர் தொடர்பிலேயே கடந்த 11 ஆம் திகதி தேசிய புலனயவுப் பிரிவு இந்த தாக்குதல் திட்டம் குறித்து  எச்சரிந்திருந்தது. எனினும்  அந்த உளவுத்துறை எச்சரிக்கை பொலிஸ் மா அதிபர் ஊடாக விஷேட பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்கவுக்கு அனுப்பட்டு  அதிதிகளின் பாதுகாப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்தது.

 குறித்த உளவுத்துறை அறிக்கையில் சஹ்ரானின் கீழ் அவரது குழ்வினர் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தககுதல் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.